வேலையற்றவனின் டைரி 26 - அழகின் நிறம் என்ன?

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

சில மாதங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஒரு பெண், “உங்கள் காதல் கதைகளில் வரும் கதாநாயகிகள் அனைவரும் பொன்மஞ்சள் அல்லது எலுமிச்சை நிறத்திலேயே இருப்பது ஏன்?” என்று திடீரென்று கேட்டார், சட்டென்று என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிப்போனேன். தொடர்ந்து அவர், “உங்கள மாதிரி எழுத்தாளருங்க இது போல எழுதி, எழுதி, சினிமால எல்லாம் கலரான பொண்ணுதான் அழகுன்னு காமிச்சி, காமிச்சி வெள்ளைதான் அழகுன்னு எல்லோரும் நினைக்கிறாங்க” என்று கூறினார். நான் குற்ற உணர்வில் தவிப்புடன் நின்றேன்.

எல்லாக் கதைகளிலும் அப்படி எழுதியிருக்கிறேனா என்று, எனது அறுபதுக்கும் மேற்பட்ட காதல் கதைகளை எடுத்துப் பார்த்தேன். பல கதைகளில் அப்படித்தான் எழுதியிருந்தேன். படிக்க படிக்க நானா இப்படி எழுதினேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில், எனது தனிப்பட்ட ரசனைப்படி, நான் ரசிக்கும் பல அழகிகள் மாநிறம் அல்லது கறுப்புதான். நடிகைகள் சரிதா, ஸ்மீதா பாட்டீல், மாதவி என்று ஆரம்பிக்கும் அந்தப் பட்டியல் நந்திதா தாஸ், ரீமா கல்லிங்கல் வரை மிகவும் நீளமானது.

ஏனெனில் எனது பார்வையில், வெள்ளை நிறப் பெண்களைவிட, பழுப்பு, கறுப்பு நிறப் பெண்களின் முகங்கள் உணர்வுபூர்வமானவை. அவர்களின் நிறமே, அந்தக் கண்களை ஒளி பொருந்தியதாக மாற்றிவிடுகிறது. ஒரு சின்ன உணர்வை, ஒரு சின்ன சிணுங்கலை, ஒரு சின்ன சிரிப்பை அந்தக் கண்கள் மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்திவிடுகிறது. அந்த உணர்வுகள் கண்களிலிருந்து முகத்துக்குக் கடத்தப்படும்போது, கொஞ்சம் முயன்றால் அந்த உணர்வுகளைக் கையில் எடுத்து, ‘இது அன்பு, இது கருணை, இது காதல், இது கோபம்…’ என்று தனித்தனியே பிரித்துக் காண்பித்துவிட முடியும் என்று தோன்றுகிறது. ஆனால், வெள்ளை நிறப் பெண்களின் முகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒளிர்கிறது. எனவே, கண்களின் ஒளியும், உணர்வுகளின் ஒளியும் சற்றே மங்கலாகி, அவற்றைத் தனியே பிரித்து உணர முடியாமல் போய்விடுகிறது.

சிவப்புப் பெண்களைப் பற்றி ஏன் எழுதினேன்?

இப்படியான ரசனை இருந்தும், ஏன் மீண்டும் மீண்டும் சிவப்பான பெண்களைப் பற்றியே எழுதினேன் என்று தீவிரமாக யோசித்தபோது, எனக்குக் காரணம் பிடிபட்டது. அடிப்படையாக நான் ஜனரஞ்சக எழுத்தாளன். எனவே, என்னை அறியாமலேயே வெகுஜனங்கள் வெகுவாக ரசிக்கும் கலரான பெண்களையே கதாநாயகிகளாக்கியிருக்கிறேன்.

ஆம். நம் சமூகத்தில் பெரும்பாலானோருக்கு, வெள்ளைதான் அழகு. நம்மவர்களின் வெள்ளை மோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள பெரிய ஆய்வெல்லாம் தேவையில்லை. திருமண வரவேற்புகளுக்குச் சென்றாலே போதும். இயல்பாக அழகாகக் காணப்படும் பெண்களைக்கூட, அலங்காரம் செய்கிறோம் என்று அலங்கோலம் செய்து, முகத்தில் ரோஸ் பவுடரை அப்பி, ஒரு பொம்மையைப் போல் நிறுத்திவிடுகிறார்கள். இந்தியாவில் விற்பனையாகும் ஃபேர்னெஸ் க்ரீம்களின் விற்பனையை அறிந்தால், இந்த வெள்ளை மோகம் குறித்து நீங்கள் இன்னும் ஆதாரபூர்வமாகத் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய ஃபேர்னெஸ் க்ரீம்களின் தற்போதைய சந்தை மதிப்பு, சுமார் 300 கோடி ரூபாய். இவற்றின் விற்பனையானது ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. குறிப்பாக தெற்கு ஆசியாவில், கொக்கோகோலா பாட்டில்களைவிட ஃபேர்னெஸ் க்ரீம்கள் அதிகமாக விற்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு ஆண்களுக்கும் ஃபேர்னெஸ் க்ரீம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவையும் இப்போது நன்கு விற்பனையாகின்றன.

