காமிக்ஸ் ஹீரோக்கள்: எதிர்காலச் சோம்பேறிகளின் உலகம்

By கிங் விஸ்வா

தரையில் இருந்து மிக, மிக உயரத்தில் தூண்கள், அந்தத் தூண்களின் மேலே வீடுகள் இருந்தால் எப்படி இருக்கும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்ற கற்பனையுடன் உருவாக்கப்பட்டது அந்த நகரம். அதன் பெயர் ஆர்பிட் சிட்டி. இந்த நகரில் உள்ள தூண்களின் உயரத்தை ஏற்றவோ, குறைக்கவோ முடியும். இங்கேதான் ஜெட்சன்ஸ் வாழ்கிறார்கள்.

டாம் & ஜெர்ரியை உருவாக்கிய ஹன்னா-பார்பெரா ஜோடிதான் ஜெட்சன்ஸ் கார்ட்டூன் தொடரையும் உருவாக்கினார்கள். ஃபிளின்ட்ஸ்டோன்ஸ் கார்ட்டூன் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களுடைய உத்தியை எதிர்மறையாக்கி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. சமகாலத்தில் நடக்கும் கதையை, அப்படியே கற்காலத்துக்கு மாற்றி ஃபிளின்ட்ஸ்டோன்ஸ் உருவாக்கப்பட்டது. அதே கதையை எதிர்காலத்தில் நடப்பதாகச் சித்தரித்தால் என்னவாகும் என்பதைச் சொல்லியது ஜெட்சன்ஸ்.

அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சியில் வண்ணத்தில் ஒளிபரப்பான முதல் தொடர் இதுதான்.

உருவான கதை

ஃபிளின்ட்ஸ்டோன்ஸ் தொடரின் மகத்தான வெற்றி, அதை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிலையத்தினரைச் சிந்திக்க வைத்தது. மேலும் புதிய தொடர்களை ஒளிபரப்ப முடிவு செய்தார்கள். ஹன்னா-பார்பெரா ஜோடியை அணுகியபோது ஃபிளின்ட்ஸ்டோன்ஸ் கதையின் மையக் கருவை நேரெதிராக மாற்றிச் சொல்ல, தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பிடித்துப்போனது.

அப்போது உடனடியாக ஒரு தொடரை உருவாக்க வேண்டி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெற்றிகரமாக வெளியாகிக்கொண்டிருந்த பிளாண்டி தொடரின் கதாபாத்திரங்களையே முக்கியக் கதாபாத்திரங்களுக்கு மாடலாக வைத்து, ஒரு குடும்பத்தை உருவாக்கினார்கள். கதையை எதிர்காலத்தில் நடப்பது போல (கி.பி. 2000 / 2062) அமைத்தார்கள். வருங்காலத்தில் என்ன மாதிரியான புதுமைகளை நமது சமுதாயம் எதிர்கொள்ளப் போகிறது என்ற கருத்தை ஒட்டிப் பல புதுமைகளை இந்தத் தொடர் மூலம் வழங்கினார்கள்.

அப்போது கார்ட்டூன் தொடர்கள் வண்ணத்தில் தயாரிக்கப்பட்டாலும் அனைத்துமே கறுப்பு வெள்ளையில்தான் ஒளிபரப்பப்பட்டன. எதிர்காலத்தைப் பற்றிய புதுமையான கதை என்பதால், துணிச்சலாக முழு வண்ணத்தில் இதை ஒளிபரப்பினார்கள். கலர் தொலைக்காட்சிகளுக்கான விளம்பரமாகவும் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், அன்றைக்கு அமெரிக்காவில் மூன்று சதவீதம் பேரிடமே கலர் டிவி இருந்தது. தொடரின் முதல் பகுதி செப்டம்பர் 23, 1962-ம் தேதி ஒளிபரப்பானது.

தொடரின் கதை

ஆர்பிட் சிட்டியில் அனைத்து வீட்டு வேலைகளையும் இயந்திரங்களே செய்துவிடும். கருவிகளால் செய்ய முடியாத வேலைகளைச் செய்ய, ரோபோக்கள் இருக்கும். பறக்கும் தட்டுகளைப் போலக் கண்ணாடியால் மூடப்பட்ட, வட்ட வடிவப் பறக்கும் ஏரோ-கார்கள் பயணம் செய்யப் பயன்படுத்தப்பட்டன.

எதிர்காலத்தில் அலுவலகத்தில் கடுமையான பணிச் சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம்தான் வேலை. அதுவும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை. வீட்டிலும் அலுவலகத்திலும் மனிதர்களுடைய எல்லா வேலைகளையும் இயந்திரங்களும், கருவிகளுமே செய்துவிடுவதால், கிடைக்கும் சிறிய சந்தர்ப்பத்தில் அதிகமாக உழைக்க வேண்டி இருப்பதாக மனிதர்கள் புலம்புவார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் வாழும் ஜெட்சன்ஸ் குடும்பத்தில் தினமும் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகச் சொல்வதே இந்தத் தொடரின் கதை.

