திறந்திடு சீஸேம் 4: தென் ஆப்பிரிக்காவின் முதல் வைரம்!

By முகில்

ஐந்து கல் விளையாட்டு தென் ஆப்பிரிக்காவிலும் உண்டு. பல நூற்றாண்டுகள் பழமையான விளையாட்டு அது. அந்த விளையாட்டுக்காகக் கூழாங்கற்களைச் சேகரிப்பது பதினைந்து வயது எராமஸ் ஜேக்கப்ஸின் வழக்கம். அன்றைக்கும் எராமஸ் தன் தங்கையுடன் ஆரஞ்சு நதிக்கரையோரமாகத் திரிந்து கொண்டிருந்தான். கூழாங்கற்களைச் சேகரித்தான். அப்போது பளபளப்பான உருண்டையான கல் ஒன்று எராமஸுக்குக் கிடைத்தது. எடுத்து வைத்துக்கொண்டான். தென் ஆப்பிரிக்க தேசத்தின் தலைவிதியையே மாற்றிய கல் அதுதான். 1867-ல் இது நிகழ்ந்தது.

எராமஸின் தந்தை டேனியல், டச்சுக்காரர். அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் கேப் மகாணத்தில் கேப் காலனியில் வசித்து வந்தார்கள். தொழில் விவசாயம். எராமஸ், தந்தைக்குப் பண்ணையில் உதவி செய்வான். பொழுதைபோக்குவதற்காக ஐந்து கல் விளையாடுவான். ஒருநாள் அவரும் தங்கையும் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டில் வசித்த ஸ்கால்க் வான் நைகெர்க், எராமஸ் கையில் இருந்த பளபளப்பான கல்லைக் கவனித்தார். வாங்கிப் பார்த்தார். ‘நிச்சயம் இது சாதாரண கல் அல்ல’ என்று அவர் கணித்தார்.

‘‘இந்தக் கல்லை எனக்குத் தருகிறீர்களா? எவ்வளவு பணம் வேண்டும்?” என்று எராமஸின் தாயிடம் ஸ்கால்க் கேட்டார். ‘‘பணமெல்லாம் எதற்கு? நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று எராமஸின் தாய் அதன் மதிப்பு தெரியாமல் கொடுத்துவிட்டார். ஸ்கால்க் அந்தக் கல்லுடன் ஜான் ஓ’ரெய்லி என்ற வியாபாரியைச் சந்தித்தார். கல்லைக் கொடுத்தார். அவர், கிரஹாம்ஸ்டன் நகரத்தில் வசிக்கும் வில்லியம் அதெர்ஸ்டோன் என்ற ஆய்வாளருக்கு அதனைச் சாதாரண தபாலில் அனுப்பி வைத்தார். அதெர்ஸ்டோன், இதுபோன்ற கற்களை ஆய்வு செய்வதில் வல்லவர். அவர் இந்தக் கல்லை ஆராய்ந்தார். ‘இது பழுப்பும் மஞ்சளும் கலந்த வைரக்கல். இதன் எடை 21.15 கேரட்’ என்று கண்டறிந்தார். வேறு சில ஆய்வாளர்களும் அது வைரம்தான் என்று உறுதி செய்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வைரம் அதுதான். ஆகவே அதற்கு ‘யுரேகா’ என்ற பெயர் வைக்கப்பட்டது. யுரேகா என்றால் கிரேக்க மொழியில் ‘புதிய கண்டுபிடிப்பு’ என்று பொருள்.

அதெர்ஸ்டோன், வைரம் குறித்த தகவலை ஜான் ஓ’ரெய்லிக்கு அனுப்பி வைத்தார். அவர் ஸ்கால்க்கிடம் தகவலைப் பகிர்ந்தார். அன்றைய மதிப்பில் சுமார் 48 ஆயிரம் ரூபாய்க்கு யுரேகா வைரம் விற்கப்பட்டது. அதை பிலிப் வொட்ஹவுஸ் வாங்கினார். அவர் அப்போது பிரிட்டிஷ் காலனியின் கவர்னராக இருந்தார். 1867-ல் பாரிஸில் நடந்த கண்காட்சி ஒன்றில் யுரேகா வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இல்லை, யுரேகா வைரத்தின் மாதிரிதான் வைக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையான வைரம், விக்டோரியா ராணி பரிசோதிப்பதற்காக பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்கிறார்கள்.

