தலைநகரின் பந்தயப் புறாக்கள்!

By செய்திப்பிரிவு

வி. சாமுவேல்

‘மாரி' படத்தில் புறா பந்தயக் காட்சிகளைப் பார்த்திருப்போம். வட சென்னையில் நிஜமாகவே புறா பந்தயம் நடப்பது பலரும் அறியாத சங்கதி. இந்தப் புறா பந்தயத்தில் அருண், விஜய் என இரு இளைஞர்கள் நீண்டகாலமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

குதிரைப் பந்தயம், சேவல் சண்டை எனப் பரிச்சயமான போட்டிகள் நமக்குக் காலம் காலமாகத் தெரியும். ஆனால், பண்டைய காலத்திலிருந்து தூது செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டவந்த புறாவை வைத்து பந்தயம் என்பது கொஞ்சம் புதிதுதான். அதுவும் பரபரப்பான தலைநகரில் புறா பந்தயம் நடப்பதைக் கேள்விப்பட்டு ரெட்டேரிக்குச் சென்றோம். அங்கே அருண், விஜய் என்ற இரு இளைஞர்கள் புறா பந்தய நிபுணர்களாக வலம்வருகிறார்கள். புறா வளர்க்கவே தனியாக இடத்தை ஒதுக்கி, அங்கே புறாக்களை வளர்த்துவருகிறார்கள்.

புறாவோடு பொழுது

இந்தப் பகுதியில் இரண்டு வகையான புறா பந்தயங்கள் வழக்கமாக நடைபெறுகின்றன. ஒன்று புறா பல்டி, வானில் சிறகை விரித்துத் தலைகீழாகப் புறா பல்டி அடிப்பது ஒரு வகை. இன்னொன்று பறக்க விட்டவுடன் வானில் எவ்வளவு நேரம் புறா பறக்கிறது என்ற கணக்கின் அடிப்படையில் இந்தப் புறா பந்தயம் நடக்கிறது. இதற்காகவே கர்ணப் புறா, சாதா புறா, ஓமர் புறா என மூன்று வகையான புறாக்களை வளர்த்துவருகிறார்கள் இந்த இரு இளைஞர்களும்.

“எங்களுடைய தந்தை காலத்திலிருந்தே புறா வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறோம். கர்ணப் புறாதான் பல்டி அடிக்கும். சாதா புறா அதிக நேரம் வானில் பறக்கும். இதை வைத்துதான் புறா பந்தயம் நடைபெறுகிறது. பந்தயத்தில் புறா வளர்ப்பவர் அதைப் பறக்கவிட்டதும் போட்டி தொடங்கிவிடும்.

சாதாரணப் புறா சுமார் 5 முதல் 6 மணி நேரம் வானில் சிறகடித்து பறக்கும். கர்ணப் புறா தலைகீழாகப் பல்டியடிக்கும். பந்தய நடுவர்களாக வேறு பகுதியைச் சேர்ந்த புறா வளர்ப்போர் இருப்பார்கள். அவர்கள்தான் முடிவை அறிவிப்பார்கள்” என்று புறா பந்தயம் பற்றி விஜயும் அருணும் சொல்கிறார்கள்.

புறா பந்தயத்துக்கென அவற்றைத் தயார் செய்ய தனியாக மெனக்கெடுகிறார்கள். புறா பந்தயத்துக்கு மூன்று மாதங்கள் முன்பே பயிற்சியைத் தொடங்கிவிடுகிறார்கள். காலை முதல் மாலைவரை புறாக்களோடுதாம் பொழுதைக் கழிக்கிறார்கள். அதன் ஆரோக்கியத்தில் கவனமாய் இருக்கிறார்கள்.

பல்டி அடிக்கும் பந்தயத்தில் புறாக்களை அதற்கேற்றவாறு தயார்படுத்துகிறார்கள். அதன் சுறுசுறுப்பைத் தெரிந்துகொள்ளக் குறைவான உயரத்திலிருந்து பயிற்சியைத் தொடங்குகிறார்கள். அப்படியே படிப்படியாக அதன் உயரத்தை அதிகரித்து, ஒரு தென்னை மரத்தின் உயரம் வரை பறக்கும் அளவுக்கு பல்டியின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். புறாவுக்கென பிரத்யேகமான உணவையும் வழங்குகிறார்கள்.

வேளாவேளைக்கு உணவு

“புறா வளர்ப்பில் முக்கியமான ஒன்று அதற்கு அளிக்கப்படும் தீனிதான். பருவநிலைக்கேற்ப உணவைக் கொடுப்போம். கடலை, கேழ்வரகு, கம்பு போன்ற தீவனங்களைக் கொடுப்போம். மஞ்சள் தூளைச் சூடான நீரில் கால் ஸ்பூன் கலந்து கொடுப்போம். இதனால், புறாக்கள் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இருக்கும். என்ன வேலை இருந்தாலும், அதை விட்டுவிட்டு சரியான நேரத்தில் உணவு, தண்ணீரைப் புறாக்களுக்குக் கொடுத்துவிடுவோம்” என்கிறார்கள் இவர்கள்.

காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை புறாக்களைச் சுற்றியே இவர்கள் பொழுதைக் கழிப்பது அவற்றின் மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறது. புறாக் குஞ்சை முழு புறாவாக வளர்த்து அதைப் போட்டியில் பங்குபெற வைத்து வெற்றி காணும் வரை ஓயாமல் உழைக்கிறார்கள். பந்தயம் என்பதைத் தாண்டி புறாக்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்