புதியதோர் உலகம் 04: திருடப்படும் குழந்தைப் பருவம்

By செய்திப்பிரிவு

ஆதி

எல்லோருக்கும் வணக்கம். இந்தத் தடவை நான் ஒரு பையனைப் பத்தி சொல்லப் போறேன். கன்னியாகுமரியில் குடிகாரத் தந்தையின் கொடுமை தாளாமல் ரயிலேறி சென்னை வந்து இறங்குகிறான் வேலு. பெருநகரம் அவனை அச்சுறுத்துகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே குப்பை சேகரிக்கும் ஜெயாவைப் பார்க்கிறான். பசியில் என்ன செய்வது என்று தெரியாமல், அவள் பின்னாலேயே போகிறான். பிறகு, அவனும் குப்பை சேகரிக்கும் வேலையைச் செய்யத் தொடங்குகிறான்.

காசு சேர்த்து ஊருக்கு அனுப்ப வேண்டுமென்று அவனுக்கு ஆசை. இதற்கு இடையில் ஊர் சுற்றித் திரியும் ராஜாவும் செல்வாவும் அவனை ஒரு சினிமாவுக்குக் கூட்டிப் போகிறார்கள். அவனிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கிக்கொள்வதில்லை. பிறகு, துரை என்பவரிடம் வேலுவை அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அவர் காசு தருவார், அவரிடம் வேலை பார்த்து அந்தக் காசைக் கழித்துவிடலாம் என்ற திட்டத்துடன் வேலுவும் செல்கிறான்.

ஆனால், அவரோ வட்டிக்குப் பணம் கொடுப்பவர். இந்த வாரம் 100 ரூபாய் தந்தால், அடுத்த வாரம் 150 ரூபாயை அவரிடம் தந்தாக வேண்டும். முடியவில்லை என்றால், அதற்கடுத்த வாரம் 200 ரூபாய் தர வேண்டும். இது வேலுவுக்குச் சரிவரும் என்று தோன்றவில்லை. அதனால் காசை வேலு உடனே திரும்பக் கொடுக்கிறான். உடனே கொடுத்தாலும் 150 ரூபாய்தான் என்று துரையின் ஆட்களான ராஜாவும் செல்வாவும் சொல்கிறார்கள்.

இடையில் மழை பெய்வதால் அவனால் குப்பை சேகரித்து விற்றுப் பணம் சேர்க்க முடியவில்லை. இதன் காரணமாக துரையின் கடை இருக்கும் பக்கத்தைத் தாண்டிச் செல்லவே வேலு பயப்படுகிறான்.

கிடைத்தது விடுதலை

இதற்கு இடையில், குழந்தைத் தொழிலாளர்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் ஒரு அமைப்பின் பயிலரங்குக்கு வேலுவை ஜெயா அழைத்துச் செல்கிறாள். அந்தப் பயிற்சியின் முடிவில் அவனுக்கு 100 ரூபாய் கிடைக்கிறது. ஏற்கெனவே கடனாக வாங்கிய 100 ரூபாயைச் செலவு செய்யாமல் அவன் வைத்திருந்தான். இரண்டு வாரம் ஆகிவிட்டதால் அதற்கான வட்டியாக இந்த 100 ரூபாயைச் சேர்த்துக் கொடுத்துவிட்டுக் கடனிலிருந்து விடுபட வேண்டுமென வேலு நினைக்கிறான். கடனிலிருந்து அவன் விடுபட்டு விடுகிறான்.

ஆனால், அவனுடைய குப்பை சேகரிக்கும் தொழில் மாறுவதில்லை. அது மட்டுமல்லாமல் எல்லா சிறுவர்களும் வேலு, ஜெயாவைப் போல் இருக்க முடிவதில்லை. துரை போன்றவர்களிடம் கடன் வாங்கி அதற்கு வேலை செய்து வட்டி கட்டி, மீண்டும் புதிய கடன் வாங்கி என அந்தச் சுழற்சி முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே போகிறது.

