குரு - சிஷ்யன்: முதல் இடம்!

By ம.திருமலை

து 1984-ம் ஆண்டு. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் நான் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த நேரம். ஒருநாள் முதுகலை வகுப்பில் மிரட்சியுடன் மாணவர் ஒருவர் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அந்த மாணவரை அழைத்து விசாரித்தேன். சங்கரன்கோவில் அருகிலுள்ள ஆராய்ச்சிப்பட்டி சொந்த ஊர் என்றும், குடும்பத்தில் அவர் முதல் முதுநிலைப் பட்டதாரி என்பதையும் அறிந்துகொண்டேன்.

பேச்சில் படபடப்பு இல்லை; நிதானம் இருந்தது. தடுமாற்றம் இல்லை; தெளிவு இருந்தது. புதிய இடம், புதிய ஆசிரியர் என்ற தயக்கம் இல்லை. இயல்பாகப் பேசினார் அந்த மாணவர். மிரட்சியோடு இருந்த அந்த மாணவர் என்னிடம் பேசியபோது இயல்பாகவே இருந்தார். இந்த மாணவர் எத்தகைய புதிய சூழல்களிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்பவர் என்று மனது சொன்னது. அந்த மாணவரின் பெயர் ச.சீனிவாசன். இன்று டெல்லி வெங்கடேஸ்வரா கல்லூரியில் இணைப் பேராசிரியர்.

சீனிவாசன் அன்று முதல் இன்றுவரை கடந்த 33 ஆண்டுகளாக என்னுடன் தொடர்பில் இருப்பவர். வாரத்தில் இரண்டு முறையாவது தொலைபேசியில் பேசிவிடுவார். பொதுவாக மாணவர்கள் வேலைக்குச் சென்ற பின், பழைய ஆசிரியரை மறப்பது தவறில்லை, இயல்புதான். ஆனால், சீனிவாசன் இந்தப் பொது விதியிலிருந்து வேறுபட்டவர்.சீனிவாசனுக்கு டெல்லியில் வேலை கிடைத்தது ஒரு சுவாரசியமான கதை.

முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சமர்ப்பித்த பின்னர், தன் சொந்த ஊரான ஆராய்ச்சிப்பட்டிக்கு அவர் சென்றுவிட்டார். அப்போது அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து ஒரு கடிதம் என் வீட்டு முகவரிக்கு வந்தது. நான் உடனே ஒரு தந்தி கொடுத்தேன். தபால் நிலைய அதிகாரி, “இந்தத் தந்தி சங்கரன்கோவில்வரை போகும். ஆராய்ச்சிப்பட்டி கிராமத்துக்குக் கடிதம் போலத்தான் அனுப்பப்படும்” என்றார்.

“விஷயம் மிக அவசரம். கால அவகாசம் இல்லையே” என்று நான் கையைப் பிசைந்துகொண்டு நின்றேன். தபால் நிலைய அதிகாரி, “ஆராய்ச்சிப்பட்டிக்குச் சென்று திரும்பப் பேருந்துக் கட்டணத்தைக் கட்டிவிட்டால், ஒருவர் தனியாகக் கிராமம்வரை சென்று தந்தியைக் கொடுத்துவிடுவார். அந்த வசதி உண்டு” என்றார். நான் மன நிம்மதியுடன் கட்டணத்தைச் செலுத்தி, தந்தியை அனுப்பினேன். அதன் பின்னர்தான் சீனிவாசன் டெல்லி சென்று அங்கேயே பணியில் இணைந்தார்.

டெல்லியில் வேலைக்குச் சேர்ந்த பின், எப்பாடுபட்டாவது தமிழகப் பல்கலைக்கழகத்துக்கு வந்துவிட சீனிவாசன் ஆசைப்பட்டார். “டெல்லியில் இருப்பது பல வழிகளில் உங்களுக்கு நல்லது” என்று கூறி நான் தடுத்துவிட்டேன். இன்றுவரை என் சொல்லைத் தட்டாமல் டெல்லியிலேயே வசித்துவருகிறார். ‘ஒப்பிலக்கியம் – இனவரைவியல்’, ‘ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் மலையாள நாவல்கள்’, ‘தலித் கதைப் பாடல்கள்’, ‘டெல்லிச் சிறுகதைகள்’, ‘சேர்வராயன் சாமிக் கதைப் பாடல் வரலாறு’, ‘அருந்ததியர்கள் வரலாறும் பண்பாடும் - கதைப் பாடல்களின் வழி கட்டமைத்தல்’ போன்ற நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி ஆய்வுலகத்தில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார் சீனிவாசன்.

இன்றைக்கு மத்திய அரசின் பல்வேறு குழுக்கள், தேர்வுப் பணிகள் போன்றவற்றில் உறுப்பினராக இருக்கிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நான் பணிபுரிந்தபோது டெல்லிக்குப் போகும்போதெல்லாம் என்னுடன் வந்து சாஸ்திரி பவன், பல்கலைக்கழக மானியக் குழு அலுவலகத்தில் இந்தி மொழியில் பேசி, எனக்குத் தொடர்பாளராக வந்து உதவுவார்.

ஒருமுறை நான் டெல்லியில் தங்கியிருந்த நாட்களில், நான் தங்கியிருந்த சாணக்கிய புரிக்கு வந்து, அவருடைய காரில் முன்னிருக்கையில் அமரச் செய்து ஓட்டிக்கொண்டு போனார். காரில் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப் போகும்போது, “ஓர் இளைஞனாக என்னிடம் பயின்று கிராமத்தைவிட்டு டெல்லிக்கு வந்து, தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மாணவரா இவர், என்று நினைத்துக்கொண்டே ஓரக் கண்ணால் சீனிவாசனைப் பார்த்தேன். அப்போது அவரும் என்னைப் பார்த்தார். “என்ன யோசனை” என்றேன். “உங்களைப் பற்றிதான்..!” என்றவர் தொடர்ந்தார். “என் தந்தையை டெல்லிக்கு அழைத்து வந்து சுற்றிக் காட்டினேன். இப்போது அவரிடத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். அதைப் பற்றித்தான் நினைத்தேன்” என்றார்.

நான் உட்கார்ந்திருந்தது காரின் முன்னிருக்கையில் மட்டுமல்ல; அந்த மாணவனின் இதயத்திலும்தான் அல்லவா?

கட்டுரையாளர் - முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

41 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்