காரணம் ஆயிரம்: விஷ மீன்களின் விருந்து!

By ஆதலையூர் சூரியகுமார்

வீட்டில் உங்கள் அம்மா மீனை வெட்டி, சுத்தப்படுத்திச் சமைக்கும்போது பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய வேலைதான் அது. மீனைக் கடையிலிருந்து வெட்டாமல் வாங்கிவந்தால் அம்மா அலுத்துக்கொள்வதுகூட அதற்காகத்தான். இதற்கே இப்படியென்றால், ஜப்பானில் ஒரு மீனை வெட்டி, சமைக்க மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?

அந்த மீன் பற்றி மூன்று ஆண்டுகளுக்குக் கடுமையான பாடம், பிறகு எழுத்துத்தேர்வு, அதற்குப் பிறகு செய்முறைத் தேர்வு. இவற்றில் தேர்ச்சி பெற்றால்தான் அந்த மீனைச் சமைக்க அனுமதியே கிடைக்கும். பயிற்சி எடுத்துச் சமைக்கும் அளவுக்கு அது என்ன ஸ்பெஷல் மீன்? மூன்று வருடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய காரணம் என்ன?

உண்மையில் ஸ்பெஷல் மீன் எல்லாம் ஒன்றும் இல்லை. அது பெரிய விஷ மீன். கடலில் சில சமயம் புழக்கம் இல்லாத பகுதிகளுக்குள் செல்பவர்கள், விஷ மீன்கள் தீண்டி இறந்து போன செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடலில் தொடர்ந்து மீன் பிடிக்கும் மீனவக் குடும்பங்களுக்கு இது போன்ற விஷ மீன்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியும். அதனால் அதுபோன்ற இடங்களில் மீன் பிடிப்பதை முன்னெச்சரிக்கையாகத் தவிர்த்து விடுவார்கள்.

புதிய சுற்றுலாப் பயணிகள் விஷயம் தெரியாமல் விஷ மீன்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றால், மீனவர்கள் எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். சிலர் உரிய பாதுகாப்போடு ஆராய்ச்சிக்காக இந்த விஷ மீன்களைத் தேடிச் செல்வதும் உண்டு. அப்படியொரு விஷ மீன் பஃபர் ஃபிஷ் (Puffer Fish). இலங்கையில் இம்மீனை ‘பேத்தையன்’ என்று அழைக்கிறார்கள். ‘பலூன் மீன்’ என்றும் சிலர் அழைக்கிறார்கள். இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த உருளை வடிவமாகவும் இருக்கும். இதன் மேல் உதடும், கீழ் உதடும் மற்ற மீன்கள் போல் இல்லாமல் மிகவும் கடினமாகக் கோள வடிவில் இருக்கும். அதனால் இதற்குக் கோள மீன் என்று ஒரு பெயரும் உண்டு.

எதிரிகள் தாக்க வரும்போது தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக்கொள்ளும். அதாவது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும். வந்த எதிரி குழம்பிப் போய் மீனைத் தேடும். அப்படியே சூழலுக்கு ஏற்ப மாறி எஸ்கேப் ஆகிவிடும். பலூன் மீனின் பெயரும், சேட்டையும்தான் காமெடியாக இருக்கிறதே தவிர, இவை கடுமையான விஷத்தன்மை கொண்டவை. எப்படியாவது மீனைப் பிடித்து டேஸ்ட் பண்ணிவிடுவது என்று வைராக்கியத்துடன் வரும் மீன்களிடமிருந்து தப்பிக்க அது கைவசம் வைத்திருக்கும் கலைதான் விஷம்.

இந்த விஷம் தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் நிச்சயம். இந்த விஷம் தாக்கி 24 மணி நேரத்துக்குப் பிறகும் ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் உடல் அசைவின்றி ‘கோமா’நிலையில்தான் இருப்பார். பஃபர் மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த விஷம் உருவாகிறது. செதில்களற்ற உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும்.

24 மணி நேரத்தில் உயிரை எடுக்கக்கூடிய இந்த மீனை மனிதர்கள் சமைத்தும் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். உடல் முழுவதும் விஷத்தை வைத்திருக்கும் இந்த மீனின் முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு உப்பு, மிளகாய், காரம் போட்டுப் பொரித்துச் சாப்பிடுகிறார்கள். சூப் வைத்தும் குடிக்கிறார்கள். ஜப்பானில் பஃபர் மீனைக் கொண்டு தயாராகும் ‘பூகு சூப்’ ரொம்ப பிரபலம். அது மட்டுமல்ல ஜப்பானில் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவும் பஃபர் மீன்தான்.

விஷ மீன்களிலிருந்து அப்படி முழுமையாக விஷத்தை நீக்கி, சமைத்துவிட முடியுமா? அது சிரமம் அல்லவா?. அதனால்தான் இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தருகிறார்கள். ஜப்பானில் பஃபர் மீனைச் சமைக்கக் கட்டாயம் லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். லைசென்ஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடாது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பஃபர் மீனைச் சமைக்கத் தேர்வு எழுதினாலும், சிலர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள். உயிரோடு விளையாடும் சமையல் அல்லவா?

அப்படி உயிரைப் பணயம் வைத்து இந்த மீனைச் சாப்பிடக் காரணம் அதன் ருசிதான் விஷத்தைத்தான் விருந்தாக ஜப்பானியர்கள் சாப்பிடுகிறார்களா? ஆமாம், அவர்களுக்குத்தான் ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்