அறிவியலை வசப்படுத்துவோம்: நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்

By ஆதி

அறிவியல் இன்றி நாமில்லை. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வேண்டுமானால் இன்றைக்குப் பரவலாக மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். இருசக்கர வாகனமோ, பேருந்தோ எதுவாக இருந்தாலும் ஒரு மோட்டார்தான் அந்த வாகனத்தை இயக்குகிறது. அதேபோல குளித்தல், சமைத்தல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு குழாயைத் திறந்தவுடன் நமக்குத் தண்ணீர் வர வேண்டும். இதற்கு தரைமட்டத்திலோ அதற்குக் கீழோ இருக்கும் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீரை ஏற்ற வேண்டும். இதை எப்படிச் செய்வது? மோட்டாரைப் பயன்படுத்துகிறோம்.

மோட்டார் என்பது நவீன வாழ்க்கையில் அத்தியாவசியமாகிவிட்டது. இந்த மோட்டார் எப்படி இயங்குகிறது? இதை நாமே செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு உதவுகிறது எளிய மோட்டார் கருவி. இந்த விளையாட்டுக் கருவியைக்கொண்டு பெரிய பெரிய மோட்டார்கள் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

காற்றில் மிதக்கும் பென்சில்


அறிவியலும் அறிவியல் கோட்பாடுகளும் சிக்கலானவை, புரிந்துகொள்ளக் கடினமானவை என்பது பொதுவான நம்பிக்கை. மேற்கண்டது போன்ற விளையாட்டு அறிவியல் கருவிகளைக் கொண்டு கடினமான அறிவியல் கோட்பாடுகளை, நாமே செய்து பார்த்து எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அது மட்டுமில்லை, அறிவியல் விளையாட்டுகளின் மூலம் சில மாயாஜாலங்களை நிகழ்த்தி நம் நண்பர்களை அசத்தவும் முடியும். ஒரு பென்சிலை காற்றில் மிதக்க வைக்க முடியுமா? அதெப்படி முடியும் என்றுதானே கேட்கிறீர்கள். காந்த ஆற்றல் மூலம் இதைச் செய்யலாம். இதற்கு உதவுகிறது காந்த ஆற்றல் விளையாட்டுக் கருவி. இதன்மூலம் ஒரு பென்சிலை அந்தரத்தில் மிதக்க வைக்கலாம்; காந்த ஆற்றல் எப்படி இயங்குகிறது என்பதையும் சேர்த்துப் புரிந்துகொள்ளலாம்.

கூம்பு விளையாட்டு



‘ஹனாய் டவர்' என்றழைக்கப்படுவது உலகப் புகழ்பெற்ற ஒரு கணிதப் புதிர் விளையாட்டு. 1883-ல் இந்தப் புதிரைக் கண்டறிந்தவர் ஃபிரெஞ்சு கணிதவியலாளர் எடுவார்டு லூகா.

மூன்று குச்சிகளைக் கொண்ட பலகையில் இடது ஓரக் குச்சியில் கீழிருந்து மேலாக ஒரு கூம்பு போல சிறிய வட்டுகள் அடுக்கப்பட்டிருக்கும். இந்தப் புதிருக்கான முக்கிய விதிமுறைகள்: ஒரு நேரத்தில் ஒரு வட்டத்தை மட்டுமே நகர்த்த வேண்டும். எப்போதுமே பெரிய வட்டு கீழேதான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் உள்ள கூம்பு வடிவத்தை கடைசிக் குச்சிக்கு மிகக் குறைந்த நகர்வுகளில் மாற்றுவதுதான் போட்டி. விதிமுறைகளை மீறாமல் கடைசிக் குச்சியில் புதிய கூம்பை உருவாக்க வேண்டும்.

சீன வடிவியல் புதிர்



டான் கிராம் என்பது ஓர் வடிவியல் விளையாட்டு. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகப் புகழ்பெற்றது. டான்கிராம் என்றால் ஏழு பலகைத் துண்டுகள் என்று அர்த்தம். வெவ்வேறு அளவிலான ஐந்து முக்கோணங்கள், ஒரு சதுரம், இரட்டை முக்கோணங்கள் இணைந்தது போன்ற ஒரு நாற்கோணம் ஆகிய ஏழு துண்டுகளைக் கொண்டு பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடும் விளையாட்டு இது. இந்தத் துண்டுகள் ஒவ்வொன்றும் டான் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு உருவத்தை உருவாக்க எல்லாத் துண்டுகளையும் பயன்படுத்த வேண்டும். ஒன்றை ஒன்று ஒட்டி வைக்கலாம். ஒன்றின் மேல் மற்றொன்றை வைக்கக் கூடாது. 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவிய இது, முதல் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களால் அதிகம் விளையாடப்பட்டது. இந்த ஏழு வடிவத் துண்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வடிவங்களை நாமே உருவாக்கி விளையாட முடியும்.

வயதுக்கேற்ற விளையாட்டு

டான் கிராமைப் போலவே ஜியோபோர்டு என்ற பலகையைக் கொண்டும், வடிவியல் வடிவத் துண்டுகளைக் கொண்டும் வடிவியலை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். தோற்றப்பிழையை உருவாக்கும் அரிய படங்களும் ஒரு தொகுப்பாக இந்த அறிவியல் விளையாட்டுக் கருவிகளில் கிடைக்கின்றன. இந்த அறிவியல் விளையாட்டுக் கருவிகளின் விலை ரூ. 60 முதல் ரூ. 350 வரை.

3 வயதுக்கு மேல், 5 வயதுக்கு மேல், 10 வயதுக்கு மேல் என்று ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கு ஏற்ற இந்த அறிவியல் - கணித விளையாட்டுக் கருவிகளை சென்னையைச் சேர்ந்த ‘யுரேகா புத்தக நிறுவனம்' வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு: யுரேகா புக்ஸ்,
30/45, பைகிராஃப்ட்ஸ் சாலை முதல் தெரு,
ராயப்பேட்டை, சென்னை - 14 / 98406 72018

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

கருத்துப் பேழை

4 mins ago

சுற்றுலா

41 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்