ஒரு தலைவன் இருக்கிறான்!

By கோபால்

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த இடதுகை மட்டையாளர்களில் சவுரவ் கங்குலியும் ஒருவர். அவர் மட்டைவீச்சின் மூலம் நிகழ்த்திய சாதனைகளும் அவ்வப்போது பந்துவீசி அணியின் வெற்றிக்குக் கைகொடுத்ததும் புதிய விஷயம் அல்ல.

ஆனால், ஆடுகளப் பங்களிப்புகளைத் தவிர அவரிடம் இருந்த தலைமைப் பண்புகள் கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டியும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

1992 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி ஒரே ஒரு போட்டிக்குப் பிறகு விலக்கப்பட்ட கங்குலி, 1996இல் மீண்டும் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற அவருடைய முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து தொடக்க வீரராகக் களமிறங்கிப் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்குப் பங்களித்தார். புத்தாயிரத்தின் தொடக்கத்தில் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கர், அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியாமல் அந்தப் பதவியிலிருந்து விலக, அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு கங்குலியைத் தேடி வந்தது.

கேப்டனாகப் பதவியேற்ற பின் தென்னாப்ரிக்காவுடனான ஒருநாள் போட்டித் தொடரில் அணியை வெற்றிபெற வைத்தார். அடுத்தடுத்து இந்திய அணிக்குப் பல சர்வதேச வெற்றிகள் குவிந்தன. 2002இல் இலங்கையில் நடைபெற்ற மினி உலகக் கோப்பையிலும் (ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி) 2003இல் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வலிமையான அணிகளுடனான ஒருநாள், டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் என்னும் புகழைப் பெற்றார் கங்குலி.

இந்த வெற்றிகளுக்கு இந்திய அணியை மிக வலிமையான அணியாகக் கங்குலி கட்டமைத்ததே காரணம். வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், எம்.எஸ். தோனி உள்ளிட்ட மட்டையாளர்களும் ஜாகீர் கான், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது தொடர்ந்து வாய்ப்பளித்து ஊக்குவிக்கப்பட்டவர்கள்.

யுவராஜ் சிங், கைஃப் இருவரும் அற்புதமான களத்தடுப்பாளர்களும்கூட. இன்று இந்திய அணி சர்வதேச அளவில் முதலிடத்தைப் பெறும் அளவுக்கு வலுவடைந்திருப்பதற்கு அடித்தளம் அமைத்தவர் கங்குலிதான். அணியின் மூத்த வீரர்கள் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது கங்குலி தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் பாலமாகச் செயல்பட்டு அனைவரையும் ஒன்றாக வழிநடத்தும் தலைமைப் பண்பைப் பெற்றிருந்தார்.

ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்திய அணியைப் பிற அணிகளும் நாடுகளும் மட்டம் தட்டுவதை கங்குலி பொறுத்துக் கொண்டதேயில்லை. ‘திமிர்பிடித்தவர்; ‘அதிகார மனப்பான்மை கொண்டவர்’ என்று அவரைச் சிலர் விமர்சித்தார்கள்.

ஆனால், அவர் யாருடைய ஆதிக்கத்துக்கும் அஞ்சாத துணிச்சலையும் பெற்றிருந்தார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்திய அணியையும் வீரர்களையும் வம்புக்கிழுக்க முயன்றபோதெல்லாம் கடுமையாக எதிர்வினை ஆற்றி அணியின் மரியாதையையும் கண்ணியத்தையும் காப்பாற்றினார் கங்குலி.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் கிரிக்கெட்டோடு உள்ள தொடர்பு கங்குலியை விட்டுப் போகவில்லை. முதலில் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த கங்குலி, பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக 2019இல் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட்டில் பல மாற்றங்கள், சீர்திருத்தங்கள் தேவைப்படும் சூழலில் அவர் இந்தப் பொறுப்பில் செயல்பட்டுவருவதையும் அவருடைய தலைமைப் பண்புக்கான அங்கீகாரமாகவே பார்க்கலாம்.

(ஜூலை 8 – சவுரவ் கங்குலியின் 50 ஆம் பிறந்தநாள்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்