கிளாசிக் கதைகள்: கடக்கிட்டி முடக்கிட்டி

By பெரியசாமித் தூரன்

ஓர் ஊரில் வயதான கிழவர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் ஏழை. அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை. அவர் ஒரு அடர்ந்த காட்டுக்குப் பக்கத்தில் குடிசை போட்டு வாழ்ந்துவந்தார். காட்டில் நாள்தோறும் விறகு ஒடித்து வருவார். அதைப் பக்கத்திலிருந்த ஒரு பட்டணத்தில் விற்று, அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிழைத்துவந்தார்.

விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கிழவரால் சுமக்க முடியுமா? அதற்காக அவர் ஒரு கழுதையை வளர்த்தார். அந்தக் கழுதையின் மேல் விறகை வைத்துப் பட்டணத்துக்குப் போவார். பின்னர் சமையலுக்கு வேண்டிய அரிசி, பருப்பு முதலியவற்றையும் வாங்கி வருவார். இப்படி அவரது வாழ்நாள் கழிந்துகொண்டிருந்தது.

இளம் வயதிலிருந்தே அந்தக் கழுதை விறகைச் சுமந்து சென்றதால் அதன் பின்கால்கள் இரண்டும் கொஞ்சம் உள் பக்கமாக வளைந்துவிட்டன. அதனால், அந்தக் கழுதை நடக்கும்போது பின்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொள்ளும். அப்படி இடித்துக்கொள்ளும்போது ‘கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி' என்று சத்தம் கேட்கும். கழுதை வேகமாக ஒடும்போது இந்தச் சத்தம் அதிகம் கேட்கும்.

அதனால் அந்தக் கழுதையைக் கடக்கிட்டி முடக்கிட்டி என்றே செல்லமாக அவர் பெயர் வைத்துக் கூப்பிட்டார். பட்டணத்திலிருந்து சாயங்காலம் திரும்பிய பிறகு கிழவர் சமையல் செய்யத் தொடங்குவார். அதற்காக அரிசியையும் பருப்பையும் தண்ணீரில் தனித்தனியாக உலையில் போடுவார். அப்படிச் செய்வதால் கிடைக்கும் கழுநீரைக் கழுதைக்கு வைப்பார்.

கழுதையும் ஆவலோடு அதைக் குடித்துவிட்டுக் குடிசைக்குப் பக்கமாக வெளியே புல் மேயப் போகும். இருட்டும்போது குடிசைக்கு வந்துவிடும். குடிசைக்குப் பக்கத்தில் உள்ள காட்டிலே புலிகள் இருந்தன. அவற்றால் இந்தக் கழுதைக்குத் தீங்கு நேராமல் இருக்க அந்தக் கிழவர் ஒரு தந்திரம் செய்தார். செம்மண்ணைத் தண்ணிரில் கரைத்து, அதைக் கழுதையின் கால்களை விட்டுவிட்டு உடம்பு முழுவதும் பூசினார். பச்சைத் தழையைக் கசக்கிக் கழுதையின் கால்களுக்கும் முகத்துக்கும் சாயம் தீட்டினார்.

இவ்வாறு செய்த பிறகு பார்த்தால் கழுதையின் உருவமே மாறிவிட்டது. ஏதோ ஒரு விநோதமான விலங்கு போல் அது காட்சி அளித்தது. சாயம் கொஞ்சம் மங்கும்போது மறுபடியும் அடித்துவிடுவார். இவ்வாறு செய்த பிறகுதான் பயமில்லாமல் கழுதையை மேய விட்டார்.

ஒரு நாள்...

காட்டுக்குள்ளே கொஞ்சம் நுழைந்தால் பசும் புல் நிறையக் கிடைக்கும் என்று கழுதை நினைத்தது. விரைவில் குடிசைக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு காட்டின் உள்ளே புகுந்து மேயத் தொடங்கியது. உள்ளே போகப்போகப் பசும்புல் நிறைய இருந்தது. மேய வேண்டும் என்ற ஆசையால் அது ரொம்ப துாரம் போய்விட்டது.

சூரியன் மறைந்து இருட்டத் தொடங்கியது. அப்போது ஒரு புலி எதிரே வந்தது. புலியைப் பார்த்ததும் கழுதைக்கு உதறல் எடுத்தது. புல் மேய வேண்டும் என்ற பேராசையால் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டதே எனக் கழுதை நினைத்தது. இருந்தாலும் இனி வருத்தப்படுவதில் பயனில்லை என்று நினைத்த கடக்கிட்டி முடக்கிட்டி கழுதை, புலியிடமிருந்து தப்ப வேண்டும் என்று மனதுக்குள் திட்டம் போட்டது.

புலி பலமுள்ளதாக இருந்தாலும் இயற்கையாகவே சந்தேகமுள்ள விலங்கு. இந்தச் சந்தேகம் கடக்கிட்டி முடக்கிட்டிக்கு உதவியாக அமைந்தது. எதிரே வந்த புலி, கடக்கிட்டி முடக்கிட்டியின் மேல் பாய்ந்து கொல்ல முயற்சி செய்யவில்லை.

