சின்னஞ்சிறு கதை: காட்டுக்குள்ளே கச்சேரி!

By என்.கெளரி

அந்தப் பையன் பெயர் நுனோ. அவன் தன்னுடைய அப்பாவுடன் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் திடீரென்று அவனுடைய தந்தை இறந்துவிட்டார். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனிடம் ஒரு பூனையும் நாயும் இருந்தன. கொஞ்சம் நிலமும் சில ஆரஞ்சு மரங்களும் இருந்தன.

இவற்றில் நாயைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்தான். நிலத்தையும் ஆரஞ்சு மரங்களையும் விற்றுவிட்டான். அவனுக்குக் கிடைத்த மொத்தப் பணத்தையும் வைத்து ஒரு வயலின் வாங்கினான். அவன் வாழ்நாளில் அதிகமாக ஆசைப்பட்டது வயலினாகத்தான் இருக்கும். அதுவும் இந்த நேரத்தில் அவனுக்கு அது அதிகம் தேவைப்பட்டது.

அவனுடைய அப்பா இருக்கும்போது தன்னுடைய எல்லாக் கதைகளையும் அவரிடம் சொல்ல முடிந்தது. ஆனால், இப்போது சொல்வதற்கு வயலின் மட்டுமே இருந்தது. வயலின் அவனிடம் பதில் சொன்னபோது, அது உலகின் இனிமையான இசையாகப் பெருகியது.

சில நாட்களுக்குப் பிறகு, அரசனின் செம்மறியாடுகளை மேய்க்கும் வேலைக்குப் போக முடிவு செய்தான் நுனோ. ஆனால், அரசனிடம் ஏற்கெனவே நிறைய ஆடு மேய்ப்பவர்கள் இருந்தனர். அதனால் அவனுக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் வயலினுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்துகொண்டான்.

அங்கே தன்னுடைய வயலினை வைத்து இசைக் கச்சேரியை நடத்தினான். காட்டில் அரசனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் மேய்ப்பர்களுக்கு அந்த இனிமையான இசையின் ஒலி கேட்டது. ஆனால், யார் வாசிப்பது என்பதை அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆடுகளும் அந்த இசையைக் கேட்டன. சில ஆடுகள் அந்த இசையில் மெய்மறந்தன. கூட்டத்தை விட்டுக் காட்டுக்குள் இசை கேட்கும் திசையை நோக்கி அவை செல்லத் தொடங்கின. இசை வரும் திசையை நோக்கி நடந்து நுனோ இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்தன ஆடுகள். அங்கே அவனுடைய பூனையும் இருந்தது.

இப்படியே ஒவ்வொரு நாளும் நுனோவின் இசையைக் கேட்க வரும் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. தன்னுடைய இசையைக் கேட்க வந்திருக்கும் ஆடுகளைப் பார்த்து நுனோ மகிழ்ச்சியடைந்தான். அவன் தனிமையில் இருந்தபோது அவனுடைய இசையில் சோகம் தெரிந்தது. ஆனால், இப்போதுதான் அவன் தனிமையில் இல்லையே? அதனால் அவனுடைய வயலின் இசையில் மகிழ்ச்சி கூடிக்கொண்டேபோனது. ஒரு கட்டத்தில் இசையைக் கேட்டு அவனுடைய பூனை ஆடத் தொடங்கியது. பூனையைப் பார்த்துச் செம்மறியாடுகளும் ஆடத் தொடங்கின. அந்த நடனம் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற குரங்குகளும் அவனுடைய இசையைக் கேட்டன. அவையும் மகிழ்ச்சியில் ஆடத் தொடங்கின. இசையைக் கேட்ட உற்சாகத்தில் அவை உற்சாகத்தில் சத்தம் போட்டன. அந்தச் சத்தத்தில், வயலின் இசையே கேட்காமல் போனது. கொஞ்ச நேரத்தில் பன்றியும் அந்த இசைக் கொண்டாட்டத்தில் கலந்தது. வயலின் இசைக்கு ஏற்ப அதுவும் ஆடத் தொடங்கியது. அதன்பிறகு, ஆர்மடில்லோவும் அந்த இசையைக் கேட்டது. அது தன்னுடைய கனமான கவசத்தையும் பொருட்படுத்தாமல் ஆடியது. அதற்குள் குட்டி மான்களின் கூட்டமும் இந்த வயலின் இசைக் கச்சேரியில் சேர்ந்துகொண்டன.

