வெல்லுவதோ இளமை 13: அந்த ஒரு தருணம்!

By என்.சொக்கன்

ஜெஃப் திகைப்போடு அந்த அறிக்கையை மீண்டும் பார்த்தார். 2,300 சதவீதம். ‘தெரியாமல் ஒரு பூஜ்ஜியம் கூடுதலாகப் போட்டுவிட்டார்களோ?’ இல்லை. உண்மையிலேயே 2,300 சதவீதம்தான். அதாவது, ஆண்டுதோறும் இருபத்து மூன்று மடங்கு வளர்ச்சி. 

ஜெஃப் எத்தனையோ ஆண்டுகளாக இதுபோன்ற தொழில்துறை அறிக்கைகளைப் படித்துக்கொண்டிருக்கிறார். வேகமாக வளர்கிற துறைகள், அதிவேகமாக முன்னேறுகிற துறைகளையெல்லாம் பார்த்திருக்கிறார். ஆனால், ஆண்டுக்கு 23 மடங்கு வளர்கிற எந்தத் துறையையும் அவர் பார்த்ததில்லை. அந்த எண்ணை அவரால் நம்பவே முடியவில்லை. 

ஆனால், அந்த அறிக்கை வெறும் ஊகமல்ல. தரவுகளின் அடிப்படையில் அந்த 2,300 சதவீதம் வளர்ச்சியை விவரித்திருந்தார்கள். நம்பத்தான் வேண்டும்! 

ஜெஃப் பார்த்த அந்த அறிக்கை, இணையத்தைப் பற்றியது. அப்போது (1994) புதிய தொழில்நுட்பமாக இருந்த இணையம் ஒவ்வோர் ஆண்டும் 2,300 சதவீதம் பெரிதாகிக்கொண்டிருப்பதாக அந்த அறிக்கை விவரித்திருந்தது. கொஞ்சம் எண்கள் முன்னேபின்னே இருப்பதாக வைத்துக்கொண்டாலும், வழக்கமான தொழில்துறைகளைவிடப் பலமடங்கு அதிவேக வளர்ச்சிதான். 

இப்படி மிக வேகமாக வளர்கிற துறைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றில் தொற்றிக்கொண்டால், மளமளவென்று முன்னேறலாம். நம்முடைய திறமை கொஞ்சம், சந்தைச்சூழல் மிச்சம் என்று பெரிய அளவில் வெற்றிபெற்றுவிடலாம். 

அதேநேரம், இந்த வளர்ச்சி என்றென்றைக்கும் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பரபரவென்று மேலேறிப் பொத்தென்று கீழே விழுந்தால், அதோடு சேர்ந்து நமக்கும் அடிபடும். அந்த ஆபத்துக்குத் தயாராக இருந்தால், இறங்கி ஒரு கை பார்க்கலாம். 

அப்போது ஜெஃப் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்தார். ‘வளரும் நட்சத்திரம்’ என்று அவரைப் பற்றிப் பெருந்தலைகள் பேசிக்கொண்டார்கள். சம்பளம், வசதிகளுக்குக் குறைச்சலில்லை; அவ்வப்போது சாதனைகள், பதவி உயர்வுகள். முக்கியமாக, தன்னுடைய வேலை அவருக்குப் பிடித்திருந்தது; மகிழ்ச்சியோடு அதைச் செய்துகொண்டிருந்தார். 

ஆனால், இந்த அறிக்கையைப் படித்தபிறகு அவருக்குள் ஒரு குறுகுறுப்பு. ‘ஆண்டுக்கு 2,300 சதவீதம் வளர்கிற ஒரு துறையா? இதே வேகத்தில் வளர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகில் எல்லார் மீதும், எல்லாத் துறைகளிலும் இணையம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுமோ? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏதாவது செய்துபார்த்தால் என்ன?’ 

இதில் அதிகம் யோசிக்க நேரமில்லை. தயங்கிக்கொண்டிருந்தால் அதிவேகப் பேருந்து சென்றுவிடும்; அப்புறம் கால் வலிக்க நடக்க வேண்டியதுதான். 

அதற்காக, ஜெஃப் இதில் அவசரமாகக் குதிக்கவும் விரும்பவில்லை. இணையம் நல்ல சாத்தியமுள்ள தளம் என்பது புரிகிறது. ஆனால், அந்த இணையத்தை வைத்துப் புதிதாக என்ன செய்வது? அங்கே எதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்? நம்முடைய முயற்சியை மக்கள் சட்டென்று ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டுமென்றால், முதலீட்டாளர்கள் பணம் தரத் தயாராக இருக்க வேண்டுமென்றால், இணையம் சார்ந்து எந்தத் தொழிலில் இறங்க வேண்டும்? இப்படிப் பல கோணங்களில் ஆராயத் தொடங்கினார். 

அடுத்த சில மாதங்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஜெஃப் 20 பொருட்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரித்தார். இந்தப் பொருட்களை இணையத்தில் விற்றால், தொலைநோக்கில் நல்ல லாபம் தரக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்கலாம் என்று தீர்மானித்தார். 

ஆனால், இருபது பொருட்களை விற்றால் கவனம் சிதறிவிடுமில்லையா? அவற்றை மீண்டும் வடிகட்டி ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்தார். இசைத்தகடுகள், வீடியோக்கள், கணினிகள், அதற்கான மென்பொருள்கள், புத்தகங்கள். 

