மாத்தி யோசி - 6: நேசி - எதுவும் ரொம்ப ஈஸி!

By கா.கார்த்திகேயன்

“எப்படி இருக்கீங்க?” இப்படிக் கேட்டால், “ஏதோ போய்க்கிட்டு இருக்கு, பரவாயில்ல, சொல்ற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்ல” என்கிற ரீதியில்தான் பதில்கள் வரும். ஒரு சிலர்தான், “நல்லா இருக்கேன்” என்று சொல்வார்கள். “நல்லா இருக்கேன்” என்று சொல்வது ‘பாசிட்டிவ் வைப்ரேஷன்’ தரும் என்பதைப் புரிந்தவர்கள் இவர்கள்தாம். வாங்க, இனி நாமும் இந்த லிஸ்ட்டில் சேருவோம்.

வாழ்க்கையில் நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் பிடித்துச் செய்கிறோமா அல்லது பிடிக்காமல் செய்கிறோமா? இந்தக் கேள்வி எத்தனை பேர் மனதில் ஓடியிருக்கிறது? “என்ன சார், வாழ்க்கையில பொழப்பு நடந்தா ஓகேன்னு போய்க்கிட்டே இருப்போம். எல்லா விஷயமும் பிடிச்சா செஞ்சுகிட்டு இருக்கோம்? இதுல பிடிக்குதா, பிடிக்கலையான்னு கேள்வி எல்லாம் முக்கியமா?” என்கிற சலிப்பான பதில் பலரிடமும் வரலாம்.

உண்மைதான். குடும்பத்துக்கென, சமுதாயத்துக்கென நாம் செய்கிற பல செயல்களில் நமக்குப் பிடிக்காத விஷயங்கள் இருக்கலாம். அதையும்கூட நாம் செய்ய வேண்டியிருக்கும். கார் வைத்திருப்பவர்களைக் கேட்டால், “அது அவசியம்” என்று சொல்பர்களைத் தாண்டி, “சார், நம்ம ரோடு கண்டிஷனுக்கு எனக்கு டூவீலர்தான் தோதா இருக்கு. ஆனா, வீட்ல பிரஷர், சொந்தகாரங்க முன்னாடி கெத்து காட்டியே ஆகணும், இதுதான் சொசைட்டில மரியாதையா இருக்கும்” என்பது போன்ற அழுத்தங்கள் காரணமாகவும் பிடிக்கவில்லையென்றாலும் கார் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.

இதுபோல வாழ்க்கை முழுக்க புலம்பல், சலிப்பு இல்லாமல் வாழ்வதும் சாத்தியமே. வெற்றிக்கரமான ஆளுமைமிக்க மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையில் மட்டும் மகிழ்ச்சி, தொடர் வெற்றி, நிறைவு என மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அதற்கு அஸ்திவாரம் இருக்கிறது. அது, அவர்களுடைய முதன்மைக் கொள்கை. அது 70 சதவீத வேலையை, ஒரு விஷயத்தைப் பிடித்துச் செய்வது. 30 சதவீதம்தான் பிடிக்காமல் செய்வது. சராசரி மனிதர்களிடமோ இந்த விகிதம் தலைகீழாக இருக்கும்.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பார்த்தோம் என்றால், “ஏதோ ஒரு படிப்பு, பிடிக்காத ஊரில் கிடைக்கிற வேலையை (கவனிக்கவும் - பிடிக்கிற வேலை இல்ல) செஞ்சுகிட்டு இருக்கேன்” என்று சலிப்புடன் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். 70 சதவீதம் விரக்தியான செயலில் ஈடுபட்டுகொண்டு இருந்தால் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தாமலேயே போய்விடுவோம். விளைவு, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று மற்றொரு நபராக நம்மையும் மாற்றிவிடும்.


அண்மையில் ஒரு பெற்றோர் இளங்கலை பயிலும் தங்களுடைய மகனுக்கு ஆலோசனை பெறுவதற்காக வந்திருந்தார்கள். “சார், கம்ப்யூட்டர் கோர்ஸில் பிசினஸ் அனலிசைஸ் படிக்கப் போறேன். அதுதான் என் எதிர்காலம் என்று என் மகன் சொன்னான். நானும் லட்ச ருபாய் செலவு செய்து சேர்த்துவிட்டேன். இப்போ அது பிடிக்கலை, வேற கோர்ஸில் சேரப் போறேன்னு சொல்லுறான். அப்போதைக்கு என்ன தோணுதோ அதைச் செய்வது என்று இருக்கிறான்” என்றார்கள். பல இளைஞர்களிடம் உள்ள பிரச்சினையும் இதுதான். நிலையான தன்மை எப்போதும் வெல்லும் (Consistency always wins) என்பதை மறக்கக் கூடாது.

சரி, ஒரு நந்தவனத்தை, ஒரு தோப்பைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்பதைத் தாண்டி, அந்தப் பராமரிப்பில் தொடர்ச்சியான உறுதித்தன்மையும் இணைந்தே பயணிப்பதைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு செழிப்பான தோட்டத்தின் தகுதி என்பது விருப்பம் என்கிற அடிப்படையைத் தொடர்ந்து, பல இடர்களை எதிர்கொண்டு தொடர் உழைப்பினாலே மட்டுமே சாத்தியப்படும்.

உங்கள் விருப்பமான செயலைச் செய்யத் தேர்ந்தெடுக்க முதலில் தெளிவு முக்கியம். இந்தத் தெளிவு நமக்கு எப்போது கிடைக்கும் என்றால், நமது இலக்கு, செயல் இவற்றின் பலம், பலவீனம், வாய்ப்புகள், இடர்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அறிந்த பிறகே தென்படும். இதைத்தான் ‘SWOT (Strength - Weakness - Opportunity - Threat) அனாலிஸிஸ்’ என்கிறார்கள். இதன் பிறகு தேர்ந்தெடுக்கும் இலக்கில் வெற்றி கிடைக்கத் தொடர்ச்சியான உறுதித்தன்மை மிக முக்கியம். வெற்றிகரமான மனிதர்களின் சாதனைகள் சாத்தியமானதற்குத் தொடர் முயற்சியும் காரணம். இதற்குச் சரித்திரத்தில் சாட்சிகள் பலர் உண்டு.

நாம் எல்லாரும் அறிந்த சச்சின் டெண்டுல்கர் தனது முதல் ஒரு நாள் போட்டி சதத்தை அவ்வளவு எளிதாகப் பூர்த்தி செய்யவில்லை. அதற்கு 74 போட்டிகளையும் ஐந்து ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகே முதல் ஒரு நாள் சதத்தை எட்டினார். அதைத் தொடர்ந்து அவர் கண்ட தொடர் சதங்களும் சாதனைகளும் ஏராளம்.

நீங்கள் வைக்கும் இலக்கை இனி ‘SWOT’ என்கிற கண்ணாடி மூலம் பாருங்கள். பிறகு உங்கள் செயல்களைத் தானாகவே பிடித்துச் செய்வதில் சதவீதம் கூடும். அப்போது உங்கள் ஆற்றல் இரு மடங்காக உயரும். கூடவே, தொடர் முயற்சியும் இணைந்தால் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு நம்மை உயர்த்தும். நேசித்துச் செய்தால் அடையும் இலக்கு ஈசிதான்.


(இன்னும் யோசிப்போம்)
கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com


‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்