எறும்புதின்னியும் அவர்களுடன் சேர்ந்து ஆடியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நுனோவின் இசையில் மயங்கிப் புலியும் அங்கே வந்து ஆடியது. புலியை அங்கே பார்த்ததும் முதலில் ஆடுகளும் மான்களும் பயந்தன. ஆனால், புலி அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் ஆடுவதிலேயே கவனம் செலுத்தியது. பாம்புகள் மரத்தின் மேலே படமெடுத்து ஆடின. மற்றவற்றைப் போல் கால்கள் இல்லாததால் தரையில் ஆட முடியவில்லை என்று பாம்புகள் மிகவும் வருந்தின. பறவைகள் இசைக்கேற்ப இறக்கைகளை விரித்துப் பறந்தன. இப்படிக் காட்டில் ஆட முடிந்த எல்லா விலங்குகளும் நுனோவின் வயலின் கச்சேரியில் ஆடிக்கொண்டிருந்தன. ஒரு வேடிக்கையான கொண்டாட்டம் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

இந்தக் கூட்டம் ஆடியபடி எந்த இலக்கும் இல்லாமல் காட்டுக்குள்ளே பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பூதங்களின் கோட்டைச் சுவர் அவர்களின் வழியை மறித்தது. அந்தக் கோட்டைச் சுவருக்குக் காவலுக்கு நின்ற பூதம் இவர்களுடைய வேடிக்கையான நடனத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது. அது இந்தக் கூட்டத்தைப் பூதங்களின் அரசனின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தியது. ஒரு காடே வயலின் இசைக்கேற்றபடி வேடிக்கையாக ஆடுவதைப் பார்த்த அரசனும் பயங்கரமாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பு இடிமுழக்கத்தைப் போல இருந்தது. ஒரு நிமிடம் பூமியே அதிர்ந்தது.

அந்தப் பூதங்களின் அரசனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் எப்போதும் சோகமாகவே இருப்பாள். அந்த இளவரசி இதுவரை சிரித்ததேயில்லையாம். அவளைச் சிரிக்க வைப்பவருக்குத் தன் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார் அரசன். அப்போது அரசருக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தக் கூட்டத்தின் வேடிக்கையான நடனத்தைப் பார்த்தால் தன் மகள் சிரிப்பாள் என்று அந்த அரசர் நம்பினார்.

அந்தக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு இளவரசியின் மாளிகைக்குச் சென்றார் அரசர். இளவரசி வழக்கம்போலச் சோகத்துடன் உட்கார்ந்திருந்தாள். நுனோ தன்னுடைய காட்டு நண்பர்களுடன் ஆடுவதைப் பார்த்த இளவரசியின் முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்கியது. குரங்குகளும், மான்களும், ஆடுகளும் வேடிக்கையாக ஆடுவதைப் பார்த்து அவள் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினாள். அவள் சிரிப்பதைப் பார்த்த பூதங்களின் அரசன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். அதன்பிறகு, “நான் அறிவித்திருந்தபடி, என் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்குத் தருகிறேன்” என்று நுனோவிடம் சொன்னான் பூதங்களின் அரசர்.

நுனோ பூதங்களின் ராஜ்ஜியத்தின் பாதியை நீண்டகாலத்துக்குச் சிறப்பாக ஆட்சி செய்தான். அவனுக்கு ஏதாவது தேவையென்றால், பூதங்களிடம் தன் வயலினை எடுத்து வாசித்தே அதை நிறைவேற்றிக்கொண்டான். அவனுடைய வயலின் இசைக்குப் பூதங்கள் அடிமைகளாக இருந்தன.

(பிரேசிலியநாட்டுப்புறக்கதை)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 mins ago

இந்தியா

31 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்