திறந்திடு சீஸேம் 06: ஃபேபெரெஜ் முட்டைகள்!

By முகில்

சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதைக் கண்ட உடனே மரியாள், ரோம அரசரிடம் சென்றார். ‘இயேசு உயிர்த்தெழுந்தார்’ என்ற செய்தியைச் சந்தோஷத்துடன் கூறினார். அரசர் அதை நம்பவில்லை. தன் மேசையின் மேலிருந்த முட்டையைச் சுட்டிக்காட்டி, ‘இந்த முட்டை சிவப்பாக மாறாதவரை, இயேசு உயிர்த்தெழுந்திருக்கவில்லை’ என்று கூறினார். அவர் சொல்லி முடித்த மறுகணமே அந்த முட்டை ரத்தச் சிவப்பாக மாறியது என்று சொல்லப்படுவது உண்டு.

இதனால் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டையைக் கருதுகிறார்கள். ஆகவே ஈஸ்டர் பண்டிகையின்போது ஒருவருக்கொருவர் சிவப்புச் சாயம் பூசப்பட்ட அல்லது அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைப் பரிசளிக்கும் வழக்கம் உருவானது.

1885-ல் ரஷ்ய ஜார் மன்னரான மூன்றாம் அலெக்சாண்டர், தன் மனைவியும் பேரரசியுமான மரியாவுக்கு ஈஸ்டர் முட்டை ஒன்றைப் பரிசளித்தார். முழுவதும் தங்கத்தாலான முட்டை அது. கோழியின் முட்டை போன்று தெரிவதற்காக அதன் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் எனாமல் பூசப்பட்டிருந்தது. முட்டையை இரண்டாகத் திறந்தால் அதனுள் தங்கத்தாலான மஞ்சள் கரு உருண்டையாக இருந்தது.

அதையும் திறந்து பார்த்தால், தங்கத்தாலான கோழியின் உருவம் வைக்கப்பட்டிருந்தது. கோழியின் கண்களில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோழிக்குள்ளும் ஆச்சரியம் காத்திருந்தது. அதைத் திறந்தால் உள்ளே தங்கத்தில் வைரம் பதிக்கப்பட்ட ராஜ கிரீடத்தின் சிறிய மாதிரி வடிவம் ஒன்று இருந்தது. சங்கிலியில் கோத்துக்கொள்ளும்விதமாக மாணிக்கத்தாலான பதக்கம் ஒன்றும் இருந்தது.

மரியா, அந்த ஈஸ்டர் முட்டையைக் கண்டு வியந்தார். அலெக்சாண்டருக்கும் மகிழ்ச்சி. அந்த முட்டையை அருமையாக உருவாக்கியவர் ரஷ்யாவைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான பீட்டர் கார்ல் ஃபேபெரெஜ். பேரரசர், ஃபேபெரெஜுக்கு ராஜ குடும்பத்தின் ஆஸ்தான நகை வடிவமைப்பாளர் என்ற பதவி கொடுத்து கௌரவித்தார்.

ஒவ்வோர் ஈஸ்டருக்கும் பேரரசரை மகிழ்விக்கும்விதமாகப் பேரழகு முட்டையை வடிவமைக்கத் தொடங்கினார் ஃபேபெரெஜ். அதற்கென தனி குழு ஒன்றை வைத்துக்கொண்டார். அதில் பேரரசரின் தலையீடு எதுவும் இருக்கவில்லை. செலவு பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு முறையும் தனித்துவமான அழகுடன், வடிவமைப்புடன், ஆச்சரியங்களுடன் ஈஸ்டர் முட்டைகளை வடிவமைத்து அசத்தினார் ஃபேபெரெஜ்.

