நகைச்சுவையில் உண்மை இருக்க வேண்டும்!

By என்.கெளரி

அலெக்ஸாண்டர் பாபு. ஸ்டாண்ட்-அப் காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் இது. ‘ஏவம் ஸ்டாண்ட்-அப் தமாஷா’ குழுவில் இயங்கிவரும் இவருக்கு யோகா ஆசிரியர், இசைக் கலைஞர், பாடகர், நடிகர் எனப் பன்முக அடையாளங்கள் இருக்கின்றன. இவருடைய அமெரிக்கத் தேர்தல், திருமண வாழ்க்கை, கர்னாடக இசை, ஸ்மார்ட்போன் குறித்த ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோக்கள் யூடியூப்பில் வெகு பிரபலம். இவர் முழுநேர ஸ்டாண்ட் -அப் காமெடியனாக இயங்குவதற்காகத் தன்னுடைய மென்பொறியாளர் வேலையை விட்டிருக்கிறார்.

தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் அந்தாவூரணி கிராமத்தில் பிறந்த இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்திருக்கிறார். அதற்குப் பிறகு, அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து, அங்கேயே எட்டு ஆண்டுகள் மென்பொறியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

“எனக்குச் சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம். அதனால் தபலா கற்றுக்கொண்டேன். அத்துடன், பாட்டிலும் ஆர்வமிருந்தது. அமெரிக்கா சென்ற பிறகு, அங்கே இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் இசைக் குழுவில் சேர்ந்துகொண்டேன். இசை, பாடல் மட்டுமல்லாமல் எனக்கு மேடை நடிப்பிலும் ஆர்வமிருந்தது. நாடகங்களில் என்னுடைய நடிப்பைப் பார்த்த நண்பர்கள், எனக்கு நடிப்பும் நகைச்சுவையும் நன்றாக வருவதாக என்னை ஊக்கப்படுத்தினார்கள்” என்கிறார் அலெக்ஸாண்டர். அவருடைய நண்பர்கள் சென்னைக்குச் சென்று நடிகனாக முயற்சி செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், இவருடைய பணி பெங்களூருவுக்கு மாற்றலாகியிருக்கிறது. அதற்குப் பிறகு, சென்னையில் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். ஆனால், பணிவாழ்க்கையில் ஒருவிதமான மனநிறைவின்மையைத் தொடர்ந்து உணர்ந்திருக்கிறார்.

“ ‘உன் பணியை மகிழ்ச்சியாகச் செய்ய முடியாமல் போனால், அதனைத் தொடர அவசியமில்லை’ என்று என் மனைவி எனக்குப் புரிய வைத்தார். அந்தச் சமயத்தில், ‘டெட் டாக்ஸ்’ (Ted Talks) வீடியோவில் நியு யார்க்கைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஸ்டிஃபன் சாக்மெய்ஸ்டரின் உரையைக் கேட்டேன். அவர் ‘தி பவர் ஆஃப் டைம் ஆஃப்’ என்ற தலைப்பில் பேசியிருந்தார். அந்த உரையில், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாம் அனைவரும் பணிவாழ்க்கையில் ஓர் ஆண்டு இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அந்த உரை என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு, எனக்குப் பேரார்வம் இருக்கும் துறையில் என் பணிவாழ்க்கையைத் தொடர முடிவுசெய்தேன்” என்கிறார் அவர்.

இடைவெளி எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்த பின்னர், ‘மினிமல்’ வாழ்க்கை முறையைத் திட்டமிடத் தொடங்கியிருக்கிறார். இந்த ‘மினிமல்’ வாழ்க்கை முறையைப் பின்பற்ற யோகா அவருக்கு உதவியிருக்கிறது. “நான் 2010-ம் ஆண்டு ‘டோஸ்ட்மாஸ்டர்ஸ்’ நகைச்சுவைப் போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் வெற்றிபெற்றேன். அந்த வெற்றி என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில், ஸ்டாண்ட்-அப் காமெடி பிரபலமாகத் தொடங்கியிருந்தது. ஸ்டாண்ட்-அப் காமெடியில் சரியான வாய்ப்புகள் கிடைக்கும்வரை, யோகா ஆசிரியராகவும், பாடகராகவும் தொடரலாம் என்று 2014-ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்டாண்ட்-அப் காமெடி, நடிப்பு, யோகா, இசை என்று என் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்கிறார் அலெக்ஸாண்டர்.

‘தியேட்டர் ஜீரோ’ நாடகக் குழு தயாரிப்பில் வெளியான ‘நாகர்கோயில் எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’நாடகத்திலும், ‘ஆயிரத்தியொரு இரவுகள்’ நாடகத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதில், ‘தி இந்து’ நாடக விழா 2016-ல் மேடையேற்றப்பட்ட ‘ஆயிரத்தியொரு இரவுகள்’ நாடகத்தில் அலெக்ஸாண்டரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“பேரார்வத்துடன் ஒரு பணியைச் செய்யும்போது அது கடினமாகத் தெரியாது. எனக்கு நகைக்சுவையின் மீது அந்தப் பேரார்வம் இருக்கிறது. நகைச்சுவை என்பது போதனையாக இருக்க முடியாது. அதில் உண்மை இருக்க வேண்டும். அறிவார்ந்த தன்மை இருக்க வேண்டும். ஸ்டாண்ட்-அப் காமெடி என்பது கிட்டத்தட்ட ஒரு சிறுகதை வாசிப்புப் போலத்தான். நம்முடைய கலையில் கோமாளிக்கு எப்போதும் முக்கிய இடம் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில், ‘வள்ளி திருமணம்’, ‘சத்தியவான் சாவித்ரி’என எந்த நாடகமாக இருந்தாலும், அதில் கோமாளிக்கு முக்கிய இடமிருக்கும்.

இப்போது தொலைக்காட்சி வந்த பிறகு, இந்த மேடை நடிப்பு என்பது சற்று தொய்வைச் சந்தித்தது. இப்போது, மீண்டும் ‘லைவ் பெர்ஃபாம்ன்ஸ்’ நோக்கி மக்கள் நகரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுதான் ‘ஸ்டாண்ட்-அப் காமெடி’ போன்ற டிரண்டுகள் பிரபலமாகக் காரணம். இது வரவேற்கத்தக்கது” என்கிறார் இவர்.

‘ஸ்டாண்ட்-அப்’ காமெடியில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் தொடக்கத்தில் சென்னையில் ‘ஒபன் மைக்’, ‘சென்னை காமெடி’, ‘தங்கலிஷ் காமெடி’ போன்ற குழுக்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்று ஆலோசனை சொல்கிறார் அலெக்ஸாண்டர். ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள் அலெக்ஸாண்டர் பாபுவும் பார்கவ் ராமகிருஷ்ணனும் இணைந்து வழங்கும் ‘தி யோகி அண்ட் தி பீர்’ நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி சென்னை மியூசியம் தியேட்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

அலெக்ஸாண்டர் பாபுவின் வீடியோக்களைப் பார்க்க: >http://www.ilikeslander.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்