இரவுநேரச் சென்னையின் முகம்!- மீரா கதிரவன் பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

 

கி

ராமத்துப் பின்னணியில் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடும் கலையழகோடும் பதிவு செய்து பரவலான கவனத்தைப் பெற்ற படம் ’அவள் பெயர் தமிழரசி’. அந்தப் படத்தை எழுதி, இயக்கிய மீரா கதிரவனின் இரண்டாவது படம் ‘விழித்திரு’. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுப் பணிகளில் இருந்தவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

முதல் படம் கிராமியப் பின்னணி, இப்போது மாநகரப் பின்னணி. சென்னைக்குப் பல முகங்கள் உண்டு. இதில் எந்த முகத்தை ‘விழித்திரு’வில் காணலாம்?

இதுவரை நீங்கள் பார்க்காத சென்னை நகரத்தின் மறுமுகத்தை நீங்கள் இப்படத்தில் பார்க்கலாம். பொதுவாக நாம் உறங்கிக் கடந்துவிடுகிற இந்தச் சென்னை நகரத்தின் ஓர் இரவு என்பது எத்தனை சம்பவங்களை நிகழ்த்துவதாகவும் எத்தனை வேடிக்கைகளைக் காட்டுவதாகவும் எத்தனை அத்துமீறல்களை, அநீதிகளை அரங்கேற்றுவதாகவும் இருக்கிறதென்பதை இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். சென்னை நகரத்து மனிதர்கள், மக்கள் வாழ்வியலின் அசலான ஒரு பகுதியை எங்கும் நிற்காத திரைக்கதை தனது சம்பவங்களின் வழியே காட்டியபடி விறுவிறுப்பாக நகரும்.

மொத்தப் படத்தையும் இரவிலேயே எடுத்திருக்கிறீர்கள். இரவு நேரப் படப்பிடிப்பு என்பது உங்களுக்கு எந்த மாதிரியான சாத்தியங்கள் மற்றும் சவால்களைக் கொடுத்தது?

படப்பிடிப்புக்குச் சாதகமாக இருந்தது, இரவு நேரச் சென்னை நகரத்தின் அமைதி, இடையூறில்லாத சாலைகள், நடிகர்கள் - தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு ஏதுவான க்ளைமேட். இம்மாதிரியான சாத்தியங்களைக் கொடுத்த இரவு, பல சவால்களையும் எங்களுக்குக் கொடுத்தது. ஒருநாள் இரவு படப்பிடிப்பு என்பது இரண்டு பகல் நேரத்திற்கான உழைப்பையும் இரண்டு மடங்கு செலவையும் கோருவதாக இருந்தது. அந்தச் சாத்தியங்களையும் சவால்களையும் கடந்தே ’விழித்திரு’ உருவாக்கியிருக்கிறது. ’விழித்திரு’வில் ரசிகர்கள் பார்க்கவிருக்கும் இரவுநேரச் சென்னையின் காட்சி அழகியல் என்பது இவ்விதமாகத்தான் எங்கள் கேமராவுக்குள் வந்தது.

பகலெல்லாம் ஒருவர் முகத்தை ஒருவர், பார்க்க முடியாத பரபரப்பில் நம்மை வைத்திருக்கும் இந்தப் பெருநகரம், இரவு நேரத்தில் ஒரு பெரிய மலையையே விழுங்கிவிட்டுப் படுத்திருக்கும் டிராகன்போல ரசிர்கள் தங்கள் கண்களுக்கு விரிந்து தோன்றுவதை உணர்வார்கள்.

‘விழித்திரு’வை ‘மல்டி ஸ்டாரர்’ படமாக உருவாகியிருக்கிறது. எப்படி இத்தனை நட்சத்திரங்களைக் கட்டி மேய்த்தீர்கள்?