‘இது ஏதோ புது மாதிரியான விலங்கு போல் இருக்கிறதே ! இதன் பெயர் என்னவாக இருக்கும் ? இதன் மேல் பாய்ந்தால் ஒருவேளை ஆபத்தாக முடியுமோ ?’ என்று புலி யோசித்தது. எதற்கும் பேசிப் பார்ப்போம் என்று அது மெதுவாக நகர்ந்துவந்தது.

அருகில் வந்ததும், “உன் பெயர் என்ன ?” என்று புலி தயக்கத்தோடு கழுதையிடம் கேட்டது. “கடக்கிட்டி முடக்கிட்டி” என்று தைரியமாகக் கழுதை பதில் சொன்னது.

பெயரைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் வந்தது. ‘இந்தப் பெயரை நான் கேட்டதே இல்லையே. மான், ஆடு, மாடு என்று பல விலங்குகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடக்கிட்டி முடக்கிட்டி என்று கேள்விப்பட்டதே இல்லையே. நன்கு விசாரிப்போம்' என்று புலி தனக்குள் முடிவு செய்தது.

“உனக்கு அண்ணன் தம்பிகள் உண்டா?”

“இரண்டு பேர் அண்ணன் உண்டு. மூத்தவன் ‘சடக்கிட்டி முடக்கிட்டி’, இரண்டாவது அண்ணன் பெயர் ‘மடக்கிட்டி முடக்கிட்டி'. எனக்குத் தம்பி இல்லை' என்று கடக்கிட்டி முடக்கிட்டி பதில் சொல்லியது.

“பெயரெல்லாம் விநோதமாக இருக்கிறதே!” என்று தாழ்ந்த குரலில் புலி கேட்டது.

“ஆமாம், மூத்த அண்ணன் புலியின் கழுத்தைச் 'சடக்'கென்று கடித்துக் கொல்வான். அதனால் அவன் சடக்கிட்டி முடக்கிட்டி, இரண்டாவது அண்ணன், புலியின் முதுகெலும்பை ‘மடக்’ என்று கடிப்பான். அதனால் அவன் பெயர் ‘மடக்கிட்டி முடக்கிட்டி’. நான் ‘கடக்” என்று கடிப்பேன். அதனால் நான் ‘கடக்கிட்டி முடக்கிட்டி' என்றது கழுதை.

“அது சரி. எல்லோருக்குமே ‘முடக்கிட்டி’ என்று பொதுவாக எப்படிப் பெயர் வந்தது”

“அதுவா?, அது எங்கள் பட்டப்பெயர்” என்று கழுதை தலையை நிமிர்த்திக்கொண்டு சொன்னது.

“யார் அப்படிப் பட்டம் கொடுத்தார்கள்?” என்றது புலி

“நம் சிங்க ராஜாதான். வேறு யார் கொடுப்பார்கள்?” என்றது கழுதை.

“எதற்காக அப்படிப் பட்டம் கொடுத்தார் ?”

“ம்… எங்கள் வீரச்செயலை அறிந்துதான் கொடுத்தார். மூத்த அண்ணன் நூறு புலிகளை ‘சடக்’கென கடித்துக் கொன்றார். சின்ன அண்ணன் இருநூறு புலிகளை ‘மடக்’கென கடித்தெறிந்தார். நான் அவர்களையெல்லாம் விஞ்ச வேண்டும். இதுவரை 299 புலிகளை ‘கடக்'கென கடித்துக்கொன்றிருக்கிறேன். உன்னை ‘கடக்'கென்று கடித்துக்கொன்றுவிட்டால் சரியாக முந்நூறு ஆகிவிடும்” என்று கடக்கிட்டி முடக்கிட்டி தனது வாயைத் திறந்து பல்லைக் காட்டிற்று.

புலி பயந்து ஒடியே போய்விட்டது. கழுதையின் பல்லையெல்லாம் அது பார்க்கவேயில்லை.

‘நல்ல வேளை, தைரியத்தை இழக்காமல் அறிவைப் பயன்படுத்தித் தப்பினேன்’என்று எண்ணிக்கொண்டே கிழவருடைய குடிசையை நோக்கி வேகமாகக் கழுதை நடந்தது. அப்பொழுது பின்கால்கள் ‘கடக்கிட்டி முடக்கிட்டி’, ‘கடக்கிட்டி முடக்கிட்டி’ என்று சத்தம் வந்ததைக் கேட்க வேண்டுமே!



பெரியசாமித் தூரன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் 1908-ம் ஆண்டு பிறந்தவர். தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும்கூட. ஏராளமான நாடகங்களும், இசைப்பாடல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். சிறுவர் இலக்கியங்கள் படைத்த ஒரு சிலரில் பெரியசாமி தூரனுக்குத் தனி இடம் உண்டு. இவரது பல சிறுவர் கதைகளும் படைப்புகளும் காலம் தாண்டி போற்றப்படுகின்றன. பத்மபூஷன் விருது பெற்றுள்ள பெரியசாமித் தூரனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

கலைக்களஞ்சிய அறிஞர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

ஆன்மிகம்

12 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்