இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு கோப்பை தங்கம்

By மருதன்

 

ட படவென்று அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. யாரோ, என்னவோ என்று நினைத்து கதவைத் திறந்து பார்த்தார்கள். ஒரு பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி தன் உதவியாளருடன் நின்றுகொண்டிருந்தார். ஐயோ இவர் ஏன் வீட்டுக்குவருகிறார் என்று வீட்டில் இருந்தவர்கள் பயந்தாலும், பயத்தை வெளியில் காட்டாமல் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார்கள். வராதீர்கள் என்று சொன்னால் மட்டும் போய்விடவா போகிறார்கள்?

அந்த அதிகாரி உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தார். பிறகு தன் உதவியாளரைப் பார்த்து கண்ணசைத்தார். உடனே உதவியாளர் தன்னுடைய பையைத் தோளில் இருந்து இறக்கினார். உள்ளே இருப்பதை ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைத்தார். முதலில் ஒரு சிறிய மண்ணெண்ணெய் அடுப்பு. ஒரு கெண்டி. ஒரு பாத்திரத்தில் பால். கொஞ்சம் சர்க்கரை. கோப்பைகள். ஒரு சிறிய பொட்டலம். வீட்டில் இருந்தவரைப் பார்த்து பிரிட்டிஷ் அதிகாரி சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இவர் என்ன செய்கிறார் என்று கவனியுங்கள். எல்லோரும் உட்காருங்கள், யாரும் பயப்படவேண்டாம்.

உதவியாளர் அவர்களிடம் தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். அடுப்பைப் பற்ற வைத்தார். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், பொட்டலத்தைப் பிரித்தார். அதிலிருந்து சிறிது எடுத்து தண்ணீரில் போட்டார். கவனியுங்கள், கவனியுங்கள் எவ்வளவு போடுகிறார் என்று பாருங்கள் என்று குரல் கொடுத்தார் அதிகாரி. அவர் சொல்லாமலேயே எல்லோரும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்கள். குபுக் குபுக்கென்று கொதித்துக்கொண்டிருந்த தண்ணீர், இப்போது தங்க நிறத்தில் மின்ன ஆரம்பித்திருந்தது. அந்த அறை முழுக்க புதிய வாசம் பரவ ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் கொதிக்க விட்டால் பாத்திரத்தைவிட்டு தண்ணீர் வெளியில் குதித்துவிடும் என்னும் கட்டத்தில் சரியாக அந்த உதவியாளர் அடுப்பை அணைத்தார்.

ஓர் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய திருப்தியோடு அந்தத் தங்க நிறத் தண்ணீரை எடுத்து (ஆ… அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எல்லோரும் கவனித்துக்கொண்டிருப்பதைக் கவனியுங்கள்!) கையோடு கொண்டுவந்திருந்த கோப்பைகளில் அளவு பார்த்து நிரப்பினார். பாலை எடுத்து அளவோடு கலந்தார். என் வேலை முடிந்தது என்பதுபோல் நிமிர்ந்து அதிகாரியைப் பார்த்தார்.

அதிகாரி இப்போது நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார். இதோ இங்குள்ள கோப்பையை எடுத்துப் பருகுங்கள். இது உடலுக்கு நல்லது. குடித்துப் பார்த்துவிட்டு எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள். ஆளுக்கொரு கோப்பையை அங்கிருந்தவர்கள் எடுத்துக்கொண்டார்கள். குடித்து முடித்த பிறகு ஒரே குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். ’அருமை, மிகவும் பிடித்திருக்கிறது ஐயா. இதன் பெயர் என்ன?’

அந்த அதிகாரி பெருமிதத்துடன் சொன்னார். இதன் பெயர் டீ. இதோ உங்களுக்கு இலவசமாக ஒரு பொட்டலம் எடுத்துவந்திருக்கிறேன். இதேபோல் வெளியிலும் கிடைக்கும். தினமும் காலை எழுந்தவுடன் சாப்பிடுங்கள். நான் வரட்டுமா?

