இனிப்பு தேசம் 13: நல்வாழ்க்கை வரைய நீல வண்ணம்!

By கு.சிவராமன்

 

மா

ம்பழம் ஜூன், ஜூலை மாசத்து ‘பேயிங் கெஸ்ட்!’. மற்றவர்கள் அதைச் சப்புக்கொட்டிச் சாப்பிட, இனிப்பு நோயர் சிலர் ஏக்கத்துடன் அதைப் பார்த்துக்கொள்வார்கள்; சிலர் யாரும் பார்க்காத வேளையில், இரண்டு துண்டு என்ன செய்துவிடப் போகுது எனத் தினம் இரண்டாய், சாப்பிட்டுவிட்டு எங்கே ரத்தச் சர்க்கரை எகிறிக்காட்டிடுமோ என சோதனை செய்யவே போகாமல் ஏமாற்றுவார்கள்.

நீரிழிவு நோயாளிகள் பழம் சாப்பிடலாமா? என்ன பழம், எந்த அளவில் சாப்பிடலாம்?

பழங்களுக்கு ‘பழம்’ விடலாமா?

பழங்கள் உலகின் ஒவ்வொரு மரபிலும் கொண்டாடப்பட்டவை. ஆப்பிளும் செர்ரியும் அத்தியும் கிட்டத்தட்ட அழகு, ஆற்றல், காமம், குழந்தைப்பேறு, மரணமின்மை ஆகியவற்றின் அடையாளங்களாக கிரேக்கத்திலும் சீனத்திலும் ஜப்பானிலும் நெடுங்காலம் கொண்டாடப்பட்டவை. ஆதாமின் ஆப்பிளில் இருந்து, சிவபெருமானின் மாம்பழம்வரை மதங்களில் பின்னப்பட்ட பழங்கள் உலகெங்கும் ஏராளம். சாகாவரம் கொண்டது நெல்லிக்கனி என்றும் ‘தாயின் கருப்பை மாதிரிப்பா, ஒவ்வொரு கனியும்’ என்றும் தமிழ் இலக்கியங்களில் பழங்கள் குறித்துப் பரவசப்பட்ட வரிகள் ஏராளம்.

பழங்களில் பெரும்பாலும் நீர், கொஞ்சம் நார், கூடவே கனிமங்கள், உப்புக்கள், மிக நுண்ணிய மருத்துவக் குணமுடைய வேதிச்சத்துக்கள், உடல் எதிர்ப்பாற்றலை, குறிப்பாக செல் அழிவைத் தடுக்கும் நிறமிச் சத்துக்கள் உண்டு. ஸ்கூல் வாசலில் கூறு போட்டு விற்கப்படும் இலந்தை முதல் ஏரோப்ளேனில் வந்து இறங்கும் ஆப்பிள்வரை அத்தனை பழங்களிலும் நல்லது உண்டுதான். இதில் நீரிழிவு நோயாளி ‘ஹைகிளைசிமிக்’ தன்மை உள்ள (ரத்தத்தில் சர்க்கரையை வேகமாக அளிக்கும் உணவு) பழங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். பங்கனபள்ளி மாம்பழமும் பண்ருட்டி பலாப்பழமும் அந்த வகையறாக்களே.

எப்போது சாப்பிடலாம்?

நல்லா ஒரு கட்டு கட்டிட்டு, கடைசியாகப் பழம் சாப்பிடுவது ஒருபோதும் நல்லதல்ல. ‘டெஸ்ஸெர்ட்’ (Dessert) எனப் பழத்தை, கடைசியில் சாப்பிடச் சொன்னது ஆங்கிலேயப் பழக்கம். நம் ஆசாரக்கோவைப் பழக்கமோ, பழம்தான் முதலில் பரிமாறப்பட வேண்டும் என்கிறது. கொய்யாவோ நெல்லியோ ஆப்பிளோ பப்பாளியோ சாப்பாட்டின் முதலில் பழத்துண்டுகளைச் சாப்பிட வேண்டும். 11 மணி, 3 மணி இடைக்காலப் பசி தீர்க்கவும் பழத்துண்டுகள் மிகச் சரியான தேர்வு.

தூங்கப்போகும்போது, ‘காலையில் அப்பத்தான் மலம் கழியும்’ என வாழைப்பழம் சாப்பிடுவது, ஒருபோதும் இனிப்பு நோயருக்கு நல்லதல்ல. அதுவே காலையில், உணவுக்கு முன்னர் சின்ன சைஸ் நாருள்ள மலைவாழை அல்லது நெல்லை மாவட்ட நாட்டுவாழை சாப்பிட்டுவிட்டு, திட உணவில் ஒரு இட்லியைக் குறைத்துக்கொள்வது கலோரி கணக்குக்கும் சர்க்கரைக் கட்டுப்பாட்டுக்கும் நல்லது.

