புதிய கண்டுபிடிப்புகள்: ஆற்றங்கரையில் சுரபுன்னை மரங்கள்!

By த.வி.வெங்கடேஸ்வரன்

கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே வளரும் சிவப்புச் சுரபுன்னை மரங்கள், நதியின் கரையில் வளர்ந்தால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா! 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர் கார்லோஸ் புரேலோவும் வியந்துபோனார். ஒருநாள் மீன் பிடிக்க பெட்ரோ மார்டிர் நதிக்கரைக்குச் சென்றார். நதியின் ஓரத்தில் வித்தியாசமான மரங்களைக் கண்டார். இந்த மரங்கள் நீரில் இருந்தன. நீருக்கு மேலே அவற்றின் வேர்கள் காணப்பட்டன.

சின்ன வயதில் பார்த்த அந்த மரங்களை கார்லோஸ் மறக்கவில்லை. கடல்கழிமுக உப்புநீரில் உருவாகும் அலையாத்திக் காடுகளில் வாழும் சுரபுன்னை மரங்கள்தாம் அவை என்பதை அறிந்துகொண்டார். கடலோரத்தில் மட்டுமே வளரக்கூடிய சுரபுன்னை, கடலிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் நன்னீரில் வளர்வது எப்படி என்று ஆராய்ச்சி செய்தார்.

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் இருந்த கடலில் உருவான சுரபுன்னை மரங்கள்தாம் இவை என்று நினைத்தார். அங்குள்ள மற்ற தாவரங்களையும் ஆராய்ந்தார். சுரபுன்னை மட்டுமின்றி, மூன்றில் ஒரு பங்கு தாவரங்கள் கடலை ஒட்டி வாழ்பவை என்பதும் தெரியவந்தது. கடல் பகுதியில் கிடைக்கும் களிமண், சரளைக் கற்கள், பெரிய சிப்பி ஓடுகள் முதலியனவும் இங்கே கிடைத்தன. ஒரு காலத்தில் கடல் பகுதியாக இது இருந்திருக்கலாம் என்று கருதினார்.

பூமியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பனியுகமும், இரண்டு பனியுகதுக்கு இடையில் சற்றே வெப்பநிலை உயர்ந்த பனியிடைக் காலமும் மாறிமாறி வரும். பனியுகத்தில் கடல் நீர் பெருமளவில் உறைந்து பனிப் போர்வையாகப் பூமியின் மீது படர்ந்திருக்கும். பனியிடைக் காலத்தில் வெப்ப உயர்வால் பனி உருகி, கடல் மட்டம் உயரும். அப்படி 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வெப்ப நிலை உயர்ந்தபோது பெருமளவு பனி உருகி, கடல் மட்டம் ஒன்பது மீட்டர் உயர்ந்தது.

அப்போது சற்றே தாழ்நிலமாக இருந்த யுகடன் தீபகற்பத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடல் நீர் புகுந்தது. அப்போதுதான் கடல் நீரோடு சுரபுன்னைகளும் வளர ஆரம்பித்திருக்கின்றன. உப்பு நீரில் மட்டுமின்றி, கால்சியம் அதிகமுள்ள இடங்களிலும் சுரபுன்னை மரங்கள் செழித்து வளர முடியும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா பகுதிகளிலிருந்த சுரபுன்னை மரபணுவையும் பெட்ரோ மார்டிர் நதிக்கரையிலிருந்த சுரபுன்னை மரபணுவையும் ஆய்வு செய்தனர். 170 கி.மீ. தொலைவில் உள்ள மெக்சிகோ வளைகுடா பகுதியில் வாழ்ந்த சுரபுன்னை மரங்கள்தாம் இவற்றின் வேர் எனத் தெரிந்தது. காலப்போக்கில் மரபணுவில் திடீர் மரபணு மாற்றம் ஏற்படும். தாய் மரங்கள் வாழும் பகுதியில் கூடுதல் மரபணு மாற்றங்கள் காணப்படும். புதிதாகப் பரவிய பகுதிகளில் மரபணு மாற்றங்கள் குறைவாக இருக்கும். அப்படித்தான் நதிக்கரையில் வளரும் சுரபுன்னை மரங்கள் 1,20,000 ஆண்டுகள் முன்னர் தனித்து வளரத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் உயிரிச் சூழல் மாற்றம் குறித்து இந்த ஆய்வு நமக்குத் தெரிவிக்கிறது. இது போன்ற ஆய்வுகள் வழியே எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவாக நிகழக்கூடிய மாற்றங்களை, முன்கூட்டியே அறிந்து செயல்பட இந்த ஆய்வு உதவுகிறது.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்