ஜெட்சன் குடும்பம்:

நாற்பது வயதான ஜார்ஜ் ஜெட்சன், அவருடைய மனைவி ஜேன், பள்ளியிறுதி ஆண்டில் இருக்கும் மகள் ஜூடி, ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மகன் எல்ராய், இவர்களுடைய குடும்ப ரோபோ ரோசி, செல்லப் பிராணியான ஆஸ்ட்ரோ என்ற நாய் ஆகியோரைக் கொண்டதுதான் ஜெட்சன்ஸ் குடும்பம். இது தவிர ஜெட்சன்ஸ் குடியிருப்பின் மேலாளர் ஹென்றி ஆர்பிட், ஆர்பிட்டி என்கிற அயல்கிரக உயிரினம், ஜார்ஜின் கோபக்கார மேலாளர் ஸ்பேஸ்லி, அவரது பரம எதிரி காக்ஸ்வெல் என்று பல சுவாரசியமான கதாபாத்திரங்களை உள்ளடக்கியது இத்தொடர்.

ஜார்ஜ் ஜெட்சன்:

ஸ்பேஸ்லி நிறுவனத்தில் பணிபுரியும் இவருடைய வேலையே தொடர்ந்து ஒரு பொத்தானை அழுத்துவதுதான். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்று வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படிக் ‘கடுமையாக’ ஜார்ஜ் உழைப்பார். அடிக்கடி தன்னுடைய வேலைப் பளுவைப் பற்றி மேலாளரிடம் புகார் செய்வார். ஹூபா-டூபா-டூபா என்ற சொற்றொடரை அடிக்கடி உபயோகிக்கும் ஜார்ஜ், பண்புள்ள, அக்கறையான அப்பா.

ஜேன் ஜெட்சன்:

வீட்டு வேலைகளைச் செய்ய, அடிக்கடி பட்டன்களை அமுக்குவதால் களைப்படைந்து ஓய்வு எடுக்க வேறு கிரகத்துக்குச் செல்வார் ஜேன். இவர் ஒரு மோசமான வாகன ஓட்டுநர். இவர் வண்டி ஓட்டினால், வழியில் வருபவர்கள் சாமியை வேண்டிக் கொள்வார்கள். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஜேன், ஜார்ஜின் மேலாளர் ஸ்பேஸ்லியுடன் பல முறை சண்டை போட்டுள்ளார். கடந்த அறுபதாண்டுகளில் தொலைக்காட்சியில் வந்த சிறந்த அம்மா கதாபாத்திரங்களைப் பற்றி யாஹூ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முதல் பத்து இடங்களில் வந்தவர் இவர்.

ஜூடி ஜெட்சன்:

16 வயதான ஜூடியின் பறக்கும் டைரி மிகவும் பிரபலம். இந்த டிஜிட்டல் டைரியில் தன் அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்வது ஜூடியின் பழக்கம். நடனம் ஆடுவதற்குப் புவியீர்ப்பு விசையைக் கட்டுப்படுத்தும் ஒரு இயந்திரத்தை இவள் பயன்படுத்துவாள். தொலைபேசியில் அதிக நேரம் செலவிடும் ஜூடி, தனது குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசம் கொண்டவள். ஆறரை வயதான எல்ராய் என்ற அதி புத்திசாலி இவளுடைய சகோதரன்.

ஆஸ்ட்ரோ:

மிகப் பெரிய செல்வந்தரின் வளர்ப்புப் பிராணிதான் இந்த ஆஸ்ட்ரோ. ஜார்ஜின் வீட்டில் அடைக்கலம் தேடி இது வருகிறது. வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கக் கூடாது என்று சொல்லி ஒரு இயந்திர நாயை வாங்கி வருகிறார் ஜார்ஜ். அன்று இரவு வீட்டில் திருட வந்தவனை இயந்திர நாய் பிடிக்கத் தவறிவிடுகிறது. ஆனால், ஆஸ்ட்ரோ தற்செயலாக அவனைப் பிடிக்க உதவி செய்துவிடுகிறது.

பேசும் திறன் கொண்டது ஆஸ்ட்ரோ. ஒவ்வொரு வார்த்தையின் முதல் சொல்லையும் ஆங்கில எழுத்தான 'r' என்று எழுத்துடன்தான் இது ஆரம்பிக்கும். உதாரணமாக, ‘ஐ லவ் யூ ஜார்ஜ்', என்பதை ‘ஐ ருவ் ரூ ரோர்ஜ்' என்றுதான் ஆஸ்ட்ரோ சொல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்