எல்லோருக்கும் ஃபிரெண்ட் ஹட்டோரி

By கிங் விஸ்வா

எல்லாக் குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் உடனடியாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஆள் யார்? அவர்களுடைய குளோஸ் ஃபிரெண்ட்தான் இல்லையா? அப்படி ஃபிரெண்ட்ஸ் இல்லாத குழந்தைகள், பெற்றோரின் வேலையால் புது ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகிச் செல்லும் குழந்தைகளின் மிகப் பெரிய ஏக்கம், தனக்கு ஒரு நல்ல ஃபிரெண்ட் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி ஒரு ஃபிரெண்ட் கிடைத்து, அவன் நமக்குப் பாதுகாவலனாக, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆபத்பாந்தவனாக, சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் துணைவனாக இருந்தால், அதைவிட வேறு என்ன வேண்டும்? சின்ன வயதில் குழந்தைகளுக்கு உள்ள ஒரு ஆத்ம நண்பனின் தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் நிஞ்ஜா ஹட்டோரி என்ற ஜப்பானியக் காமிக்ஸ் ஹீரோ.

எப்படி வந்தது?

பள்ளியில் ஒன்றாகப் படிக்க ஆரம்பித்தது முதல் நண்பர்களாக இருந்து, பிற்காலத்தில் இரட்டை கதாசிரியர்களாக மாறியவர்கள் ஹிரோஷி பியூஜிமோட்டோவும் மோட்டோ அபிகோவும். டோரேமான் போன்ற புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள் இவர்கள். அபிகோவுக்கு பள்ளியில் பல வகைகளில் உதவி செய்தவர் பியூஜிமோட்டோ. இந்த ஃபிரெண்ட் ஷிப்பை மனதில் கொண்டுதான் நிஞ்ஜா ஹட்டோரி உருவாக்கப்பட்டது.

புதிய நட்பு

கெனிச்சி மிட்சுபா (10) என்ற சிறுவன் நல்ல உள்ளம் கொண்டவன். ஆனால், படிப்பில் கொஞ்சம் சுமார்தான். பிடிவாதக் குணமும் சோம்பேறித்தனமும் அவனுக்கு இருப்பதால் பெற்றோரும், ஆசிரியர்களும் அவனைக் கண்டிக்கிறார்கள். அவனது வகுப்பில் இருக்கும் கெமுமாக்கி என்ற மாணவனுடன் அடிக்கடி பிரச்சினையில் வேறு அவன் சிக்கிக்கொள்கிறான்.

இந்தச் சூழ்நிலையில்தான் கான்சோ ஹட்டோரி அறிமுகமாகிறான். மிட்சுபாவுக்காக கெமுமாக்கியிடம் அவன் சண்டையிடுகிறான். அது முதல் ஹட்டோரி, அவனுடைய தம்பி ஷீன்ஜோ, இவர்களுடைய பேசும் நாயான ஷிஷிமாரு ஆகியோர் மிட்சுபாவின் குடும்ப உறுப்பினர்களாகி விடுகின்றனர். அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே கதை.

நிஞ்ஜா ஹட்டோரி: நிஞ்ஜா தற்காப்பு கலை மாஸ்டருக்கு உரிய சண்டைத் திறனைப் பள்ளி வயதிலேயே பெற்றவன்தான் ஹட்டோரி, எப்போதும் நீல வண்ண நிஞ்ஜா யூனிஃபார்மே இவனுடைய டிரெஸ். தவறு இழைக்கப்படுவதை அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. எது சரி, எது தவறு என்று ஃபிரெண்ட்ஸுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பான். மாபெரும் வீரனான ஹட்டோரிக்கு இருக்கும் ஒரே பலவீனம் – தவளைகளும் பல்லிகளும். இதைச் சாதகமாக்கிக்கொண்டு ஹட்டோரியை எதிரிகள் கட்டுப்படுத்த முயல்வார்கள்.

