யார் இந்தச் சேவகர்? - எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள்: அரபிக்

By யூமா வாசுகி

யார் இந்தச் சேவகர்? அரேபிய நாட்டை, கலீபா உமர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்தக் காலத்தில் மன்னர்கள் தம் மக்களின் நலன்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மாறுவேடம் அணிந்து நகரங்களில் உலவுவது வழக்கம்

ஒருநாள் இரவு நேரம். தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டிருந்த கலீபா உமரும், அவரது பணியாளர் அஸ்லமும் மதீனா நகரத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக மக்கள் நடமாட்டம் குறைந்து வந்தது. பிறகு, தெருக்களில் யாரும் இல்லை. மக்கள் எல்லாம் தூங்கத் தொடங்கியிருந்தார்கள்.

தூரத்தில் ஓர் இடத்தில் வெளிச்சம் தெரிந்தது. அவர்கள் இருவரும் அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அங்கே, சிறிய குடிசைக்கு முன்னால் ஓர் அம்மா மிகவும் துயரத்துடன் அமர்ந்திருந்தார். அவர், அடுப்பில் தீமூட்டி தண்ணீரைக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார். உள்ளே குழந்தைகள் அழுதுகொண்டிருக்கும் மெல்லிய ஓசை கேட்டது. உமரும் அஸ்லமும் அந்த அம்மாவின் பக்கத்தில் சென்று நின்றார்கள்.

அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டு, “நீங்கள் யார்?” என்று கேட்டார் அந்த அம்மா.

உமர் பணிவுடன் சொன்னார்: “வணக்கம் அம்மா, நாங்கள் வழிப்போக்கர்கள்.”

அம்மா கடுகடுப்பாகப் பேசினார்: “அப்படி என்றால் உங்களுக்கு இங்கே என்ன வேலை? உங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போங்கள்!”

“சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள் அம்மா, நாங்கள் போய்விடுகிறோம். ஆனால், குடிசைக்குள்ளே குழந்தைகள் ஏன் அழுகிறார்கள் என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?”

“அதைத் தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” அம்மாவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

“உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்வோம்.”

“உதவி! உமரின் நாட்டிலா உதவி கிடைக்கப் போகிறது?” வெறுப்புடன் முணுமுணுத்தார் அம்மா.

“என்ன, உதவி செய்ய மாட்டேன் என்று உமர் சொன்னாரா? நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை, நான் அவரைப் பார்த்ததில்லை. நானும் என் குழந்தைகளும் எவ்வளவு நாட்களாகப் பட்டினி கிடக்கிறோம்...என் குழந்தைகளைக் கொஞ்சம் தூங்க வைப்பதற்குதான் நான் இந்த நேரத்தில் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்.”

தன் முகத்திரையை விலக்கிய உமர், “பாத்திரத்தில் என்ன சமைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இங்கே சமைப்பதற்கு ஒன்றுமில்லை. பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்தான் இருக்கிறது. நான் அடிக்கடி ஓசை வரும்படி கரண்டியால் தண்ணீரைக் கலக்குவேன். பாத்திரத்தில் உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து குழந்தைகள் நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். பிறகு அப்படியே பசிக் களைப்பில் அழுதவாறு தூங்கிவிடுவார்கள். அவர்கள் தூங்கிய பிறகுதான் நான் கொஞ்சம் தலைசாய்க்க வேண்டும்.”

பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“அழாதீர்கள், அம்மா. உங்கள் கஷ்டத்தைக் கலீபாவிடம் சொன்னால் என்ன?”

“நான் போய்ச் சொல்லித்தான் அவருக்குத் தெரிய வேண்டுமா? அவராகத்தான் வந்து விசாரிக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் அப்புறம் எதற்கு அவர் கலீபா ஆனார்?” என்று அம்மா கோபமாகக் கேட்டார்.

“அம்மா, லட்சக்கணக்கான மக்களின் தேவைகளை நேரடியாக விசாரிப்பதற்கு கலீபாவால் எப்படி முடியும்? நீங்கள் உங்கள் துயரத்தை அவருக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இருக்கட்டும். நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் என் வீட்டுக்குச் சென்று சமைப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.”

அவர்கள் திரும்பி நடந்தார்கள். வீட்டுக்குச் சென்றவுடன் உமர் கோதுமை மாவும், நெய்யும், பேரீச்சம் பழங்களும் நிறைய எடுத்து மூட்டை கட்டினார். மிகவும் பாரமான அந்த மூட்டையை அவரே சுமந்தார்.

“கலீபாவே, என்னிடம் கொடுங்கள். நான் சுமந்து வருகிறேன்” என்றார் அஸ்லம்.

“வேண்டாம். நான் என் கடமையைச் சரியாகச் செய்யாத காரணத்தால்தான் அந்தக் குழந்தைகளும் தாயும் பட்டினி கிடக்கிறார்கள். எனவே இதை நான்தான் சுமக்க வேண்டும்.”

அவர்கள் குடிசைக்கு வந்தார்கள். அந்த அகால நேரத்தில் கலீபாவே ரொட்டிகள் செய்தார். பசிக் களைப்பால் மயங்கிக்கிடக்கும் குழந்தைகளை எழுப்பினார். ரொட்டிகளில் நெய் தடவி அந்தத் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்தார்.

“நீங்கள் யார்? நீங்கள் எங்களுக்காக மிகவும் கஷ்டப்படுகிறீர்களே...” என்று மனம் நெகிழ்ந்து கேட்டார் அம்மா.

“உங்களுக்கு சேவகம் செய்ய வந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவசியம் நாளை வந்து கலீபாவைப் பாருங்கள். அவர் உங்கள் செலவுகளுக்கான பணத்தை கஜானாவிலிருந்து தருவார்.”

உமரும் அஸ்லமும் விடைபெறும்போது அதிகாலை ஆகிவிட்டது.

மறுநாள் கலீபாவைச் சந்தித்து முறையிட வந்தார் அந்த அம்மா. கலீபாவைப் பார்த்ததும், வியந்துபோய் அப்படியே நின்றுவிட்டார்!

“அடடா, இந்த அரேபிய நாட்டின் மன்னர்கலீபா, இவர்தானா!”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்