யுரேகா வைரம் கண்டெடுக்கப்பட்ட பின், அந்தத் தகவல் தென் ஆப்பிரிக்கா எங்கும் வேகமாகப் பரவியது. அங்கே வைர வளம் இருப்பதை அறிந்து பலரும் வைர வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஸ்கால்க் மேலும் வைரங்களைத் தேடி அலைந்தார். ஸான்ஃபோண்டைனில் வசித்த மந்திரவாதியிடம் வைரம் ஒன்று இருப்பதை அறிந்து, பேச்சு வார்த்தை நடத்தினார். ஸ்கால்கிடம் இருந்த மொத்த சொத்து என்பது 500 ஆடுகள், 10 எருதுகள், ஒரு குதிரை. அனைத்தையும் அந்த மந்திரவாதியிடம் கொடுத்தார். அந்த வைரத்தை வாங்கி வந்தார். ‘தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திரம்’ என்று பெயரிடப்பட்ட அந்த வைரத்தைச் சுமார் 11 லட்சத்துக்கு விற்று லாபம் பார்த்தார்.

டி பியர்ஸ் (De Beers) சகோதரர்கள் அங்கே பண்ணை விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிலத்தைக் கேட்டு பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் நச்சரித்தனர். காரணம் அவர்கள் நிலத்தில் வைரச்சுரங்கமே இருக்கலாம் என்று கணக்குப் போட்டனர். மிகக் குறைந்த விலைக்குத் தங்கள் பண்ணை நிலத்தை விற்றுவிட்டு, டி பியர்ஸ் சகோதரர்கள் கிளம்பினார்கள். பிறகு உலகின் மிகப் பெரிய வைரச்சுரங்கமே அங்கே உருவானது. அதன் உரிமையாளர் செஸில் ரோட்ஸ். சுரங்கத்துக்கான பெயர் ‘டி பியர்ஸ்’ என்று வைக்கப்பட்டது. இன்றைக்கு உலக வைர வணிகத்தில் பெரும்பங்கு டி பியர்ஸ் மூலமாகத்தான் நடைபெறுகிறது.

விக்டோரியா ராணியிடம் காண்பிக்கப்பட்ட பிறகு, யுரேகா வைரம் அழகான வடிவில் வெட்டப்பட்டது. அதன் எடை 10.73 கேரட் ஆனது. பிறகு பலரது கைகளுக்கும் யுரேகா கைமாறியது. 1947-ல் ஓர் ஏலத்தில் யுரேகா வைரம் விற்கப்பட்டது. அப்போது ஒரு பிரேஸ்லெட்டுடன் அது பொருத்தப்பட்டிருந்தது.

1967. யுரேகா கண்டெடுக்கப்பட்ட நூறாவது ஆண்டில் டி பியர்ஸ் நிறுவனம் அதனை வாங்கியது. தென் ஆப்பிரிக்காவின் முதல் வைரம். அதற்குப் பிறகுதான் தேசத்தின் தலையெழுத்து, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை எல்லாமே மாறியது. இனி யுரேகா வைரம் தென் ஆப்பிரிக்காவில்தான் இருக்க வேண்டும். அந்த மக்களுக்கும் வைரங்களை அள்ளித் தரும் அந்த மண்ணுக்கும் செய்யும் மரியாதை இதுதான் என்று டி பியர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. கிம்பெர்லி நகர அருங்காட்சியத்தில் யுரேகா வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இன்றைக்கும் அங்குதான் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இனி அது ஒருபோதும் விற்கப்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

சுற்றுலா

54 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

1 min ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்