சின்ன மாற்றம் பெரிய தீர்வு 06: உதவிக்கு உதவி

By ஜி.எஸ்.எஸ்

விற்பனைப் பிரதிநிதிகளுக்காக ஒரு நிறுவனத்தின் சார்பில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தன் வருத்தத்தை இப்படித் தெரிவித்தார்.

“கடைக்காரர்களிடம் எங்கள் பொருள்களை விற்பதற்காகக் செல்லும்போது பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். எங்களை அதிக நேரம் காக்க வைக்கிறார்கள். அவர்களது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நியாயம்தான். ஆனால், எங்களிடம் பாராமுகமாக இருக்கிறார்கள். கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

அப்போது பயிற்சிக்கு வந்திருந்த மற்றொருவர் தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.  அது சுவாரசியமாக இருந்தது.

அவர் ஒரு கடைக்குச் சென்றிருந்தபோது, ‘உட்காருங்க’ என்று மூலையில் இருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்டினார் கடை உரிமையாளர். பிறகு வெவ்​வேறு வேலைகளை அவர் செய்துகொண்டிருந்தாரே தவிர, விற்பனைப் பிரதி​நிதியை அவர் க​ண்டு கொள்ளவில்லை. ​இத்தனைக்கும் கடையின் உரிமையாளரிடம் தொலைபேசியில் சந்திக்கும் நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டு, சரியாக அந்த நேரத்தில்தான் அங்கு சென்றிருந்தார்.

என்றாலும், அவர் தொடர்ந்து நாற்காலியிலேயே வீணாக உட்காரும்படியானது. இத்தனைக்கும் அந்தக் கடை உரிமையாளர் அவசரமான, அவசியமான காரியங்களைச் செய்ததாகவும் தெரியவில்லை. நடுவே நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிய பேச்சு விற்பனைப் பிரதிநிதியின் காதுகளில் விழுந்தது. தொலைபேசி பேச்சு முடிந்த அடுத்த கணம் அந்த விற்பனைப் பிரதிநிதி எழுந்து கடை உரிமையாளரிடம் பேசத் தொடங்கினார்.

“சார், நீங்க ஏதோ பாரதிதாசன் கவிதைகளைப் பற்றி உங்கள் நண்பர்கிட்டே பேசிக்கிட்டிருந்தீங்க”.

“அட, ஆமாய்யா, என் பையனுக்கு இன்னும் இரண்டு நாளிலே அவங்க ஸ்கூலிலே கவிதை ஒப்புவிக்கும் போட்டி நடத்துறாங்க.  பாரதிதாசன் பாடல் ஒன்றை ஒப்பிக்கணுமாம். தெரிஞ்ச கடைக்கார்கிட்டே கேட்டுப் பார்த்தா பாரதியார் பாடல்கள்தான் இருக்கு.  பாரதிதாசன் பாடல்கள் புத்தகம் வர இன்னும் நான்கு நாள் ஆகும்ங்றாங்க. மகனுக்கும் மனைவிக்கும் வருத்தம்” என்றிருக்கிறார்.

“சா​ர் ஒரு பத்து நிமிஷம் வெயிட் ப​ண்ணுங்க” என்றபடி தனது சித்தப்பாவின் வீட்டுக்குச் சென்றார் அந்த விற்பனைப் பிரதிநிதி. அங்கிருந்த பாரதிதாசன் புத்தகத்தைக் கொண்டுவந்து கடை உரிமையாளரிடம் கொடுக்க, அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி.

நமக்குத் தொடர்பே இல்லாத ஒரு விஷயத்தில் பிறருக்கு உதவும்போது அதற்கான பலன் கணிசமாகவே இருக்கும்.  மனிதாபிமானம், சாமர்த்தியம் என்ற ‘​டூ-இன்-ஒன்’ அணுகுமுறை இது. அதற்குப் பிறகு அந்த விற்பனைப் பிரதிநிதிக்கு நிறைய ஆர்டர் கொடுக்கத் தொடங்கினார் கடை உரிமையாளர். எப்போது வந்தாலும் இன்முக வரவேற்புதான்.

(மாற்றம் வரும்)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்