கடல் மீன் ஏன் உப்புக் கரிப்பதில்லை?

By வி.தேவதாசன்

நிலா டீச்சர் குடும்பத்தினர் கடற்கரைக்குச் சென்றி ருந்தனர். ரஞ்சனியும் கவினும் கடலில் கால் நனைத்து மகிழ்ந்தார்கள். வேகமாக வரும் அலை தள்ளி இருவரும் கீழே விழுவதும், அலை வரும் நேரத்தில் மேலே குதித்து எழும்புவதுமாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென வேகமாக வந்த அலை ஒன்று கவினைக் கீழே தள்ளிப் புரட்டிவிட்டது. தண்ணீரில் விழுந்ததால், கவின் வாய்க்குள் கடல் நீர் புகுந்து விட்டது. கடல் நீர் உப்புக் கரித்ததால், தூ.. தூ.. என துப்பிக்கொண்டே இருந்தான். அவனைப் பார்த்து ரஞ்சனி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ரொம்ப நேரமா அலைல நிக்கிறீங்க. நேரமாச்சு, கரைக்கு வாங்க” என்று நிலா டீச்சருடன் கரையில் உட்கார்ந்திருந்த அப்பா குரல் கொடுத்தார்.

என்றாலும், இருவரும் தொடர்ந்து கடல் நீரில் விளை யாடிக்கொண்டே இருந்தார்கள். தன்னைப் பார்த்துச் சிரித்த ரஞ்சனியைத் தண்ணிக்குள் தள்ளினான் கவின்.

“போதும் வாங்க ரெண்டு பேரும்” என்று இப்போது நிலா டீச்சரும் கூப்பிட்டார்.

கரையேற மனசே இல்லாமல், இருவரும் மெதுவாகக் கரையேறி வந்தார்கள். கடல் நீரைக் குடித்ததால் இப்போதும் துப்பிக்கொண்டிருந்த கவினைப் பார்த்துக் கேலி செய்தாள் ரஞ்சனி.

“போதும் ரஞ்சனி. அவன் அழுதுருவான். இதோட விட்டுடு” என்றார் நிலா டீச்சர்.

“அய்யோ. சரியான உப்பு. தாங்கவே முடியலம்மா” என்றான் கவின்.

அவன் சொன்னதைக் கேட்டு இப்போது அனைவருமே சிரித்துவிட்டனர்.

இப்போது கவினுக்கு திடீரென ஒரு கேள்வி பிறந்தது.

“கடல் நீர் இப்படி உப்பு கரிக்குதே. ஆனா, கடல் நீரில் வாழும் மீனைச் சாப்பிடுறப்ப மட்டும் உப்பு கரிப்பதில்லையே. இது எப்படிம்மா?” என்று கேட்டான் கவின்.

“பரவாயில்லை கவின். குப்புற விழுந்து கடல் நீரை குடிச்சதால, உனக்கு நல்ல கேள்வி கிடைச்சிருக்கு” என்று கேலி செய்தார் நிலா டீச்சர்.

“அம்மா ரஞ்சனியை மாதிரி நீங்களும் கேலி செய்யாதீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றான் கவின்.

“சரி.. சரி.. சொல்றேன். உண்மையிலேயே இது ரொம்ப நல்ல கேள்விதான்.

உப்பு நிறைந்த கடல் நீரில மீன்கள் வசித்தாலும், அந்த உப்போட தாக்கம் அவற்றின் உடலுக்குள்ள செல்லாதபடி தடுக்கும் தகவமைப்பு மீன்கள் கிட்ட இருக்கு. மனுஷங்க உள்ளிட்ட பாலூட்டிகள் நுரையீரலால் சுவாசிக்கிறோம். ஆனால், மீன்கள் செவுள்களால் சுவாசிக்கும். அதாவது மீன்கள் வாயால் நீரை உறிஞ்சிட்டு, செவுள்கள் வழியாக வெளி யேற்றும். அப்போது செவுள் பகுதியில் இருக்குற ஏராளமான நாளங்கள் நீரினுள் கரைந்திருக்கிற ஆக்சிஜனை மட்டும் உறிஞ்சி உடலுக்குள்ள அனுப்பும். நீரில் கரைந்திருக்கும் உப்பு உள்பட மற்ற அனைத்தும் நீரோட சேர்ந்து கழிவுகளா வெளியே வந்துடும்.

அதேபோலத்தான் உண்ணும் உணவுப் பொருட் கள்ல உப்பு இருந்தாலும், தேவைக்கு அதிகமாக இருக்குற உப்பை கழிவா வெளியேற்றும் பணியை உணவு மண்டலம் செய்கிறது. ஆகவே, உப்பு நிறைந்த தண்ணிக்குள்ள வசித்தாலும், அந்த உப்பு மீன்களோட உடலுக்கு செல்லாமல் தடுக்கும் தகவமைப்பு உள்ள தால மீன்களின் சதைப் பகுதியை நாம சாப்பிடுறப்ப உப்பு கரிக்கிறதில்ல” என்று விளக்கமளித்தார் நிலா டீச்சர்.

“அம்மா கவினுக்கும் இப்படி ஒரு தகவமைப்பு இருந்தால் கடல் தண்ணியை குடிசிட்டு தூ… தூ…ன்னு துப்பாம இருந்திருப்பான்லம்மா” என்று ரஞ்சனி கூறவும், கவின் உள்பட எல்லோருமே சிரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

க்ரைம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்