கதைப்போமா அறிவியல் 14: நவரச ஹார்மோன்கள்!

By அண்டன் பிரகாஷ்

ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், ப்ளாக் பேன்தர் போன்ற ஆயிரக்கணக்கான சிறப்புப் பாத்திரங்கள் எல்லாமே கற்பனை உலகில் உருவானவைதான். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிறப்பும் அது சார்ந்த கதைகளும் எழுதப்பட்டு, பின்னர் திரைக்கதைகளாகி, படங்களாக வெளிவருகின்றன. பண்டைய இதிகாசங்களில் தொடங்கி இன்றுவரை நம்மை இயக்கிவரும் கதைகளுக்குப் பின்னிருக்கும் அறிவியல் என்ன?

நம் மூளையின் நினைவாற்றல் இரண்டு வகைப்படும். குறுகிய கால நினைவு முதல் வகை. காலையில் என்ன சாப்பிட்டீர்கள், வாகனத்தை எங்கே நிறுத்தினீர்கள் போன்றவை இந்த வகையில் வரும். நீண்ட கால நினைவு அடுத்த வகை. நண்பர்களுடன் சென்ற முதல் இன்பச்சுற்றுலா, திருமண நாளின் நிகழ்வுகள் போன்றவை இதில் வரும். குறுகிய கால நினைவு தகவல்புள்ளிகளாகச் சேமிக்கப்பட்டு விரைவில் கலைந்துவிடும். ஆனால், அதிலிருக்கும் முக்கிய அம்சங்களைப் பிரித்தெடுத்து கதை வடிவில் மூளை நீண்ட கால நினைவுக்காகச் சேமித்துக்கொள்கிறது என்கிறார்கள் நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னொரு விதத்தில் சொல்வதெனில் நம் மூளையும் நரம்பு மண்டலமும் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் திரைக்கதை பாணியில் தொடர்ந்து சேகரித்தபடியே இருக்கும். தூக்கம் என்பது பல அடுக்குகளில் சுழற்சியாக நடப்பது. ஆழ்ந்த தூக்கம் என்கிற விரைவு கண் இயக்க நிலை (Rapid Eye Movement-REM) வரும்போது சேகரமாகியிருக்கும் நினைவுகளின் கலவை, பார்வை புறணி (Visual cortex) வழியாகத் திரைப்படங்களாக ஒளிருவதைத்தான் கனவுகள் என்கிறோம். ஆக, நடந்த நிஜ நிகழ்வுகளோடு, புனைவுகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு மினி கிரியேட்டிவ் டைரக்டர் போலச் செயல்பட்ட கதைகளை உருவாக்கியபடி இருக்கிறது நம் மூளை.

கதை சொல்லுதலைப் பற்றிய கால அட்டவணையைப் பரிணாம உயிரியலாளர்கள் இப்படி முன்வைக்கிறார்கள். ‘ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மொழி உருவாகத் தொடங்கியிருந்தது. வேட்டை, பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற விவரங்களைத் தனக்கு அடுத்த தலைமுறைகளுக்கு ஒலி வடிவக் கதைகளில் அந்தக் காலத்து மனிதர்கள் கடத்தியிருக்க வேண்டும். 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குகை ஓவியங்களில் மனித வாழ்க்கையின் கதைகள் ஆவணமாயின. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, எழுத்துவடிவிலான மொழி உருவாகி, கதைகள் அதில் எழுதப்பட ஆரம்பித்தன. சென்ற நூற்றாண்டின் இறுதியில் இருந்து டிஜிட்டல் வடிவில் ஒளிப்படங்களாகவும், காணொலிகளாகவும் எழுத்துக்களாகவும் கதைகளைப் பதிவுசெய்தபடி வருகிறோம்.

