காலேஜ் கார் ரேஸ் சீறிப் பாய்ந்த இளசுகள்

By மணிகண்டன் நமஷ்

படித்தோம், தேர்வு எழுதினோம், வேலையில் சேர்ந்தோம் என்பது வழக்கம். ஆனால், அது தவிர புதுமையாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டார் ஆத்மிகா. அவர் செய்தது ஒரு சாதனை. அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்கள்.

அப்படியென்ன சாதனை?

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை ரேஸ் கிளப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பெரிய பெரிய ஸ்பான்சர்கள் உதவ, பிரபல ரேஸ் வீரர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் ரேஸ் கிளப் அது. அந்த கிளப்பின் ஒரு ரேஸில் முழுக்க முழுக்க இன்ஜினீயரிங் மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டால் அது சாதனை இல்லாமல் வேறென்ன?

இந்தியாவில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, சுசூகி நிறுவனமும் வேறு சில நிறுவனங்களும் இணைந்து ஸ்டூடண்ட் பார்முலா என்னும் ரேஸை ஏற்பாடு செய்திருந்தன. ஜூலை 18,19,

20-ம் தேதி வரை மாணவ மாணவியரின் ரேஸ் கார்கள் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தன.

ரேஸில் பங்கேற்கும் கார்களை உருவாக்குவதும் ட்ராக்கில் ஓட்டுவதும் அந்த மாணவர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த ரேஸின் விதி. இதன்படி 183 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் 87 அணிக்கள் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டன. இதில் 2 பெண்கள் குழுக்களும் அடக்கம்.

பந்தயத்தின் முதல் நாள் முன்னோட்டப் போட்டியும் அதற்கடுத்த நாள் கார்களுக்கான சோதனைப் பந்தயமும் நடைபெற்றது. இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 12 கல்லூரிகளில் தமிழகத்தின் பி.எஸ்.ஜி., சோனா, எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அணிகளும் இடம்பெற்றிருந்தன. மிக முக்கியமாக பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரிக் குழுவினர் தயாரித்த காரில் ரேஸ் ட்ரைவராகச் சீறியவர் ஆத்மிகா என்னும் 22 வயதுப் பெண்.

இந்தப் பந்தயத்தில் புனே பொறியியல் கல்லூரி குழுவினர் உருவாக்கிய கார், பாதி பயணத்திலேயே தீப்பிழம்புகளைக் கக்கியபோது அதன் ஓட்டுநர் அவசர அவசரமாக காரிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது தான் இது வெறும் ஜாலியான போட்டி மட்டுமல்ல கொஞ்சம் அயர்ந்தால், உயிரே போகிற அளவுக்குச் சவால்கள் நிறைந்தது என்று புரிந்தது.

டெல்லி இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் ரேஸரான சுருதியிடம் பேசியபோது, “எங்களது காரைக் கிட்டத்தட்ட 8 மாதங்களாக உருவாக்கினோம். எங்கள் குழுவில் உள்ள 20 பேரும் தனித்தனியாக ஸ்டியரிங், கியர் சிஸ்டம், பிரேக், ஆட்டோமேஷன் என்று ஆளுக்கு ஒரு ஏரியாவில் கவனம் செலுத்தி வெற்றிகரமாக உருவாக்கினோம். எங்கள் காருக்கான செலவு ரூ.8 லட்சம்” என்று சிரிக்கிறார்.

இது ஒருபுறமென்றால் பழமையான கட்டுப்பாடுகளில் ஊறிப்போன தமிழகத்தில், அதிலும் கொங்கு தமிழ் பேசும் ஆத்மிகா ஆண்களுக்குச் சவால்விட்டு ரேஸில் உறுமியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

“பொண்ணுங்க ஃபிளைட் ஓட்ட ஆரம்பிச்சுட்ட இந்தக் காலத்துல, ரேஸ் கார் ஓட்டுறது ஒண்ணும் பெரிய விஷயமில்ல. ஆனா யாரும் இந்தத் துறைக்குத் துணிஞ்சு வர மாட்டேங்கிறாங்க. பெண்கள் வராததால் நான்லாம் ஆண்கள்கூட தான் ரேஸ்ல கலந்துக்க வேண்டி இருக்குது. அதுனால இதுல ஆர்வம் உள்ள பொண்ணுங்க கட்டாயம் இந்தத் துறைக்கு வரணுமுங்க” என்று தன் பந்தயக் காரை போலவே சீறுகிறார் ஆத்மிகா.

கிட்டத்தட்ட 8 லேப்ஸ்கள் வரை நடத்தப்பட்ட இறுதிப் பந்தயத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ரேஸ் கார் முதலிடத்தைப் பிடித்தது. அவர்களுக்கு 2 லட்சம் பரிசாகக் கொடுக்கப்பட்ட போதும், மொத்த பேரின் கவனமும் ஆத்மிகா & டீம் மீதுதான் பதிந்திருந்தது.

ஏனென்றால் அவரவர் 8 மாதம், ஒரு வருடத்திற்கு உழைத்துப் பல லட்சங்களைக் கொட்டி ரேஸ் காரினை உருவாக்கினால், இவர்கள் வெறும் நாற்பது நாட்களில் 2 லட்சம் செலவில் இந்தியாவிலேயே குறைந்த விலையிலான ரேஸ் காரை உருவாக்கித் தூள் கிளப்பியிருந்தனர்.

சிப்ஸ் கொறித்தவாறே ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், ஈ.எஸ்.பி. என்னிலும் கார் ரேஸ்களைக் கண்ட நமது கண்களை விட்டு மாணவ மாணவிகளின் இந்த கார் ரேஸ் காட்சிகள் அகலாது என்றே சொல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

3 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்