ஃபேர்னெஸ் க்ரீம் தொடர்பாக வெளியாகும் விளம்பரங்கள், கறுப்பு நிறம் தன்னம்பிக்கையைக் குறைப்பதாகவும், வெள்ளைதான் அழகு என்றும் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டேயிருக்கின்றன. இதற்கு எதிராகக் கடந்த 2009-ம் ஆண்டு, Women of Worth என்ற என்ஜிஓ, ‘Dark is beautiful’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதில் பங்கேற்ற நடிகை நந்திதாதாஸ் “Be Unfair. Be beautiful’ என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்யும்போது, “என் முகத்தின் நிறத்தை வெண்மையாக்குவதிலேயே மேக் அப் மேன்கள் குறியாக இருக்கின்றனர்” என்று கூறினார்.

கறுப்பு நிறம் தன்னம்பிக்கையைக் குறைக்கிறதா?

ஃபேர்னெஸ் க்ரீம்களுக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமானபோது, ஃபேர்னெஸ் க்ரீம் நிறுவனங்கள், “தனிநபர்கள் அவற்றை விரும்பி வாங்கும்போது, அதற்கு எதிராகப் பேசுவது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?” என்ற வாதத்தை எழுப்பினர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போலத் தோன்றலாம். ஆனால், அவர்கள் மேற்கொள்ளும் தொடர் விளம்பர யுத்தம், தனிநபர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாகக் கறுப்பு நிறம் அழகற்றது, அது தன்னம்பிக்கையைக் குறைக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

அது அவர்களின் மனதில் கறுப்பு குறித்த தாழ்வுணர்வை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களிடமும் கறுப்பை நிராகரிக்கும் மனப்போக்கை உருவாக்கிவிடுகிறது. இந்தத் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அது தனிநபர் சுதந்திரம் என்பதிலிருந்து விலகி, சமூகம் சார்ந்த பொதுப் பிரச்சினையாகிவிடுகிறது. எனவே, தனி மனித சுதந்திரமா, பொதுச் சமூக நலனா? என்ற கேள்வி எழுப்பப்படும்போது, நாம் எப்போதும் பொதுச் சமூக நலத்தின் பக்கமே நிற்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் காலமானபோது, எழுத்தாளர் ஜெயமோகன், ‘கமலாதாஸ் தான் அழகற்றவர் என்ற தாழ்வுணர்ச்சி உடையவராக இருந்ததால், அவர் பாலியல் சார்ந்த எழுத்துகளை எழுதியதாக’ குறிப்பிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த எழுத்தாளர் சாருநிவேதிதா கமலாதாஸ் ‘பேரழகி’ என்று கூற, எனக்குள் ஒரே குழப்பம்.

ஏனெனில், இருவரும் தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள். ஒரே பெண்மணி, இரண்டு எழுத்தாளர்களின் பார்வையில், வேறு வேறுவிதமாகத் தோற்றமளிப்பது ஏன்? ஏனெனில், கமலாதாஸின் அழகு குறித்த அவர்களுடைய கருத்து, உண்மையில் கமலாதாஸின் தோற்றத்திலிருந்து உருவாகவில்லை. கமலாதாஸின் எழுத்து குறித்த அவர்களுடைய அபிப்ராயத்திலிருந்து உருவாகிறது. கமலாதாஸின் எழுத்துகளை நிராகரிக்கும் ஜெயமோகனுக்கு, கமலாதாஸ் அழகற்றவராகத் தோற்றமளிக்கிறார். கமலாதாஸின் எழுத்துகளைப் போற்றும் சாருநிவேதிதாவுக்கு அவர் அழகானவராகத் தெரிகிறார்.

உண்மையில் அழகுக்கு நிறம் என்ற ஒன்று இருக்கிறதா? இதை ஒரு எளிய உதாரணம் மூலமாகப் பார்ப்போம். கடந்த 1986-ம் ஆண்டு, பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படம் வெளிவந்த சமயத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ‘ஜெனிஃபர்… ஜெனிஃபர்’ என்று கிறங்கிப்போய்க் கிடந்தார்கள். ஜெனிஃபர் டீச்சராக நடித்த நடிகை ரேகா, பெரிய உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்த உச்சத்தை அவர் தொடவில்லை. ஜெனிஃபர் டீச்சர் மக்களை ஈர்த்த அளவுக்கு, அவர் நடித்த வேறு எந்த ஒரு கதாபாத்திரமும் மக்களை ஈர்க்கவில்லை.

ஏனெனில், ஜெனிஃபர் டீச்சர் கதாபாத்திரத்தை, இயக்குநர் பாரதிராஜா அற்புதமாக வார்த்திருந்தார். எனவே ஒரு நடிகை வளர்வதையும், அவர் திரையுலகில் நீடிப்பதையுமே ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் குணநலன்கள் தீர்மானிக்கும்போது, சந்தேகத்துக்கே இடமின்றி, நாம் நேரில் பழகுபவர்களின் ஏதோ சில குணங்கள், செயல்பாடுகள், ஒருவரின் அழகைத் தீர்மானம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒருமுறை நடிகர் கமல்ஹாசன், தன் பார்வையில் காந்தியே மிக அழகானவர் என்று கூறினார். மேல் சட்டை அணியாமல், அரை வேட்டியுடன், இந்நாடு முழுவதும் சுற்றித் திரிந்து சாதி, மத, மொழி, வர்க்க வேறுபாடுகள் மிகுந்த இந்தியா போன்ற இறுக்கமான ஒரு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும், தனது ஒற்றைத் தலைமையின் கீழ் ஒன்று திரட்டிய மகாத்மா காந்தி, எனக்கும் மிகப்பெரிய அழகனாகவே தெரிகிறார்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வணிகம்

34 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

42 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்