கதை: மிரட்டும் கொசுப்படை!

By செய்திப்பிரிவு

உர்’ கொசுக் குடும்பம் வருத்தத்தில் இருந்தது. தலைவர் உர்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவர் கொசு வந்து பார்த்துவிட்டு, “உடலில் ரத்தமே இல்லை. ரத்தம் ஏற்றினால்தான் பிழைப்பார்” என்று கூறிவிட்டார்.

“நமக்கெல்லாம் இன்னொருவருக்குக் கொடுக்கும் அளவுக்கு ரத்தம் கிடையாது. அப்பாவுக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது?” என்றது மகன் கொசு.

“பரிணாமத்தில் விலங்குகள், பறவைகள், மனிதர்களுக்கு முன்பு தோன்றியவர்கள் பூச்சிகளாகிய நம் இனத்தவர்தான். இந்தப் பூமியில் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு நமக்குதான் அதிக உரிமை இருக்கிறது. பிள்ளைகள் மூவரும் உடனே கிளம்பி, யாரிடமாவது ரத்தத்தைக் கொண்டுவந்து உங்கள் அப்பாவைக் காப்பாற்ற வேண்டும்” என்றது அம்மா கொசு.

மூன்று கொசுக்களும் கிளம்பின.

“அண்ணா, யாரிடம் ரத்தம் எடுக்கலாம்?”

“விலங்குகள், பறவைகளிடம் ரத்தம் எடுப்பது நமக்குக் கடினம். அவை எல்லாம் நம்மைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள். பரிணாமத்தில் கடைசியாகத் தோன்றி, பூமியையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, எல்லோருக்கும் தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சுவதுதான் சரியான செயலாக இருக்கும்” என்றது அண்ணன் கொசு.

“ஏன் அண்ணா மனிதர்கள் மீது இவ்வளவு கோபம் உனக்கு?”

“மனிதர்கள் உருவாவதற்கு முன்பு இந்தப் பூமியில் எங்கும் பசுமையான தாவரங்கள் இருந்தன. விலங்குகள் ஆனந்தமாக வாழ்ந்தன. பறவைகள் அச்சமின்றி பறந்து சென்றன. எல்லா இடங்களும் சுத்தமானதாக இருந்தன. ஆனால், மனிதர்கள் வந்த பிறகு, பூமியின் தன்மையையே மாற்றிவிட்டனர். அவர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டது. நம்மைப் போன்ற பிற உயிரினங்களுக்கும் இந்தப் பூமி சொந்தம் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அதனால் அழிவு செயல்களில் ஈடுபடுகின்றனர். அதான் அவர்கள் மீது கோபம்” என்றது அண்ணன் கொசு.

“பிறரின் ரத்தத்தை உறிஞ்சும் மனிதர்களின் ரத்தத்தை எடுப்பதுதான் நல்லது அண்ணா. அதோ, அங்கே பாருங்கள். ஒரு மனிதர் மரத்தடியில் படுத்திருக்கிறார். அவரிடம் ரத்தத்தை எடுக்கலாம்” என்றது தங்கை கொசு.

மூன்று கொசுக்களும் அந்த மனிதர் மீது அமர்ந்து, நறுக்கென்று தங்கள் ஊசிப் போன்ற உறிஞ்சுகுழலை வைத்து ரத்தத்தை உறிஞ்சின. உடனே வலியில் அந்த மனிதர் கையை ஓங்கி அடித்தார். ஐயோ, பாவம்… ஒரு கொசு இறந்துவிட்டது.

“ஐயோ… தம்பி இறந்துவிட்டான் அண்ணா. இந்த மனிதர்கள் மோசம்” என்றது தங்கை கொசு.

“அவர்களை நறுக் கென்று கடித்தால் சும்மா இருப்பார்களா, என்ன? இதிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மெதுவாகக் கடிக்க வேண்டும். கடித்த வேகத்தில் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு, அவர்கள் அடிப்பதற்குள் பறந்துவிட வேண்டும். கவனமாக இருந்தால்தான் நாம் உயிர் பிழைக்க முடியும்” என்றது அண்ணன் கொசு.

இரண்டு கொசுக்களும் தாங்கள் கொண்டுவந்த ரத்தத்தை ‘உர்’ கொசுவுக்குக் கொடுத்தன.

“குழந்தைகளே, இந்த ரத்தம் மிகவும் சுவையாக இருக்கிறது. யாரிடமிருந்து கொண்டு வந்தீர்கள்?”

“அப்பா, இது மனித ரத்தம்.”

“ஓ… மற்ற உயிரினங்களின் ரத்தத்தில் உப்பு இருக்காது. மனித ரத்தத்தில் உப்பு இருப்பதால் கூடுதல் சுவையாக இருக்கிறது. நமக்குப் புதிய உணவு கிடைத்திருக்கிறது. உயிர்ச் சேதம் ஏற்படாமல் லாகவமாக உறிஞ்சுவதற்கு ஆண்களுக்குப் பொறுமை இருக்காது. இன்று முதல் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சும் பெரும் பணியைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் உர்.

இதை அனைத்துப் பெண் கொசுக்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டன. அன்று முதல் கொசுக்கள் தங்கள் வாழிடங்களை மனிதர்களுக்கு அருகில் மாற்றிக்கொண்டன. சுத்தமான இடங்களில் வசித்த அவை, சாக்கடைகளிலும் குப்பைமேடுகளிலும் வசிக்க ஆரம்பித்தன.

காலங்கள் கடந்தன. கொசுக்கள் தங்கள் தலைவரை மட்டும் இன்றும் மறக்கவில்லை. மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு, அவர்களின் காது அருகே சென்று ‘உர்’ என்ற தலைவரின் பெயரைச் சொல்லிவிட்டு இன்றுவரை வந்துகொண்டிருக்கின்றன.

அன்று கொசுக்களின் மாநாடு. தங்களின் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்ல மேடை ஏறியது ஒரு கொசு.

“உர் புகழ் வாழ்க! இன்று நாம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறோம். நம்மை அழிப்பதற்கு கோடிக்கணக்கில் மனிதர்கள் செலவு செய்கிறர்கள். என்னென்னவோ மருந்துகளை எல்லாம் கண்டுபிடித்து, விற்பனை செய்கிறார்கள். இதை நாம் எப்படிச் சமாளிப்பது என்று உர் கொசுவின் வாரிசு சொன்னால் நல்லது” என்றது.

“எங்கள் மூதாதையர் உர், மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சச் சொன்னபோது நம்மால் இவ்வளவு பெரிய பாதிப்பை மனிதர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால், அதை நாம் சாத்தியப்படுத்தியிருக்கிறோம். நம் மூலம்தான் மனிதர்களுக்கு ஏராளமான வியாதிகள் பரவுகின்றன. அவர்கள் நம்மை ஒழித்துக் கட்ட நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதே நேரம் கொசுக்களின் உற்பத்தி பெருக்கத்துக்கு மனிதர்களே காரணம் என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. அதை உணர்ந்து, குப்பைகளையும் சாக்கடைகளையும் ஒழித்தால்தான் நம்மை ஒழிக்க முடியும். அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அதுவரை நாம் அச்சப்படத் தேவை இல்லை” என்றது உர் கொசுவின் வாரிசு.

கொசுக்கள் நிம்மதியாக உணவு தேடிக் கிளம்பின. இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது உங்களைக் கடிக்கும் கொசு, உர் தலைவரின் வாரிசாக இருக்கலாம். கவனமாக இருங்கள்.

- செ. நவீன் குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

29 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்