பேரீச்சை, காய்ந்த திராட்சை முதலான உலர் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. தக்காளி, வெள்ளரி இவை காய்களாகப் பார்க்கப்பட்டாலும் கனிகளே. இரண்டையும் அடிக்கடி சேர்ப்பது நல்லது. ஆப்பிளின் தோலில் உள்ள மெழுகுப் பூச்சை நீக்கியாக வேண்டும். பதிலாகத் தோலையே நீக்குவது பலனில் பாதியைக் குறைக்கும். கொய்யாவில் மிளகாய்ப் பொடியைத் தூவுவது கூடாது. ஓட்டலில் பழத் துண்டுகள் வாங்கும்போது சர்க்கரை சுவையூட்டி சேர்ப்பது வழக்கம். அதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும்.

என்ன அளவில்?

ஒரு நாள் உணவுத் தேவையில் 30 சதவீதம்வரை பழங்கள் இருக்கலாம். மா- பலா- வாழை நீங்கலாக, பிற பழங்களில் குறிப்பாக அதிகம் கனிந்திராத கொய்யா, விதையுள்ள நாட்டுப் பப்பாளி, அதிகம் இனிக்காத புளிப்பு மாதுளை, விதையுள்ள பன்னீர் திராட்சை, அதிகம் நார் உள்ள கமலா ஆரஞ்சு, நாவல் என இவற்றில் எது கிடைக்கிறதோ காலையில் இரண்டு கப், மதியம் ஒன்றரை கப் சாப்பிடலாம். மீதமுள்ள பசிக்கு புரதமும் கார்போஹைட்ரேட்டும் கொடுக்க அரிசிச் சோறு, சிறுதானியச் சோறு அல்லது புலால் அளவோடு இருக்கலாம். உங்களுக்கான பழங்களின் அளவு, தேர்வு ஆகியவற்றை உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துத் தீர்மானிப்பது மிக முக்கியம்.

பழச்சாறு, ஸ்மூத்தி, பழ கேக் எனப் பழங்களைப் பாடாய்ப்படுத்தி தயார் நிலையில் விற்கப்படும் வகைகளை ஒருபோதும் இனிப்பு நோயர் தேடக் கூடாது. வெள்ளைச் சர்க்கரையையும் பெயர் தெரியாத ரசாயனங்களையும் கொட்டிக் குவித்துத் தயார் செய்யப்படும் அவை இனிப்பு நோயை மட்டுமல்லாது மற்ற நோய்களையும் சேர்த்துக் கொடுக்கும். பக்கத்தில் விளையும் கனிகளே உடலுக்கும் நல்லது சூழலுக்கும் நல்லது. பன்னீர் திராட்சை தருவதை, கலிஃபோர்னியா திராட்சை தருவதில்லை. உளுந்தூர்பேட்டை கொய்யா கொடுப்பதை, மடகாஸ்கர் ஆரஞ்சு தராது. பாபநாசம் நெல்லிக்காய் தருவதை, நியூசிலாந்து கிவி கொடுத்திடாது. திருவள்ளூர் பப்பாளி தருவதை, வாஷிங்டன் ஆப்பிள் தராது.

நாவில் தவழட்டும் நாவல்

‘ஸ்ட்ராபெர்ரி பெண்ணே!’ என்று இளைஞர்கள் பாடுகிறார்கள். பெண்களும் ஸ்ட்ராபெர்ரி போலவே இருக்க ஆசைப்படுகிறார்கள். நாம் அங்கே இடையில் புகுந்து, ‘நாவல் பழம் ஸ்ட்ராபெர்ரியைவிட எவ்வளவு உசத்தி தெரியுமா?’ என உரக்கச் சொல்லியாக வேண்டும். நம் நாட்டின் பழைய பெயர் ‘நாவல் நிலம்’ என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த நாவல் பழம் சர்க்கரைக்கு மிகச் சிறப்பானது. அதன் தோலில் உள்ள ஆந்தோசயனின்களும் சரி, அதன் கொட்டையின் மேல் தோலில் உள்ள டானின்களும் சரி, ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதுடன், சர்க்கரையின் பிற பிற்கால நோய்கள் வராது காக்கும் டானிக்கும்கூட. இதெல்லாம் ஸ்ட்ராபெர்ரியில் கிடையாது. இந்த மாசம் மட்டும்தான் நாவல் எக்கச்சக்கமாக விளையும். இனிப்பு நோயர் இதைச் சாப்பிடுவதுடன், அவரவர் குழந்தைக்கும் கொடுத்து, அவர்கள் நாவில் தெரியும் அந்த நீல வண்ணத்தில் மகிழ்ந்து சிரியுங்கள். நாளைய இந்தியா நிச்சயம் இனிப்பு தேசமாக இராது!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்