மாயமில்லை, மந்திரமில்லை

By ஆதி

சீனாவில் சாங்க், வாங், குவாங் என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஒரு நாள் தங்கள் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்க்க அவர்கள் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார்கள்.

"நன்றாகப் போய் வாருங்கள் மகன்களே" என்று அவர்களை வழியனுப்பிய அவர்களுடைய அப்பா, "அதற்கு முன் ஒரு விஷயம். உங்கள் தேடுதலின்போது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும்கூட, அதை நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள். உங்கள் கவனத்தை எப்போதும் சிதறவிட்டு விடாதீர்கள்" என்றார்.

நிச்சயமாக அதை மறக்க மாட்டோம் என்று அவர்கள் மூன்று பேரும் உறுதி கூறினார்கள்.

பிறகு மூன்று பேரும் நடந்து செல்ல ஆரம்பித்தார்கள். பல நாட்கள் நடந்து சென்ற பிறகு, " ஒரு குதிரை இந்த வழியாக நடந்து போயிருக்கிறது. இந்தச் சேற்றில் அதன் காலடித் தடம் இன்னும் காயாமல் பதிந்து இருப்பதைப் பார்த்தீர்களா? அந்தக் குதிரை இங்கே நின்றிருக்கிறது. அதற்குப் பிறகு குதிரையின் காலடித் தடத்தைக் காணவில்லை?" என்று வாங் சொன்னான்.

"வாங்! நீ சொல்வது சரி. இங்கே ஒரு சிறு குழந்தையின் காலடித் தடமும், ஒரு பெண்ணின் காலணித் தடமும்கூடக் காணப்படுகின்றன" என்றான் குவாங்.

"நீ சொல்வதும் சரிதான் குவாங்" என்றான் சாங்க்.

அவர்கள் கொஞ்ச தூரம் நடந்த பிறகு, "அவர்கள் எங்கே? அவர்கள் எங்கே" என்று தேடிக்கொண்டு குதிரையில் ஒரு வியாபாரி அந்தப் பகுதியில் நுழைந்தார்.

"உங்கள் முகம் கவலை தோய்ந்திருக்கிறது. யாரையோ தேடுகிறீர்களா?" என்று மூன்று சகோதரர்களும் கேட்டார்கள்.

"ஆமாம் தேடுகிறேன். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் எங்கே?"

" ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு குதிரை ஆகிய மூன்றையும் நீங்கள் தேடுகிறீர்கள், இல்லையா?"

"ஆமாம், நீங்கள் சொல்வது சரி. எனது மகன், மனைவி ஆகியோருடன் சந்தையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். அவர்கள் மற்றொரு குதிரையில் வந்துகொண்டிருந்தார்கள். கூட்டத்தில் அவர்களைத் தவறவிட்டுவிட்டேன். அவர்களை எங்கே பார்த்தீர்கள்?"

"அவர்களை நாங்கள் பார்க்கவில்லை."

"என்னது பார்க்கவில்லையா? ஆனால், அவர்களைத்தான் நான் தேடுகிறேன் என்று எப்படி உங்களுக்குத் தெரிந்தது?"

"நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லையே"

"அடத் திருடர்களா. எனது மனைவி, குழந்தையைப் பற்றி அப்புறம் உங்களுக்கு எப்படித் தெரியும். இந்த விவகாரத்தைப் பற்றி மன்னரிடம் முறையிடுவேன் " என்றான் அந்த வியாபாரி.

"அய்யா, விஷயத்தை முழுமையாகக் கேளுங்கள்..."

ஆனால், அந்த ஆள் அதற்கெல்லாம் காத்திருக்கவில்லை. நேராக மன்னரிடம் போனான்.

"இது எப்படி நடந்தது என்று முதலில் சொல்லுங்கள்" என்று மூன்று சகோதரர்களிடம் மன்னர் கேட்டார்.

"மகாராஜா, நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சேற்றில் புதிதாகப் படிந்த காலடித் தடங்கள் இருப்பதைப் பார்த்தோம்" என்றார்கள் சகோதரர்கள்.

அவர்கள் சொல்வதை எப்படி நம்புவது என்று மன்னருக்குக் கேள்வி எழுந்தது. அதற்கு ஒரு பரிசோதனை நடத்திப் பார்க்கத் தீர்மானித்தார்.

அரசவைக் காவலாளிகளை அழைத்த மன்னர், ஒரு பெட்டியை எடுத்து வரச் சொன்னார். பிறகு அந்தச் சகோதரர்களிடம் "இந்தப் பெட்டியைத் திறக்காமலேயே அதற்குள் என்ன இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

பெட்டியை நன்கு உற்றுக் கவனித்த மூன்று சகோதரர்களும், "அந்தப் பெட்டிக்குள் எடை குறைந்த ஒரு பொருள் இருக்கிறது. ஏனென்றால், அரண்மனைச் சேவகர்கள் கஷ்டப்படாமல் அதைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்” என்று வாங் சொன்னான்.

“உள்ளே ஏதோ ஒரு பொருள் இருக்கிறது. அது சிறியதாகவும், உருளும் தன்மையுடனும் இருக்க வேண்டும். ஏனென்றால், பெட்டிக்குள் அது உருண்டு ஓடுகிறது. அது எளிதாக நகர முடியவில்லை, தடுக்கித் தடுக்கி உருண்டு கொண்டிருக்கிறது” என்றான் சாங்க்.

“அநேகமாக, அது ஆப்பிளாக இருக்க வேண்டும். ஆப்பிள் சீசன் தொடங்கவில்லை என்பதால், அது காயாகவே இருக்கலாம்" என்று குவாங் சொன்னான்.

மன்னருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, " இப்போது பெட்டியைத் திறங்கள். சகோதரர்கள் சொல்வது உண்மைதானா பார்ப்போம்" என்றார்.

பெட்டி திறக்கப்பட்டது. பழுக்காத பச்சை நிற ஆப்பிள் உள்ளே இருந்தது.

"ஆஹா! அற்புதம். நீங்கள் மூவரும் உண்மையைத்தான் பேசியிருக்கிறீர்கள். எதையும் கவனமாக உற்றுக் கவனிக்க வேண்டும். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வியாபாரி, ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்திவிட்டு இந்த மூன்று இளைஞர்களையும் எங்கே பார்த்தீர்களோ, அங்கே செல்லுங்கள். பிறகு, உங்கள் குழந்தையும் மனைவியும் எந்தப் பக்கம் போயிருக்கிறார்கள் என்று தேடுங்கள்" என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து, வியாபாரியை அனுப்பி வைத்தார்.

அந்த மூன்று சகோதரர்களையும் தன் அரசவை ஆலோசனைக் குழுவில் மன்னர் சேர்த்துக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்