வெற்றி மாறன் படமாக்கும் அடுத்த புத்தகம்!

By ந.வினோத் குமார்

மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்' நாவலை அடிப்படையாக வைத்து வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியானது ‘விசாரணை' திரைப்படம். பல விருதுகளையும் வென்றது அந்தப் படம்.

இந்நிலையில், வெற்றி மாறன் அடுத்ததாக ஒரு புத்தகத்தைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருப்பதாக சமீபத்தில் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

அந்தப் புத்தகம் ‘ஷூஸ் ஆஃப் தி டெட்'. இதுவும் உண்மைக் கதைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலே.

பத்திரிகையாளர் கோட்டா நீலிமா இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். அவர் தற்போது ‘தி சண்டே கார்டியன்' பத்திரிகையில் பொலிட்டிக்கல் எடிட்டராகப் பணியாற்றி வருகிறார்.

‘ஷூஸ் ஆஃப் தி டெட்' இவரது நான்காவது புத்தகம். ரூபா பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

தன்னுடைய பணியின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் தற்கொலைகள் குறித்து ரிப்போர்ட் செய்கிறார் கோட்டா நீலிமா.

அதற்காக, அம்மாநிலத்தின் விதர்பா, யவத்மால் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்து, அப்போது தனக்குக் கிடைத்த தகவல்கள், தான் சந்தித்த மனிதர்கள், பெற்ற‌ அனுபவங்கள் ஆகியற்றைக் கொண்டு எழுதியதுதான் இந்த நாவல்.

கடன் சுமையால் நிகழும் விவசாயிகள் தற்கொலைகள்தான் இந்த நாவலின் மையப் புள்ளி. மத்திய இந்தியாவின் ஒரு பகுதி மித்யாலா.

அங்கு கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது அந்தத் தொகுதி எம்.பி.யான கேயூர் காசிநாத்தின் மீது கரும்புள்ளியாக மாறுகிறது.

அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசிக்கும்போது, விவசாயிகள் கடன் சுமையால்தான் தற்கொலை செய்கிறார்கள் என்ற உண்மை வெளி உலகத்துக்குத் தெரியக் காரணமாக இருப்பது, அந்தப் பகுதியில் வசித்துவரும் கங்கிரி பத்ரா எனும் ஒரு இளைஞர்தான் என்பது கேயூர் காசிநாத்துக்குத் தெரியவருகிறது.

விவசாயிகள் கடன் சுமையால்தான் தற்கொலை செய்துகொள்கிறார்களா என்பதைப் பற்றி ஆராய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. அந்தக் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர்தான் கங்கிரி பத்ரா.

அந்தக் குழுவில் ஒரு கிராமத் தலைவரும், விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கும் கந்து வட்டிக்காரரும் உறுப்பினர்கள் இவர்கள் இருவரும் ‘விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

மாறாக, நோய் மற்றும் குடியால் சாகிறார்கள்' என்று சொல்லி அந்தத் தற்கொலைகளுக்கு எதிராக வாக்களித்து மற்ற உறுப்பினர்களையும் அதட்டி, மிரட்டி வாக்களிக்க வைத்து, இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்துக்கு எந்த ஒரு இழப்பீடும் கிடைக்காதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.

மேலும், இறந்துபோன விவசாயிகளின் நிலம், வீடு ஆகியவற்றையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில்தான், அந்தக் குழுவில் புதிய உறுப்பினராகச் சேர்கிறார் கங்கிரி பத்ரா. அவர் சேர்ந்த பிறகு, விவசாயிகளின் நிலையை மற்ற உறுப்பினர்களுக்குப் புரிய வைத்து விவசாயிகள் தற்கொலைகளுக்கு ஆதரவாக வாக்களித்து மற்றவர்களையும் வாக்களிக்கச் செய்து, விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருகிறார்.

இதனால்தான் அந்தப் பகுதியில் விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் கேயூர் காசிநாத், அந்த கிராமத் தலைவர், கந்து வட்டிக்காரர் ஆகியோரின் உதவியோடு கங்கிரியைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.

அவர்களின் வலையிலிருந்து கங்கிரி பத்ரா, தப்பித்தாரா? கங்கிரி பத்ராவுக்கு ஏன் மற்ற விவசாயிகளின் மீது அவ்வளவு இரக்கம்? கங்கிரி பத்ராவால் மட்டுமே இந்த சாதனையைச் செய்ய முடிந்ததா எனும் பல கேள்விகளுக்கு விடையை இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

விவசாயிகள் தற்கொலையை விவசாயிகள் தவிர்த்து மற்றவர்கள் எப்படி அளவிடுகிறார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாகச் சொல்கிறார் கோட்டா நீலிமா. மிகவும் முக்கியமான பிரச்சினை குறித்து, மிகச் சரியான நேரத்தில் வெளியாகி இருக்கிறது இந்தப் புத்தகம்.

நாடு முழுவதும் இது ஒரு பொதுவான பிரச்சினையாக இன்றைய நாட்களில் மாறிவருகிறது.

அதைப் பற்றி இதயம் மரத்துப்போன மனிதர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, இயக்குநர் வெற்றி மாறன் புகுந்து விளையாட ஒரு பிரமாதமான கதை ரெடி! அதை அவர் எப்படி ஸ்கிரீன்பிளே ஆக்குகிறார் என்பதில் ஒளிந்திருக்கிறது வெற்றியும் வசூலும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

31 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்