கிராஃபிக் நாவல்: யார் இந்த கறுப்பு அங்கிப் புலி?

By கிங் விஸ்வா

சமீபத்தில் வெளியான பேட்மேன் படத்தில் பேன் (Bane) என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் சக் டிக்ஸன். பல நூறு காமிக்ஸ்களுக்கு கதை எழுதியிருக்கும் இவர், கிராபிஃக் இந்தியா நிறுவனத்துக்காக சரத் தேவராஜன் உருவாக்கிய புதிய சூப்பர் ஹீரோ கதைத்தொடருக்கு அட்டகாசமான திரைக்கதையை வழங்கியிருக்கிறார்.

சமூகநீதி காவலன்?

ஒரு ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக ராஜன் ஷா என்ற சிறுவனுடைய பெற்றோர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆதரவற்றிருக்கும் அவனுக்கு ஒரு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அவன் சிறப்பாகப் படித்து இந்தியாவின் மிகச் சிறந்த இளம் வழக்கறிஞனாக உருவாகிறான். ஒரு வழக்கில் அதிகாரம் மிக்கவருக்கு எதிராக நேர்மையாக வாதிட்டதால், தனது வழக்கறிஞர் தகுதியை இழந்து, சிறையில் அடைக்கப்படுகிறான்.

இந்தியாவின் மிகப் பெரும் செல்வந்தர்களுள் ஒருவர் அவனை வெளியே கொண்டுவருகிறார். அவர்தான் அஜாக்கிரதையாக காரோட்டி தனது பெற்றோரை கொன்றவர் என்பதை அறிந்து கோபத்தின் உச்சிக்குச் செல்கிறான் ராஜன். ஆனால், தன்னைப் படிக்க வைத்ததும் அவர்தான் என்று தெரிந்து பெரும் அதிர்ச்சியடைகிறான். அவர் ராஜனுக்கு ஒரு கல்லைக் காண்பித்து, அது ஒரு அயல்கிரகக் கல் என்றும் அதன் சக்திகளைக் கட்டுப்படுத்த ஒரு விசேஷ‌ உடை இருப்பதையும் சொல்கிறார். அதை அணிந்து, அந்தக் கல்லின் உதவியுடன் ஒரு சமூகநீதிக் காவலனாக நீ மாற வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார். அதை ராஜன் மறுத்து விடுகிறான்.

நெடும் பயணம்

சூழ்நிலை காரணமாக மறுபடியும் அவரைச் சந்திக்கச் செல்கிறான் ராஜன். இப்போது அந்த விசேஷ‌ உடையை அணிந்துகொண்டு, லஞ்சம் வாங்கி வழக்கில் தவறான தீர்ப்பு சொன்ன நீதிபதியைக் கண்காணிக்கும்போது, அவருடன் இருக்கும் மர்ம மனிதனிடமும் தன்னிடம் இருப்பதைப்போன்றே ஒரு கல் இருப்பதைக் கண்டு வியக்கிறான்.

அந்த மர்ம மனிதன், Circle of 12 என்ற ரகசியக் குழுவின் அங்கத்தினன் என்பதையும், அந்தக் கல்லின் சக்தியுடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டு இருப்பதையும் அறிகிறான். இருவருக்கும் இடையே நடக்கும் ஆக்ரோஷமான மோதலில், மர்ம மனிதனை ராஜன் கொன்று விடுகிறான். ஆனால், பலத்த காயமுறும் ராஜனை அவனது விசேஷ‌ உடையே காப்பாற்றுகிறது. அந்த பயங்கரப் பன்னிரண்டு என்ற குழுவைத் தேடிச் செல்லும் ராஜனின் பயணம் தொட‌ங்குகிறது.

விறுவிறு கதை

அதிசய சக்தி வாய்ந்த வேற்று கிரகத்து கல், அதைக்கொண்டு நூறு ஆண்டுகள் வாழும் ஒரு மர்ம மனிதன், அவனைச் சார்ந்து இயக்கும் பயங்கரப் பன்னிரெண்டு என்ற குழு, அவர்களிடமிருந்து தவறிய ஒரு கல் மட்டும் கதாநாயகனிடம் வருவது என்று மிகவும் சுவாரசியமாகவே கதையோட்டம் இருக்கிறது. கதாநாயகன் தனது வழக்கறிஞர் பதவியை இழப்பது, தங்கியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து துரத்தப்படுவது போன்றவை மிகவும் செயற்கையாக இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அதை ஈடு கட்டிவிடுகிறது.

கிரஹம் நோலன் பல ஆண்டுகளாக கதாசிரியர் சக் டிக்ஸனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆகவே, இந்த ஜோடியிடம் இருந்து சிறப்பான ஒரு காமிக்ஸ் கதையையே எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கதையில் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது அவர்களுடைய படைப்பாக்கத் திறமை.

தலைப்பு: பிளாக் டைகர்

உருவாக்கம்: சரத் தேவராஜன்

கதை: சக் டிக்ஸன்

ஓவியம்: கிரஹம் நோலன்

வண்ணம்: எஸ். சுந்தரக்கண்ணன்

வெளியீடு: கிராபிஃக் இந்தியா பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 32 விலை: 3.99 அமெரிக்க டாலர்

அமைப்பு: நான்கு பாக கதைத்தொடரின் முதல் பாகம்

கதைக் கரு: சிறு வயதில் தனது பெற்றோரை இழந்த ஒருவன், ஒரு சூப்பர் ஹீரோவாக மாறும் நெடிய பயணத்தின் ஆரம்பம்.

தீர்ப்பு : படிக்கலாம் (3/6)



கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

46 secs ago

விளையாட்டு

21 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்