வேலு, ஜெயாவைப் போன்றவர்களின் நெருக்கடியான வாழ்க்கையை நமக்குச் சொல்கிறது, ‘குப்பைமேடுகளில் - சாலைவாழ் குழந்தைகளும் சுற்றுச்சூழலும்’ என்ற தாரா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல். இந்த நூலை எழுதியவர்கள் கீதா உல்ஃப், அனுஷ்கா ரவிசங்கர். தமிழில் மொழிபெயர்த்தவர் சுபத்ரா.

புகழ்பெற்ற ஓவியர் ஒரிஜித் சென்னின் உயிர்த்துடிப்புமிக்க கொலாஜ், கேலிச்சித்திர பாணி ஓவியங்கள் மேம்பட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

கேள்விக்கென்ன பதில்?

குடும்பத்தினர் வேலையில்லாமல் இருப்பது, பெற்றோர் உரிய வேலை பெறாமலோ குறைந்த ஊதிய வேலைகளிலோ ஈடுபடுவது, அடிப்படை வசதிகளைப் பெறாமல் போவது, இவற்றுக்கெல்லாம் அரசு தீர்வு காணாமல் இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைத் தொழிலாளர் உருவாகிறார்கள். நம் நாட்டுச் சட்டப்படி குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு வைத்திருப்பது குற்றம்.

ஆனால், நாம் தினசரி பார்க்கும் பல்வேறு இடங்களில் குழந்தைத் தொழிலாளர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குப்பை சேகரிப்பவர்கள் மட்டுமல்லாமல், ஹோட்டல்களில் பாத்திரம் கழுவுதல்-மேசை துடைத்தல், மெக்கானிக் கடைகள், வீட்டு வேலை என எத்தனையோ வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்க்கிறோம்.

அவர்களும் மற்ற குழந்தைகளைப் போல் பள்ளி சென்று படிக்க வேண்டுமில்லையா? தங்கள் குழந்தைப் பருவத்தைச் சக வயதினருடன் பகிர்ந்துகொண்டு வளரவும் வாழவும் வேண்டுமில்லையா? விளையாட்டு, குழந்தைப் பருவத்துக்கே உரிய செயல்பாடுகளை அவர்களும் மேற்கொள்ள வேண்டுமில்லையா?

இந்த நூல் எழுப்பும் கேள்விகளுக்குப் புழுவான என்னிடம் பதில் இருக்கிறது, மனிதர்களான நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

குழந்தை அடிமைகள்

உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் தரைவிரிப்பு, கம்பளம் நெய்யும் வேலையில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதற்காக மிகக் குறைந்த முன்பணத்தை அவர்களுடைய பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளை அடிமைகளைப் போல் முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற ஒரு முதலாளியிடம் கோகுல் என்ற சிறுவன் சிக்கிக்கொள்கிறான்.

அவனுடன் கல்லன், மன்சூர் ஆகிய சிறுவர்களும் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூட முதலாளி அவர்களைத் தண்டிக்கிறார். ஆனால், ஒரு தரைவிரிப்பு மூலம் அவர் பெறும் பணமோ ஏராளம். இது அந்தச் சிறுவர்களுக்குத் தெரியவருகிறது.

கோகுலின் அண்ணன் மூலமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் தப்பிச் செல்ல அவர்கள் முயல்கிறார்கள். அதில் ஏற்படும் பிரச்சினைகள், அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதே ‘Freedom Run’ என்ற கதை. இந்தக் கதையை எழுதியவர் பிரபல வரலாற்று எழுத்தாளர் சுபத்ரா சென் குப்தா.

வழக்கமாக சாகசக் கதைகள், கார்ட்டூன் கதைகளையே சித்திரக்கதை நூலாகப் படித்திருப்போம். குழந்தைத் தொழிலாளர் முறை சார்ந்த பிரச்சினைகளை உணர்த்தும் இந்தக் கதை சித்திரக்கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. வரைந்தவர் தபஸ் குஹா, பிரதம் புக்ஸ் வெளியீடு.

தொடர்புக்கு: https://store.prathambooks.org/productCategory?keywordSearch=freedom%20run

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

‘குப்பைமேடுகளில் - சாலைவாழ் குழந்தைகளும் சுற்றுச்சூழலும்’, தாரா வெளியீடு, தொடர்புக்கு: 044 24426696

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்