நண்பர்கள்

ஷீன்ஜோ: நிஞ்ஜா ஹட்டோரியின் தம்பியான ஷீன்ஜோ, போர்வீரனாகப் பயிற்சி பெற்று வருகிறான். சிவப்பு வண்ண யூனிஃபார்ம் அணிந்த ஷீன்ஜோ, மர ஆயுதங்கள் மூலம் போரிடுவான். சில வேளைகளில் எதிரிகளைக் கட்டுப்படுத்த, தாங்க முடியாத அளவுக்குக் கத்துவான். இந்தப் போர் முழக்கத்தை யாராலுமே தாங்க முடியாமல், உடனே சரண் அடைந்துவிடுவார்கள்.

ஷிஷிமாரு: ஹட்டோரியின் மஞ்சள் நிறப் பேசும் நாயான ஷிஷிமாரு, நினைத்த உருவத்துக்கு மாறும் திறன் பெற்றது. இதற்கு மீனும் சாக்லேட்டும் ரொம்ப பிடிக்கும். சோம்பேறியான இந்த நாய், கோபம் வந்துவிட்டால் நெருப்புப் பந்து போல மாறிவிடும்.

சுபாமி (தமிழில் சோனம்): ஹட்டோரியின் நண்பியான இவள் பல இசைக்கருவிகளைத் திறமையாக வாசிக்கும் திறமை படைத்தவள். பிங்க் வண்ண நிஞ்ஜா உடை அணியும் இவளுக்குக் கெமுமாக்கியை அறவே பிடிக்காது.

எதிரிகள்

கெமுசோ கெமுமாக்கி: உடல் வலிமையும் சண்டையிடும் திறமையும் கொண்ட இவன் கெனிச்சியின் வகுப்பில் படிக்கிறான். பச்சை வண்ண உடையணியும் இவனும் ஒரு நிஞ்ஜா வீரன் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். கெனிச்சியை வீழ்த்த ஒவ்வொரு முறையும் திட்டமிடும் போதெல்லாம் ஹட்டோரியால் தோல்வியடையும் கெமுமாக்கி, மனம் தளராமல் தன்னுடைய முயற்சியைத் தொடர்வான்.

ககேச்சியோ (தமிழில் கியோ): கெனிச்சியின் வீட்டுக்கு அருகிலேயே தங்கி இருக்கும் இந்தக் கருப்பு நிறப் பூனை, ஹட்டோரி மற்றும் நண்பர்களின் பேச்சை ஒட்டுக்கேட்டு அதை கெமுமாக்கியிடம் வந்து சொல்லும். மீனை விரும்பி சாப்பிடும் கியோவுக்கு கெமுமாக்கி பல உத்தரவுகளைக் கொடுப்பான். ஆனால், கியோ அதை எல்லாம் மறந்துவிட்டுத் தூங்கிவிடும். இதற்கும் ஷிஷிமாருவுக்கும் நடக்கும் போட்டியில் ஷிஷிமாருவே ஜெயிக்கும்.

தமிழில்

ஜப்பானிய ஷின் – ஐ நிறுவனமும் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனமும் சேர்ந்து 2013-ம் ஆண்டு முதல் கூட்டாகத் தயாரித்து வரும் இந்தக் கார்ட்டூன் தொடர் உலகெங்கும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நிக்கலோடியன் சேனலில் வரும் இத்தொடர் பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமானது.

உருவாக்கியவர்: மோட்டோ அபிகோ

முதலில் தோன்றியது: 1964 முதல் 1971 வரை (கோரோ கோரோ காமிக்ஸ் இதழில்)

டிவி வடிவம்: 28-09-1981 முதல் 25-12-1987 வரை (மொத்தம் 694 பகுதிகள்)

பெயர்: நிஞ்ஜா ஹட்டோரி (கான்சோ ஹட்டோரி என்பது முழு பெயர்)

வேறு பெயர்: ஹட்டோரி குன்

வேலை: பள்ளி மாணவன் + நிஞ்ஜா வீரன்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்