நோபல் 2018: மருத்துவம் - புற்றுநோயிலிருந்து மீட்கும் புதிய பாதை!

By முகமது ஹுசைன்

அபரிமிதமாக வளர்ந்த விஞ்ஞானம் மருத்துவத் துறையில், பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இருந்தும், உயிர்கொல்லி நோய்கள் உட்பட எத்தனையோ நோய்களுக்கு இன்றும் சிகிச்சையில்லை என்பதே உண்மை. அதிலும், புற்றுநோய்க்கு இன்றும் நிரந்தரத் தீர்வு இல்லை. புற்றுநோய் உயிரை எடுப்பதுடன், தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தருகிறது.

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையில் முற்றிலும் புதுவகையான வழிமுறையைக் கண்டறிந்த ஜேம்ஸ் அலிசன், டசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு, இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு  அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாளை நீட்டித்த புரதம்

ஜேம்ஸ் அலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர். டசுக்கு ஹோன்ஜோ ஜப்பானைச் சேர்ந்தவர். அவர் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் புரதச் சத்தைப் பல்கிப் பெருகச் செய்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறையை வலுவாக்கி, அதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை எதிர்த்து அழிப்பது எப்படி என்பதை இந்த விஞ்ஞானிகள் மருத்துவ உலகுக்குக் காட்டினர். அவர்களின் இந்த வழிமுறையை அடியொற்றி பல சிகிச்சைமுறைகள் தோன்றின. அவை புற்றுநோயாளிகளின் வலியைக் குறைப்பதுடன், அவர்களின் வாழ்நாளையும் நீட்டித்தன.

புற்றுநோயை எதிர்க்கும் டி-செல்கள்

நான்கு நபர்கள் அமரக்கூடிய காரில் நூறு பேர் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. புற்றுநோய் என்பது அத்தகைய ஒன்றுதான். இதில் ஒரே இடத்தில், நூறு என்பது ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம் என்று செல்கள் பெருகி, தீராத வேதனை அளித்து, இறுதியில் நம் உயிரைப் பறிக்கும்.

ஆரம்பக்கட்ட புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன. கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற அந்த சிகிச்சை முறைகளால் புற்றுநோயாளிகள் படும் அவஸ்தை சொல்லில் அடங்காதது. மேலும், இந்த சிகிச்சைமுறைகள் புற்றுநோய் செல்களை மட்டும் அழிப்பதில்லை. நம் உடலில் உள்ள நல்ல செல்களையும் சேர்த்தே அழிக்கின்றன.

பொதுவாக, நம் உடலுக்குள் ஏதேனும் அந்நியப் பொருள் தோன்றினாலோ நுழைந்தாலோ நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள், அவற்றுக்கு எதிராகப் போரிட்டு அழிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் செல்கள் ‘டி - செல்கள்’ எனப்படுகின்றன. இந்த டி-செல்கள் உடலில் இயற்கையாகவே தோன்றினாலும், அவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதில்லை. டி-செல்களின் போராடும் தன்மையைத் தடுக்கும் விதமாகப் பல தடைகள் அந்த டி-செல்களில் உள்ளன.

அத்தகைய தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை அகற்றுவது குறித்தும்தான் அலிசனும் ஹோன்ஜோவும் தனித்தனியாக வெவ்வேறு நாடுகளில் இருந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களின் ஆராய்ச்சிக்கு முன்புவரை, புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிப்பதாகவே இருந்தது.

நம்பிக்கையளிக்கும் விஞ்ஞானிகள்

‘நம் உடலில் இருக்கும் டி-செல்களாலேயே புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் எனும்போது, புற்றுநோய் செல்களை நாம் ஏன் அழிக்க வேண்டும்?’ என்று இவர்களுக்குள் எழுந்த கேள்வியே, இவர்களது ஆராய்ச்சியின் தொடக்கப் புள்ளி. டி-செல்லில் இருந்த  ‘சி.டி.எல்.ஏ.-4’ (CTLA-4) எனும் தடையை அலிசன் கண்டறிந்தார். அந்தத் தடையைக் களையும் வழிமுறையையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து அதை மருத்துவ உலகுக்கு அவர் நிரூபித்துக் காட்டினார். இது நடந்தது 1997. பிறகு 2010-ல் மனிதர்களிடம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பே 1992-ல் டி-செல்லில் இருந்த ‘பி.டி-1’ (PD-1) எனும் தடையை ஹோன்ஜோ கண்டறிந்தார். எனினும், 2012-ல்தான், இவரது ஆய்வு மனிதர்களிடையே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இன்று மருத்துவ உலகம் இந்த இரண்டு முறைகளையும் ஒருங்கே பயன்படுத்துகிறது. CTLA-4, PD-1 போன்று வேறு என்னென்ன தடைகள் உள்ளன என்பதைக் கண்டறியும் முயற்சியில் இன்று ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் ஈடுபட்டுள்ளது.

ஆத்ம திருப்தியே விருது

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் அலிசன் நியூயார்க்கில் இருந்தார். நோய் எதிர்ப்பு இயலில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக அவர் அங்கு வந்திருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு அவருடைய மகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவரை எழுப்பிவிட்டது. தகவலைச் சொன்னார் மகன். தூக்கக் கலக்கத்தில் இருந்தவர், ‘சரி’ என்று சொல்லியபடி மீண்டும் தூங்கிவிட்டார்.

6.30 மணிக்கு அவரது அறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. பதறியடித்து எழுந்து கதவைத் திறந்தால், அவரது அறைக்கு முன்பாக, அந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அனைவரும் ஷாம்பெயின் பாட்டிலைக் கையில் ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தனர். திறக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டிலிலிருந்து கொப்பளித்த நுரை அவரின் மீது பீச்சியடிக்கப்பட்டது.

எந்தத் திட்டமிடலுமற்ற ஒரு கொண்டாட்டம் அங்கு அரங்கேறியது. அந்தக் கொண்டாட்டத்தின் இடையில்தான் நோபல் கமிட்டியிடமிருந்து அதிகாரப்பூர்வத் தகவல் அவருக்கு வந்தது. உடனடியாகச் செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு பேட்டி எடுத்தனர்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இன்னும் விடியவே இல்லை. என் கண்களில் இன்னும் தூக்கம் மிச்சமுள்ளது. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள், சக மனிதனின் உயிரைக் காப்பாற்றுகிறது என்பதை நினைக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியைவிட வேறு என்ன பெரிய மகிழ்ச்சியும் பெருமையும் எனக்குக் கிடைத்து விடப்போகிறது?” என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டு, அலிசன் தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டார்.

அரசு மருத்துவமனையில் சாமானிய மனிதர் முதல் உலகின் அதிநவீன மருத்துவமனையில் ஆப்பிள் நிறுவனர்வரைப் பலரைக் காவு வாங்கிய இந்தப் புற்றுநோய், உலகில் இல்லாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை எனும் நம்பிக்கையை இவர்கள்  அளித்துள்ளனர். நம்புவோம்.

நம்பிக்கைதானே  நோய் தீர்க்கும் முதல் மருந்து!

தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 mins ago

இணைப்பிதழ்கள்

18 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்