இந்த ஐந்தையும் மறுபடி ஆராய்ந்தபோது, புத்தகங்களை விற்பதுதான் மிகப் பொருத்தமான தொடக்கம் என்று தோன்றியது. ஒப்பீட்டளவில் புத்தகங்களின் விலை குறைவு, லட்சக்கணக்கான புத்தகங்களை ஒரே இடத்தில் பட்டியலிட்டு மக்களை ஈர்க்கலாம். அவர்கள் புதிய நிறுவனமான நம்மை நம்பி எடுத்த எடுப்பில் பெரிய தொகையைச் செலவழிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு புத்தகம் வாங்குவதென்றால் அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். நமக்கு ஒரு வாய்ப்பு தருவார்கள். அப்போது அவர்கள் மகிழும்படி ஒரு சேவையைக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டால் போதும், பிறகு இன்னும் பல பொருட்களை விற்கும் ஓர் இணையக் கடையாக அதை விரிவுபடுத்திக்கொள்ளலாம். 

இதில் தெளிவு கிடைத்த பிறகு, அவர் சிறிதும் காத்திருக்கவில்லை. உடனடியாகத் தன்னுடைய மேலாளரைச் சந்தித்தார். ‘இணையம் சார்ந்த ஒரு புத்தகக் கடையைத் தொடங்க எண்ணியிருக்கிறேன். ஆகவே, இந்த வேலையிலிருந்து விலகிக்கொள்கிறேன்.’ 

‘இது நல்ல யோசனைதான்’ என்றார் அவருடைய மேலாளர். ‘ஆனால், உங்களுக்கு இது சரியான யோசனைதானா என்று யோசித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் ஏற்கெனவே ஒரு நல்ல வேலையில் இருக்கிறீர்கள். அதை விட்டுவிட்டு இதைச் செய்யப்போகிறீர்களா?’ 

‘எனக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள்’ என்றார் ஜெஃப். ‘நான் இன்னும் சற்று யோசிக்க வேண்டும்.’ 

கைவசம் இருக்கும் நல்ல வேலையா அல்லது அதிவேக வளர்ச்சியில் இருக்கிற, அதேநேரம் அதிவேக வீழ்ச்சியையும் காணக்கூடிய ஒரு புதிய துறையில் ஒரு புதிய விஷயத்தை முயன்று பார்ப்பதா? இது பற்றி யோசித்தபோது, அவருக்கொரு சிந்தனைக்கோணம் கிடைத்தது. அதை ‘Regret-minimisation Framework’ என்று பின்னர் குறிப்பிட்டார் அவர். 

Regret என்றால் வருத்தம், ‘அடடா, இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே’ என்று பின்னால் நினைத்துப்பார்த்து வருந்துவது, வாழ்க்கையில் அப்படிப்பட்ட வருத்தங்களை இயன்றவரை குறைக்கலாம் என்பதுதான் ஜெஃப் கண்டுபிடித்த Regret-minimisation Framework. 

ஜெஃப் தன்னுடைய 80 வயதைக் கற்பனை செய்துபார்த்தார். அந்த வயதில், ஓய்வாக அமர்ந்தபடி அவர் தன்னுடைய வாழ்க்கையை அசைபோட்டுப்பார்க்கும்போது, அதில் என்ன இருக்கும்? மன நிறைவான தருணங்களா அல்லது இதைச் செய்யவில்லையே என்னும் வருத்தங்களா? 

‘நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால், பல காரணங்களால் நீங்கள் அதை அவரிடம் சொல்லவில்லை. பின்னர் அவருக்கு இன்னொருவருடன் திருமணமாகிவிடுகிறது, அதன்பிறகு, முன்பே நம்முடைய காதலைச் சொல்லியிருக்கலாமே என்று நீங்கள் வருத்தப்பட்டுப் பயனில்லை’ என்று விளக்குகிறார் ஜெஃப். ‘பல நேரம், இப்படி நாம் செல்லாத பாதைகள், எடுக்காத தீர்மானங்கள்தாம் நமக்கு வருத்தத்தைக் கொண்டுவருகின்றன. அவற்றை இப்போதே குறைத்தால், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.’ 

80 வயதான பிறகு, ‘அடடா, இளமைக் காலத்தில் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமே’ என்று வருந்துவதைவிட, இப்போது இதை முயன்றுபார்த்துவிடுவது நல்லது என்று நினைத்தார் ஜெஃப். அப்படிச் செய்தால், பின்னர் அதை எண்ணித்தான் பெருமைப்படுவோம், நிச்சயம் வருந்த மாட்டோம் என்று அவருக்குத் தோன்றியது. 

ஒருவேளை, அந்த முயற்சி தோற்றுவிட்டால்? 

அப்போதும், முயன்றுபார்த்தோம் என்னும் மன நிறைவு இருக்கும். ‘முயன்றிருக்கலாமே’ என்ற வருத்தம் இருக்காது, அது முக்கியமல்லவா? 

ஜெஃப் பெஜோஸ் துணிந்து களத்தில் இறங்கினார். இணையத்தில் நூல்களை விற்பனை செய்கிற ‘அமேசான்.காம்’ இணையக் கடையை அமைத்தார். பல போராட்டங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்களுக்கு இடையில் தொலைநோக்குடன் அந்நிறுவனத்தைத் தொடர்ந்து வளர்த்தார். இத்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக்கினார், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார். 

எந்தப் புதிய வாய்ப்பு வரும்போதும் இதுவா, அதுவா என்ற குழப்பம் ஏற்படுவது இயல்பு. அப்போதெல்லாம் ஜெஃப் தந்த சூத்திரத்தை நினைத்துக்கொள்ளலாம். 80 வயதில், இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுவதைவிட, அதை இப்போது செய்துபார்த்துவிடலாம்; துணிந்து செயல்படுங்கள்! 

(இளமை பாயும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்