29chsuj_Idam.jpgright

அவர் போனபிறகு கதவைச் சாத்தினார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் முகத்தைச் சுளித்துக்கொண்டார்கள். டீயாம், டீ! வயிற்றை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. எப்படித்தான் இதை இந்த வெள்ளையர்கள் குடிக்கிறார்களோ! ஆமாமாம், நல்ல பாலை ஏதோ பொடி கலந்து வீணாக்கிவிட்டார்கள். ஐயோ, இதைத் தினமும் போட்டுக் குடிக்கவேண்டும் என்று வேறு சொல்கிறாரே என்றார் மூன்றாவது நபர். அதிகாரி போய்விட்டாரா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர் கொடுத்த பொட்டலத்தை ஜன்னல் வழியாக வீசியெறிந்தார்கள்.

இப்படித்தான் தேநீரை வரவேற்றுக் கொண்டாடியது இந்தியா. எப்படியாவது இந்தியர்களைத் தேநீர் சுவைக்குப் பழக்கப்படுத்திவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று பார்த்தது பிரிட்டிஷ் காலனி அரசு. இந்தியர்கள் மயங்கினால்தானே? தங்க நிறத்தில் மின்னினாலும் சரி, வைரம்போல் கண் சிமிட்டினாலும் சரி, வேண்டவே வேண்டாம். பால் போதும் எங்களுக்கு என்று சொல்லிவிட்டார்கள். அசாமில் மிகப் பெரிய தேயிலைத் தோட்டங்களை வெற்றிகரமாக அமைத்துவிட்டது காலனி அரசு. உற்பத்தியும் பெருகிக்கொண்டே போகிறது. உலகமே ஆஹா ஓஹோ என்று பாராட்டி வாங்கிக் குடிக்கிறது. இந்தியர்கள் மட்டும் ஏன் மசிய மாட்டேன் என்கிறார்கள்?

தொடர்ந்து வீட்டுக்கு வீடு அதிகாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். சுடச்சுடப் போட்டு கையில் கொடுத்து ஆசை காட்டினார்கள். அப்போதும் பலனில்லை. பிறகொருநாள் யாரோ சொன்னார்கள். தேநீர் குடித்தால் வயிற்று வலி போகிறது, காய்ச்சல் குறைகிறது, இருமல் மறைகிறது, தலைவலி பறந்து போகிறது. ஏன் இதை மருந்துபோல் நினைத்து கஷ்டப்பட்டு குடித்துவிடக்கூடாது?

கண்ணை மூடிக்கொண்டு ஒரே வாயில் விழுங்கினார்கள். இருமல் மருந்து சாப்பிடுவோமே அப்படி! வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் மட்டும் கடைக்குப் போய் தேயிலை வாங்கிவந்து போடுவார்கள். காலை எழுந்து ஒருநாள் குடித்துப் பார்த்தார்கள். பரவாயில்லை, ஓரளவு நன்றாகவே இருக்கிறது என்று மறுநாளும் குடித்தார்கள். விருந்தினர்கள் வரும்போது கலந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். வெளியில் போய்விட்டு, களைப்பாக வரும்போது அருந்திப் பார்த்தார்கள். அப்படியொன்றும் மோசமில்லை என்று தோன்றியது.

தேநீர் பொட்டலத்தை வீசியெறிந்ததைப்போலவே ஒரு நாள் பிரிட்டிஷ் அரசையும் ஜன்னல் வழியாக இந்தியர்கள் தூக்கிப் போட்டார்கள். ஆனால் தேநீரை அதற்குப் பிறகு வீசவில்லை. தங்கம்போல் மின்னிய தேநீர் அனைவரையும் மயக்கிவிட்டது. ஆனால் ஒரே ஒரு வருத்தம். யாரும் இப்போது கதவைத் தட்டி உள்ளே வந்து தேநீர் போட்டுக் கொடுப்பதில்லை. இந்த வழக்கத்தை ஏன் நம் அதிகாரிகள் ஆரம்பித்து வைக்கக் கூடாது?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்