அறிவியல்பூர்வமாகக் கதைகள் நம்மைப் பாதிப்பது எப்படி? அதற்கான விடை, ஹார்மோன்கள். குறிப்பாக ஐந்து ஹார்மோன்கள். கதைகளைக் கேட்கும்போது, அவற்றின் தன்மையைச் சார்ந்து மூன்று ஹார்மோன்கள் நம்மை மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, பரவச நிலைக்கு எடுத்துச் செல்லக் காரணமாகின்றன. கடைசி இரண்டும் நம்மை விரக்தி, எரிச்சல், கோப உணர்வுகளுக்குள் பயணிக்க வைக்கின்றன.

டோபமைன்: உத்வேகத்தையும், தீர்க்கமான கவனத்தையும் நம் உடலுக்குள் கொண்டுவரும் ஹார்மோன் இது. ஜாக்கிசான் போன்றவர்களின் சண்டைப் படங்களைப் பார்த்துவிட்டு வருபவர்கள் கை, காலைத் தூக்கி கராத்தே வீரராகச் சில நிமிடங்கள் நடந்துகொள்வதைப் பார்த்திருக்கலாம். காட்சிகளைப் பார்க்கும்போது ஊற ஆரம்பித்த டோபமைன் இன்னும் உடலில் இருப்பதன் விளைவு அது.

ஆக்சிடோசின்: பச்சாதாப உணர்வை உருவாக்கும் ஹார்மோன் இது. துயரங்களைப் பற்றிய செய்திகள், கதைகளைப் படிக்கும்போது அல்லது பார்க்கும்போது நம் மூளைக்குள் ஆக்சிடோசின் பீய்ச்சப்படுகிறது.

எண்டார்ஃபின்: மகிழ்ச்சிக்கான ஹார்மோன் இது.நகைச்சுவைத் துணுக்குகளில் இருந்து வடிவேலு காமெடி வரை மகிழ்ச்சியூட்டும் உணர்வுக்குக் காரணமாக இருப்பது இதுவே.

நிஜ வாழ்க்கையாக இருந்தாலும், புனைவாக இருந்தாலும், கதைகளில் வில்லன்கள் உண்டு. அவர்கள் சம்பந்தப்பட்டவற்றைப் பார்க்கும்போதோ, படிக்கும்போதோ இரண்டு ஹார்மோன்களை உடல் உருவாக்குகிறது.

கார்ட்டிசால்: வளர்சிதை மாற்றத்துக்கு முக்கியமான இந்த ஹார்மோன் ஸ்டீராய்ட் வகை ஹார்மோன். அதிர்ச்சி அல்லது மன அழுத்தம் உருவாகும்போது சுரக்கிறது இந்த ஹார்மோன்.

அட்ரீனலின்: அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடக்கும்போது உருவாகும் ஹார்மோன் இது. சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது தறிகெட்ட வேகத்தில் உங்களை நோக்கி வாகனம் வருகிறது என வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் சுரப்பது அட்ரீனலினாக இருக்கும்.

இந்தக் கட்டுரை உங்களை மகிழ்ச்சிப் படுத்தியிருந்தால் முதல் மூன்று ஹார்மோன்கள் சுரந்திருக்கும். எரிச்சல் படுத்தியிருந்தால், கடைசி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்க வைத்திருக்கும்.

இத்தொடரை ‘இந்து தமிழ்’ இணையத்தில் விரிவாக வாசிக்கலாம். இத்தொடருக்கான பிரத்தியேக ஃபேஸ்புக் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM. அதில் தொடர் பற்றிய பின்னூட்டங்களையும் எதை அலசலாம் என்பதையும் தெரிவியுங்கள். 1 (628) 240-4194 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.

திருத்தம்

சென்ற வாரம் வெளியான ‘பெயர்களின் விநோதங்கள்’ கட்டுரையில் அணுவில் இருக்கும் புரோட்டான்களின் அளவு ‘அணு நிறை’ என்பதை ‘அணு எண்’ எனத் திருத்தி வாசிக்கவும். சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்