அனுபவம் புதுமை 17: அத்தனையும் நடிப்பா கோபால்?

By கா.கார்த்திகேயன்

வாழ்க்கையில் உங்களால் எவற்றையெல்லாம் சமாளிக்க முடியும்? இதைக் கேட்டால், பணப் பிரச்சனை, போட்டி, பொறாமை என்ற நிறைய பதில் வரலாம். உண்மையில் பலரும் சமாளிக்க முடியாத ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் நம் முதுக்கு பின்னால் இருந்து விமர்சனம் செய்வது. அதில் இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து அள்ளிவிட்டு கோபத்தைக் கிளப்பிவிடும்  'எக்ஸ்பர்ட்டு'கள் நம்மைச் சுற்றியேதான் இருப்பார்கள். இது போன்றவர்கள் புகழ் மாலையை வலிய வந்து சாற்றிவிட்டு பிறகு முதுகுக்கு பின்னால் கழுவி கழுவி ஊற்றாத குறையாய் விமர்சனம் செய்துகொண்டும் இருப்பார்கள்.

“அப்பா ஊரில் இல்லை” என்று  நட்பு வட்டாரத்தில்  யதார்த்தமாகச் சொல்லும் விஷயம்கூட, இரண்டே நாளில் வேறுமாதிரியாக நம்மிடமே திரும்பி வருவதும் உண்டு.

“என்னங்க, உங்கப்பா உங்கக்கூட இல்லையாமே, கேள்விப்பட்டேன்.” இந்த மாதிரி கேட்கும்போது சம்பந்தப்பட்டவர் மீது உச்சகட்ட கோபம் வரும். “ஏன்யா அப்படி சொன்னே”ன்னு  கேட்டால், “நானா.. சேச்சே, என்னைப் போய் சந்தேகப்படலாமா?” என்று கழுவுகிற மீனில் நழுவுவதைப்போல பதில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். புறம் பேசும் நபர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சில  தலையைப் பிய்த்துக்கொள்ளவும் செய்வார்கள். இதற்கு என்ன உத்தியை கையாளலாம் என்று கேட்கறீர்களா?

இந்த மாதிரி புறம் பேசும் மனிதர்களிடம் தொண்டை வறண்டு போகிற அளவுக்குச் சண்டை போட முடியாது. பின்னே எப்படிதான் சமாளிப்பது?அதற்கு முன்னால் என்னுடைய முன்னாள் மாணவர் ஒருவன் புறம் பேசி பட்ட கதையைப் பார்க்கலாம். அவனுடைய பெயர் கோபால். ஆனால், சக மாணவர்கள் அவனுக்கு வைத்த பெயரோ ‘கொல்லைப்புற கோபால்’.

நண்பர்களிடம் முகத்துக்கு நேரா சிரித்து பேசிவிட்டு, முதுக்கு பின்னால் நண்பர்களை இட்டுக்கட்டி பேசுவதில் மன்னன். “ஏண்டா அப்படி பேசுனே”ன்னு சட்டையைப் பிடிச்சு கேட்காத குறையாகப் பேசினாலும், “மச்சான், நான் அப்படியெல்லாம் சொல்வேன்னு நீ நம்புறியா” என டயலாக் பேசிவிட்டு சத்தியம் செய்யாத குறையாய் நம்ப வைக்கும் பார்ட்டி. அதற்காக அவனை பலமுறை கண்டித்திருக்கிறேன். ஒரு முறை எப்போதும் பிரச்சினையின் வேராக இருக்க கூடாது என்றும் அவனிடம் அறிவுறுத்தினேன். அதன் விளைவு இரண்டே நாட்களில் தெரிந்தது. என்னைப் பற்றி தப்பாக கோபால் சொன்ன விஷயம் என் காதுக்கு வந்தது. கோபாலைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டால், அதற்கொரு சமாளிப்பு கதையைத் தயராக வைத்திருப்பான் என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

படிப்பை நிறைவு செய்த கோபாலுக்கு ஒரு நல்ல நிறுவனத்தில்  வேலை கிடைத்தது. ஆனால், அங்கேயும் புறம்பேசும் பழக்கத்தை விடவில்லை. ஆனால், அதுவே அவனுக்கு எதிராகத் திரும்பியது. சம்பந்தமே இல்லாமல் ‘மேலாளருக்கு கமிஷன் தந்தால்தான் எந்த வேலையும் நடக்குது. முக்கியமான ஃபைல் கையெழுத்து ஆக வேண்டுமென்றாலும் பணம் கேட்கிறார்’. இப்படி இல்லாததையும் பொல்லாததையும் கோபால் அள்ளிவிட்டிருக்கிறான்.

தொடர்ந்து இதுபோல புறம்பேசுவதை கோபால் வாடிக்கையாக வைத்திருந்ததால், சம்பந்தப்பட்டவர்கள் கோபாலைப் பற்றி நிர்வாகத்தில் புகார் செய்தனர். இது பற்றி அவனிடம் நிர்வாகம் விளக்கம் கேட்டது. ஆனால், அதற்கு பதில் சொல்லாமல், சமாளிப்பும் கோள்மூட்டலும் வளர்ந்ததே தவிர பிரச்சினை தீர்ந்தபாடில்லை. பொறுத்து பார்த்த நிர்வாகம் ஒரு முடிவுக்கு வந்தது. அவனை வட இந்தியாவுக்கு மாற்றம் செய்தது. கூடவே அவனைவிட ஜூனியரை அவனுடைய அதிகாரியாய் நியமித்தது. வேறு வழியில்லாமல் கோபால் அங்கே செல்ல நேர்ந்தது.

படிப்பும் திறமையும் இருந்து கோபாலை பின்னுக்கு இழுத்தது, அவனுடைய மனப்பான்மையும் தவறான செயல்பாடுகள்தான். இப்போது அவனுடைய வாழ்க்கையில் அது விளையாடிவிட்டது. தற்போது பணிபுரிகிற ஊரிலாவது திருந்தி விட்டானா அல்லது ஆங்கிலத்திலும், புதிதாக கற்றுக்கொண்ட மொழியினும் புறம்பேசுகிற வேலையை தொடர்கிறானா எனத் தெரியவில்லை.

கோபால் போன்ற நபர்கள், உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்யும் இடம் என எல்லா இடங்களிலும் உண்டு. புறம் பேசுவதினாலோ கோள்மூட்டுவதினாலோ உண்மையை அது சற்று அசைத்து பார்க்குமே தவிர, முழுமையாக மாற்றிவிடாது. இந்த மாதிரி புறம்பேசுவது காதுக்கு வந்தாலும் அதை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. இதை சாதுர்யமாகவும் கவனமாகவும் கையாள்வது அவசியம். ஏனென்றால், புறம்பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தமும் குறைவு... ஆயுளும் குறைவு! 

 

கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

இந்தியா

13 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்