குரு - சிஷ்யன்: வழிகாட்டியாய் வளர்ந்தவன்!

By என்.மணி

 

செ

ன்னை தி.நகரில் ஒரு கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, சாப்பிடுவதற்காக நண்பர்களுடன் ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் பணம் கொடுக்கச் சென்றேன். அந்த சர்வர் பில்லை மட்டும் கல்லாவில் கொடுத்துவிட்டு, “பணம் வேண்டாம் சார்” என்றார்.

எனக்கும் நண்பர்களுக்கும் ஆச்சரியம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சர்வரை அணுகினோம், ‘பணம் வேண்டாம்’ என்று மறுத்தார். “ஏன் வேண்டாம்?” என்று நான் விடாமல் கேட்க, “அவர்தான் பணம் வாங்க வேண்டாம்னு சொன்னாரு” என்று சர்வர் காட்டிய திசையில் திரும்பினேன்.

அந்த நபர் என்னை நோக்கி வந்தார். என் அருகில் அவர் வந்ததும் சட்டென நினைவுக்கு வந்தார்.

“அட, நம்ம தனபாலன்!”. நான் பெயரைச் சொன்னவுடனேயே அவன் கண்கள் கலங்கின. நான் அவனுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.

கால நினைவுகள் சட்டெனப் பின்னோக்கி ஓடத் தொடங்கின.

பத்தாண்டுகளுக்கு முன்னால், ஈரோடு அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் நான் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சமயம். கல்லூரியில் படிக்கும் பிற துறை மாணவர்களோடும் நட்புபோடு பழகுவேன். அப்போது, பி.ஏ. பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்த தனபாலனும் எனக்கு நன்கு அறிமுகமானவன். அதிகம் பேசாதவன், எதையும் கூர்ந்துகேட்கும் ஆர்வமும் உடையவன். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தன் குடும்பத்தை, முன்னேற்ற வேண்டுமென்கிற ஆர்வமும் துடிப்பும் அவனது செயல்பாடுகளில் இருக்கும்.

ஒரு சகோதரனைப் போல, என்னை அடிக்கடி பார்ப்பான். பல விஷயங்களில் ஆலோசனைகள் கேட்பான். நானும் உள்ளன்போடு சொல்வேன். மிகுந்த அக்கறையோடு கேட்டுக்கொள்வான். எதையாவது சொன்னால் தயங்குவான். செய்யச் சொல்லி பலமுறை அவனுக்கு அறிவுரை சொல்லியிருக்கேன்.

ஆனால், என்னவோ, கல்லூரி படிப்பு முடிந்த பிறகு, அவனைச் சந்திக்கும் சூழல் வாய்க்கவேயில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் தி.நகரிலுள்ள இந்த ஹோட்டலில் சந்திக்கிறேன்.

“இங்க என்ன பண்றே..?” என்றேன்.

“சார்… ஊரை விட்டு சென்னைக்கு வந்துட்டேன். இந்த ஹோட்டல்ல சர்வரா இருக்கேன். வேலைவாய்ப்பு, பொது விஷயம் பத்தி நிறைய தன்னம்பிக்கை ஊட்டுற விஷயங்கள சொன்னீங்க. என் மண்டைக்கு எதுவும் சரியா ஏறலே, சார்..!” என்றான் தனபாலன்.

“தம்பி, நான் சொன்னது பொதுவானது. அதை யதார்த்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும்போது நிறைய சிக்கல்கள், பிரச்சினைகள் இருக்கும். நீ அதையெல்லாம் போட்டுக் குழப்பிக்காதே. ஹோட்டல்ல வேலை செய்யுறோமேன்னு தாழ்வு மனப்பான்மை வேண்டாம். உன்னைப் போல நானும் பல வேலைகளைச் செய்து, சிரமப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்தேன். இந்தக் கஷ்டத்தைத் தாண்டி, நீ அடுத்த கட்டத்துக்குப் போகணும்!” என்று சொன்னதும், “சார், நான் இப்ப என்ன செய்யணும்..?” என்றான். அவனது குரலில் இருந்த உறுதி, எனக்கு மனநிறைவை அளித்தது.

“நீ வாங்கும் சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வை. அடுத்த ஆண்டு ஏதாவது ஒரு கல்லூரியில் B.P.Ed, சேர்ந்து, விளையாட்டு ஆசிரியராக வரணுங்கிற லட்சியத்தோடு படி. உன்னால் நிச்சயம் முடியும்!” என்றேன். நான் சொன்னதைக் கேட்டு, தனபாலின் கண்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.

“நான் அடுத்த முறை சென்னை வர்றப்ப, வந்து பார்க்கிறேன்” என்றபடி, தனபாலிடமிருந்து விடை பெற்றேன்.

mani

தனபாலன், நான் சொன்னபடி அடுத்த ஆண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் B.P.Ed பயில விண்ணப்பித்தான். இடமும் கிடைத்தது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் படித்தான். எப்போதாவது என்னிடமும் பேசுவான். “கஷ்டமாத்தான் சார் இருக்கு. ஆனாலும், சமாளிச்சுக்குவேன்..!” என்று சொல்வான். படிப்பை முடிந்ததும், உடற்கல்வி ஆசிரியராகத் தனியார் பள்ளியொன்றில் சில காலம் பணியில் சேர்ந்தான். சில ஆண்டு போராட்டங்களுக்குப் பின், தற்போது அரசுப் பள்ளியில் தன் பணியைச் செய்து வருகிறான்.

“எனக்கு வழிகாட்டியா இருந்த உங்களைப் போலவே நானும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டியா இருக்கப் போகிறேன்” என்று அடிக்கடி என்னிடம் சொல்வான். ஏதாவது ஒரு ஊரில் பல மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிவருவது குறித்து, என்னிடம் பலமுறை தொலைபேசி வழி பகிரவும் செய்திருக்கிறான்.

தனபாலனோடு நான் பேசி ஈராண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், ஏதாவது ஒரு மாணவனுக்கு வழிகாட்டியாய், ஏதோவொரு கிராமத்தில் தனபாலன் நிச்சயம் ஆலோசனை சொல்லிக்கொண்டிருப்பான்.

கட்டுரையாளர்: பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்,
ஈரோடு கலை அறிவியல் கல்லூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்