ஒரு மல்டி ஸ்டாரர் படத்தை எடுப்பது பெரும் முதலீட்டைக் கோருவது. அடுத்து, அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்புத்தளத்திற்குக் கொண்டு வருவது. ஒருவர் இல்லையென்றாலும் காட்சியைப் படமாக்குவதில் சிக்கல் ஏற்படும். இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, சாய் தன்ஷிகா, தம்பி ராமையா, எஸ்.பி.சரண், சிரஞ்சிவியின் உடன் பிறந்த தம்பி நாக பாபு, சுதா சந்தர், அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, மற்றும் சிறப்புத் தோற்றத்தில் டி.ராஜேந்தர் எல்லோரும் மிகச்சிறப்பாகத் தங்கள் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து தங்குதடையற்ற ஒத்துழைப்பு எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தது எனது முதல் படம். ‘அவள் பெயர் தமிழரசி’ உருவாக்கித் தந்த நற்பெயர்.

‘கபாலி’க்கு பிறகு தன்ஷிகா பன்முகத் தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் எப்படி?

உண்மைதான். சமீபத்தில் நடிக்க வந்த கதாநாயகிகளில் கதாநாயகனின் ஊறுகாயாகத் தன்னை மாற்றிக்கொள்ளாதவர் தன்ஷிகா. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு தன்ஷிகாவைக் ’விழித்திரு’ காட்டும். மிக இயல்பாக, அதே நேரத்தில் எதற்கும் துணிந்த, ஆளுமையான கதாபாத்திரம். தன்ஷிகாவின் நடிப்புத்திறன், பேச்சு, வல்லமை போன்றவை புதிய பரிமாணத்தைத் தொட்டிருப்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து…?

படத்தின் கதை முழுவதும் சென்னையில் ஓர் இரவில் நடப்பதால் ஒளிப்பதிவிற்கு மிகுந்த கவனம் கொடுக்கப்பட்டது. விஜய் மில்டன் தனது நேர்த்தியான ஒளியமைப்பினாலும் விசாலமான கோணங்களாலும் இரவு நேர சென்னையை அசலாகக் காட்டியிருக்கிறார். கார்த்திகை தீபம் அன்று கதை நிகழ்வதால் அந்த இரவுக்குப் பிரகாசமூட்டி ஒரு வெண்ணிற இரவாக்கியிருக்கிறார். நான்கு கதைகள் கொண்ட இப்படத்திற்கு பிரவீன்.KL அவர்களின் படத்தொகுப்பும் ஒரு பலமாக சேர்ந்திருக்கிறது. இப்படத்திற்கு சத்யன் மகாலிங்கம் இசையமைத்திருக்கிறார், பாடல்களை பாரதிதாசன், டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி, தமயந்தி எழுதியிருக்கிறார்கள். நண்பர்களின் துணையுடன் எனது ஹயா மரியம் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் டி. ஆரின் பங்கு என்ன?

சிம்பு ஆட்டத்தில் வல்லவர். அவரே அசந்துவிடுவார் அந்த அளவு ஆட்டத்தில் அசத்தியிருக்கிறார். ரசிகர்களுக்கு அது ஒரு விருந்தாக இருக்கும். கதையை நகர்த்திச் செல்லும் ஆட்டப் பாடல். திணிப்பாக இருக்காது.

விழித்திரு’ என்ன சொல்ல வருகிறது?

விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காகவும் இப்படம் பேசுகிறது. அதிகாரமும் அரசியல் பலமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கின்ற அநீதிகளைப் பற்றியும் எளிய மக்களுக்கு இருக்கின்ற அன்பு, இரக்க உணர்வு பற்றி இப்படம் பேசுகிறது.

அன்பு, கருணை, சமத்துவம் இல்லாத சமூகம் சமூகமும் அல்ல அச்சமூகத்திலிருப்பவர்கள் மனிதர்கள் என்று சொல்லத்தக்கவர்களும் அல்ல. இதுவே எனது பார்வை.. குரானில் ஒரு வாசகம் உண்டு, “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்” என்று. அதேபோல் வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையிலிருந்து மேலெழும் ஒரு குரலாக ‘விழித்திரு’ இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்