1894-ல் பேரரசர் அலெக்சாண்டர் இறந்து போனார். அடுத்து பேரரசராகப் பொறுப்பேற்ற அவரது மகன் இரண்டாம் நிகோலஸும், தொடர்ந்து ஈஸ்டர் முட்டைகளை வடிவமைக்கும்படி ஃபேபெரெஜைக் கேட்டுக்கொண்டார். சில வருடங்களில் இரண்டு, மூன்று ஈஸ்டர் முட்டைகள்கூட வடிவமைக்கப்பட்டன. ராஜ குடும்பத்தினர் அல்லாமல் வெளியே சில செல்வந்தர்களும், வேறு அரசர்களும் ஃபேபெரெஜிடம் ஈஸ்டர் முட்டைகளை வடிவமைக்கச் சொல்லி வாங்கிக் கொண்டனர்.

1917வரை ஃபேபெரெஜ் அரச குடும்பத்தினருக்காக மட்டும் 50 ஈஸ்டர் முட்டைகளை வடிவமைத்திருந்தார். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருந்தது. 1917 ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தது. ஜார் ஆட்சி ஒழிக்கப்பட்டது. பேரரசர் இரண்டாம் நிகோலஸும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். சோவியத் ஒன்றியம் மலர்ந்தது.

ஃபேபெரெஜ் தனது குடும்பத்துடன் ரஷ்யாவிலிருந்து தப்பி, 1920-ல் சுவிட்சர்லாந்தில் இறந்துபோனார். சரி, அவர் படைத்த பேரழகு ஈஸ்டர் முட்டைகள் என்னவாயின?

sesame-2jpg

1917. முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜெர்மானியப் படைகள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பக் நகரத்துக்குள் புகுந்துவிடும் அபாயம் இருந்தது. ஆகவே, சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரான லெனின், ஃபேபெரெஜ் உருவாக்கிய ஈஸ்டர் முட்டைகள் உள்ளிட்ட ராஜ குடும்பத்தின் செல்வங்களை கிரெம்ளின் நகரக் கோட்டையில் பத்திரமாகப் பதுக்கி வைக்கச் சொன்னார். ஆனால், அப்போதே சில முட்டைகள் காணாமல் போனதாகத் தகவல்.

லெனினுக்குப் பிறகு பதவிக்கு வந்த ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஃபேபெரெஜ் ஈஸ்டர் முட்டைகள் உள்ளிட்ட செல்வங்கள் பலவும் விற்கப்பட்டன. தேச வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், பிற செலவினங்களுக்காகவும் அந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது. இதனால் முட்டைகள் பலவும், ரஷ்யாவைத் தாண்டி பிற தேசங்களுக்கும் சென்றன. பலரது கைகளுக்கும் மாறின.

பிறகு, ஜார் குடும்பத்தினருக்காக ஃபேபெரெஜ் உருவாக்கிக் கொடுத்த முட்டைகள் எங்கே, யார் கைகளில் இருக்கின்றன என்ற விவரங்கள் சேகரிப்பட்டன. 50 ஈஸ்டர் முட்டைகளில் 43 முட்டைகள் எங்கிருக்கின்றன என்ற விவரம் தெரிந்தது. 10 முட்டைகள் கிரெம்ளின் அரண்மனையில் இன்றும் உள்ளன.

விக்டர் வெக்ஸெல்பெர்க் என்ற ரஷ்யப் பணக்காரரிடம் 9 முட்டைகள் இருக்கின்றன. அமெரிக்காவின் வெர்ஜினியா அருங்காட்சியகத்தில் 5, லண்டன் அரண்மனையில் 3, நியூயார்க் அருங்காட்சியகத்தில் 3, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் இன்னும் சில முட்டைகள், ஜெர்மனி, கத்தார் என்று வெவ்வெறு நாடுகளில் மற்ற முட்டைகள் இருக்கின்றன.

மூன்றாம் அலெக்சாண்டருக்கு ஃபேபெரெஜ் முதன் முதலில் செய்து கொடுத்த தங்கக் கோழி முட்டை உள்ளிட்ட ஏழு முட்டைகள் மட்டும் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் பலரும் அந்த விவரங்களை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

41 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்