மிதக்கலாம், பறக்கலாம், மேலே போகலாம்

By ஆதி

கடற்கரைக்கோ, பூங்காவுக்கோ சென்றால் உங்கள் அப்பா, அம்மாவிடம் நீங்கள் முதலில் கேட்டு வாங்கும் விஷயங்களில் ஒன்று எதுவாக இருக்கும்? காற்றில் சோப்பு முட்டைகளை விடும், சோப்புத் தண்ணீராகத்தானே இருக்கும்.

முட்டையை ஊதிவிடும் ஓட்டைப் பகுதி எந்த வடிவத்தில் இருந்தாலும் குமிழி கோள வடிவத்திலேயே உருவாகும். கோளம்தான் அதிகக் கனஅளவுடன் (Volume) குறைந்த பரப்பை (Surface) கொண்ட வடிவம். அதனால் கோள வடிவக் குமிழிகளே உருவாகும்.

குமிழியை ஊதும்போது, முதலில் பெரிதாக அகன்று வாய்ப் பகுதி அருகே வரவர குறுகிக்கொண்டே வரும். குமிழியின் உள்ளே உள்ள பரப்பு இழுவிசையின் (Surface tension) சக்தி, வெளியே உள்ள காற்றழுத்தத்துக்கு சமமாகும்வரை இப்படிக் குறுகும். இரண்டும் சமம் ஆகும்வரை காற்றை ஊதிக்கொண்டே இருந்தால் குமிழி பெரிதாகும். பிறகு விடுபட்டுக் காற்றில் பறக்க ஆரம்பிக்கும்.

சோப்பு முட்டையின் வழியாக வெளிச்சம் பாயும்போது, அதிலுள்ள பல்வேறு சோப்புப் படல அடுக்குகளில் ஒளி பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படும். அப்போது நிறங்கள் பிரிந்து வானவில் நிறங்கள் தோன்றலாம். ஆனால், பெரும்பாலான நேரம் குமிழி கண்ணாடி நிறத்திலேயே இருக்கும்.

பல குமிழிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூடும்போது ஃபோம் (Foam) எனப்படும் குமிழ்மெத்தையை உருவாக்குகின்றன. தண்ணீரை ஆற்றும்போது, திரவங்களைக் கலக்கிவிடும்போதும் அவற்றின் மேற்புரத்தில் குமிழிகள் ஒன்றுகூடுவதால் இந்த மெத்தை உருவாகிறது.

சோப்புக் குமிழிகளை ஆயுதமாகப் பயன்படுத்த முடியுமா? முடியும். திடீரெனத் தாக்கும் இறால் வகை ஒன்று, இரைகளைப் பிடிக்கக் குமிழிகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. வெற்றிடத்தை ஏற்படுத்தும் குமிழிகளை (Cavitation) இந்த இறால் உருவாக்குகிறது. அந்தக் குமிழிகள் ஒரு கணத்துக்கு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி, கடும் வெப்பத்தை உருவாக்குகின்றன. இதில் அதன் இரை உயிரினம் இறந்து போகிறது.

விண்வெளியில் சோப்பு முட்டையே விடமுடியாது. ஏனென்றால், சோப்பு முட்டைக்குள் இருக்கும் அழுத்தமும், சோப்பு முட்டைக்கு வெளியே இருக்கும் காற்றழுத்தமும் மோதிக்கொள்ளும் முயற்சியில்தான் குமிழியே பிறக்கிறது. விண்வெளியில்தான் காற்றழுத்தமே இருக்காதே, அதனால் அங்கே குமிழியை உருவாக்க முடியாது.

தண்ணீர் மூலக்கூறுகள் அதிகம் ஆவியானால் குமிழி வெடித்துவிடும். மெல்லிய தண்ணீர் படலத்தை முறிக்கும் செயல்களைக் குமிழி உடைந்துவிடும். வேகமான காற்று, தூசி, உப்பு, காற்று மாசு போன்றவை குமிழிகளை வேகமாக உடைத்துவிடும்.

என்றைக்காவது சுத்தமான தண்ணீரில் முட்டைவிட முயற்சித்திருக்கிறீர்களா? நிச்சயமாக முட்டை விட்டிருக்க முடியாது. ஏனென்றால் சுத்தமான தண்ணீரில் உருவாக்கப்படும் குமிழிகளின் பரப்பு இழுவிசை மிக அதிகம். அத்துடன், ஆவியாதல் காரணமாகச் சுத்தமான தண்ணீரில் உருவாகும் குமிழி வேகமாக மெலிந்து உடைந்துவிடும்.

அப்புறம் எல்லாவற்றுக்கும் மேலாக, குமிழி ரொம்ப நேரம் நீடித்திருக்க வேண்டும் என்றால், நாம் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. அது குமிழியை விரலால் குத்தாமல் இருப்பதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்