‘புரட்சிக்கு வெறும் 12 பேர் போதும்!’

By ஆசை

இந்தப் பக்கம் 82 பேர். அந்தப் பக்கம் அரசின் ராணுவம், அதன் பக்கபலமாக அமெரிக்கா. காலம் 1959, நாடு கியூபா. பார்வையாளர்களாக அங்கே நாம் இருந்தால் அந்த 82 பேருக்கும் என்ன சொல்வோம்? “புத்திசாலித்தனமாகத் தப்பித்துப்போய்விடுங்கள். எந்த தைரியத்தில் இவ்வளவு சிறு படையைக் கொண்டு அமெரிக்காவை வீழ்த்த நினைத்தீர்கள்?” என்றுதானே சொல்வோம்.

அப்படி நாம் சொல்லியிருந்தால் அந்த 82 பேரும் நக்கலாக நம்மைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். ஏனென்றால் எதிர்ப் பக்கம் ராணுவமும் அமெரிக்காவும் இருக்கலாம். இந்தப் பக்கம் இருப்பது ஃபிடலும் அவரது தளபதி சே குவேராவும் அல்லவா! அப்புறம் நடந்தது என்ன என்பதை இன்னமும் மாய்ந்துமாய்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன ஆயிரக் கணக்கான புத்தகங்கள்!

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான புரட்சியாளர்களுள் ஒருவரான ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25 அன்று காலமானார். உலகெங்கும் உள்ள மக்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அமெரிக்காவின் துணையோடு கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பாதிஸ்தாவைப் புரட்சி மூலம் 1959-ல் ஆட்சியிலிருந்து அகற்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ராணுவம், பாதிஸ்தா அரசின் ராணுவம் என்று பிரம்மாண்டமான எதிரிகளை சுமார் 82 கெரில்லாப் போராளிகளையும் இணையற்ற தன் தளபதியுமான சே குவேராவையும் கொண்டே வீழ்த்தினார். சர்வாதிகார ஆட்சியில் நசுக்கப்பட்டிருந்த ஏழை எளிய மக்களின் ஆதரவும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இருந்தது புரட்சியின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம்.

1959-ல் ஆட்சிக்கு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ 1976-வரை கியூபாவின் பிரதமராக இருந்தார். 1976-லிருந்து 2008 வரை அந்த நாட்டின் அதிபர் பதவியை வகித்தார். உடல் நலக் குறைவு காரணமாக 2008-ல் தனது அதிபர் பதவியைத் தன் தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ஃபிடல் கடந்த வாரம் மரணத்தைத் தழுவினார்.

ஃபிடலின் மரணம் உலக மக்களை இரு தரப்புகளாகப் பிரித்துள்ளது. ஒரு தரப்பினர் அவரை ஒப்பற்ற புரட்சியாளர் என்று புகழ, இன்னொரு தரப்பினரோ அவரை மூர்க்கமான சர்வாதிகாரி என்று விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ மீது விமர்சனங்கள் இல்லாமலில்லை. அதை மீறி அவர் தன் நாட்டில் நிகழ்த்திய சாதனைகளை முன்னேறிய நாடுகள் என்று சொல்லும் நாடுகளும், வல்லரசுக் கனவில் இருக்கும் நாடுகளும் இன்னும் நிகழ்த்தவில்லை என்பதுதான் உண்மை.

“தன் நாட்டுக் குழந்தைகளுக்கு 100 சதவீதக் கல்வியை அளிக்க முடியாத தேசம், தன் நாட்டினருக்கு அடிப்படை ஊட்டச்சத்துக் கிடைப்பதை உறுதிசெய்யாத தேசம் அதர்மமான தேசம்” என்று சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ மேற்குறிப்பிட்ட இலக்குகளைத் தன் நாட்டில் நிகழ்த்திக் காட்டினார். கல்வி, மருத்துவம் போன்றவற்றில் கியூபா தலைசிறந்து விளங்குவதற்கு ஃபிடல்தான் காரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்றது, தன் நாட்டின் தொழில்களை நாட்டுடைமையாக்கியது போன்றவையும் அவரது அசாத்தியமான சாதனைகள்.

அதே நேரத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கினார், எதிராளிகளை அழித்தொழித்தார், நாட்டில் ஜனநாயகமே கிடையாது என்ற குற்றச்சாட்டும் ஃபிடல் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுவருகிறது. இதில் உண்மை இருந்தாலும் பெரும்பாலான குற்றச்சாட்டுகளை உருவாக்கிப் பரப்புவது அமெரிக்காதான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? அமெரிக்கா மீது ஃபிடலின் கியூபா தீவிரவாதத் தாக்குதல் நிகழ்த்தியதா? அமெரிக்காவின் வளங்களை கியூபா சுரண்டியதா என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம். உண்மையில் இதற்கு மாறாகத்தான் நடந்தது, நடக்கிறது. கம்யூனிஸத்தை எங்கு பார்த்தாலும் அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியாது அதுதான் காரணம்! மாபெரும் திரைக் கலைஞரான சார்லி சாப்ளின் கம்யூனிஸ அனுதாபியாக இருந்தார் என்பதாலேயே அமெரிக்காவை விட்டுத் துரத்தப்பட்டதை நாம் அறிவோம்.

முதலாளித்துவத்துக்கும் அதன் மாபெரும் வடிவமான ஏகாதிபத்தியத்துக்கும் பிரதான எதிரி கம்யூனிஸம் என்பதால்தான் அமெரிக்காவுக்கு கியூபா போன்ற கம்யூனிஸ சார்புடைய நாடுகள் மீது வெறுப்பு! அதனால்தான் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு அமெரிக்கா பல முறை முயன்றது. கியூபாவுக்குப் பொருளாதாரத் தடையும் விதித்தது. அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு நாடுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாட்டால் எப்படி எழுந்து நிற்க முடியும்? இருந்தும் ஓரளவு கியூபாவை எழுந்து நிற்க வைத்தார் ஃபிடல். கியூபா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது என்றால் அதற்கு அமெரிக்காதான் முதலாவது காரணம்.

இன்றைய கியூப இளைஞர்கள் மத்தியில் ஃபிடலின் செல்வாக்கு குறைந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. தங்கள் வாழ்க்கை முறையையும் பக்கத்தில் இருக்கும் அமெரிக்காவின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டுப் பார்த்து ஃபிடலின் மீது அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. வரலாற்றைப் பின்னால் திரும்பிப் பார்த்தாலோ, அமெரிக்காவின் வசதி வாய்ப்பு, ஜனநாயகம், சுதந்திர வாழ்க்கை எல்லாம் எப்படிப் பெறப்படுகின்றன என்பதை ஆழமாகப் பார்த்தாலோ ஃபிடலின் மீது இந்த அளவுக்கு கோபம் வருவதற்கு நியாயம் இல்லைதான்.

இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த ஒரு இளைஞர் ‘இளைய சக்தி’யால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தார். தன் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருமுறை ஃபிடல் இப்படிச் சொன்னார், “வெறும் 82 பேரை வைத்துக்கொண்டு புரட்சியைத் தொடங்கினேன். இன்று மறுபடியும் அப்படி ஒரு புரட்சி நடத்த வேண்டும் என்றால் வெறும் 12 பேர் போதும்” என்றார். அதுதான் ஃபிடல்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்