ரஜினி 71: சூப்பர் ஸ்டார் உருவான கதை

By ச.கோபாலகிருஷ்ணன்

தீபாவளி அன்று வெளியான ‘அண்ணாத்த’ முதல் காட்சி முடிவடைந்ததிலிருந்தே கடுமையான எதிர்மறை விமர்சனங்களையும் மீம்களையும் ட்ரால்களையும் எதிர்கொண்டது. ஆனால், முதல் மூன்று வார இறுதிநாட்களில் திரையிடப்பட்ட பெரும்பாலான அரங்குகளில் ‘அண்ணாத்த’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. இதற்கு ஒரே காரணம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ரஜினி படத்தை ஒரு முறையாவது திரையரங்குக்கு சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்து மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குக்குப் படையெடுத்திருக்கிறார்கள். இப்படியாக டிசம்பர் 12 அன்று 71 வயதை நிறைவுசெய்யும் ரஜினி, 40 ஆண்டுகளுக்கு முன் தனக்கு வழங்கப்பட்ட ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு பொருத்தமானவராக இன்றும் திகழ்கிறார் என்பதை மறுக்க முடியாது.

பொன்விழா ஆண்டை நெருங்கும் தன்னுடைய திரைப்பயணத்தில் இன்றைக்கும் இந்திய சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரமாக ரஜினி கோலோச்சிக்கொண்டிருக்கிறார். அதற்கான விதைகள் ஆழமாக வேரூன்றப்பட்ட காலம் 1980-89 என்னும் பத்தாண்டுகள்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவர் நடித்த திரைப்படங்களை அசைபோடுவதன் மூலம் ஒரு சாதனையாளராக அவர் உருமாறியது எப்படி என்னும் சித்திரத்தைப் பெற முடியும்.

வெற்றிகளின் அணிவகுப்பு

1978இல் வெளியான ‘பைரவி’ ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம். அதற்குப் பிறகும் சில குறிப்பிடத்தக்க படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், ஒரு கதாநாயக நடிகராக ரஜினி தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது 1980ஆம் ஆண்டிலிருந்துதான்.

அடுத்து வந்தப் பத்தாண்டுகளில் ரஜினி நடிப்பில் வெளியான முதல் படமான ‘பில்லா’ (1980) வணிகரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு ‘கல்ட் கிளாசிக்’ அந்தஸ்தையும் பெற்றது. ஒரு ஆக் ஷன் ஹீரோவாக ரஜினி வலுவாகக் கால்பதிக்கக் காரணமாக அமைந்தது. ‘ஜானி’, ‘பொல்லாதவன்’ என அந்த ஆண்டின் இடைப் பகுதியில் வெளியான படங்களும் வெற்றிப் படங்களே. ஆண்டின் இறுதியில் வெளியான ‘முரட்டுக் காளை’யில் வீரமும் நேசமும் நிரம்பிய கிராமத்து மனிதனாக ரஜினி நடித்திருந்தார். இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினியின் நட்சத்திர மதிப்பை கடைக்கோடி கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியது.

ரஜினி நடிப்பில் வெற்றி, பெரிய வெற்றி, பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்கள் இந்தக் காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் வெற்றிகள் திரைவணிகத்தில் ரஜினிக்குத் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத் தந்தன.

பன்முகப் பரிமாணங்கள்

ஒவ்வொரு வெற்றிப் படமும் ரஜினியின் வணிக அந்தஸ்தை அதிகரித்தது. அதோடு ஒரு வெகுஜன நடிகராக ரஜினியின் பன்முகப் பரிமாணங்கள் வெளிப்பட்டன. பாமரர்கள் முதல் சீரியஸ் சினிமாவை விரும்புகிறவர்கள் வரை, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நேசத்துக்குரிய பிணைப்பையோ மரியாதையையோ பெறும் அளவுக்கு ரஜினி மாறினார்.

மகேந்திரனின் ‘ஜானி’, எஸ்.பி. முத்துராமனின் ‘புதுக் கவிதை’ போன்ற படங்களில் மென்மையான காதலனாக பெண்கள் மனதைக் கொள்ளைகொண்டார். ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் எந்த விதமான சாகசங்களும் இல்லாமல் அமைதியும் நிதானமும் மிகுந்த கிராமத்து விவசாயியாக நடித்திருப்பார். கே.பாலசந்தரின் ’தில்லுமுல்லு’ ரஜினிக்குள் இருக்கும் அபாரமான நகைச்சுவைக் கலைஞனை முழுமையாக வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘வேலைக்காரன்’, ‘ஊர்க் காவலன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘குரு சிஷ்யன்’, ‘ராஜா சின்ன ரோஜா’, ‘ராஜாதி ராஜா’ எனப் பல படங்களில் அபாரமான நகைச்சுவை நடிப்பால் ரஜினி அசத்தினார்.

‘மூன்று முகம்’ படத்தில் ஃப்ளாஷ்பேக் பகுதியில் பெரிய கிருதா, தூக்கி வாரிய தலைமுடி, கட்டுக்கோப்பான உடலமைப்பு, கச்சிதமான சீருடை அணிந்த அலெக்ஸ் பாண்டியனாக அந்தக் காலகட்டத்தின் கம்பீரமான காவல்துறை அதிகாரியை கண்முன் நிறுத்தினார் ரஜினி. தமிழ் சினிமாவில் ’தங்கப் பதக்கம்’ சிவாஜி கணேசனின் எஸ்.பி.செளத்ரிக்குப் பிறகு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரி என அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்துக்காக ரஜினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

‘நெற்றிக்கண்’ படத்தில் தீராத பாலியல் வேட்கையுடையவராகவும் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அன்புமிக்க குடும்பத் தலைவராகவும் தன் நிஜவயதைவிட அதிக வயதுள்ள முதிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். ‘படிக்காதவன்’ படத்தில் தம்பிக்காகத் தியாகங்கள் பல செய்து அவர்கள் மீது பாசத்தைப் பொழியும் வெள்ளந்தி மனிதராக சென்டிமென்ட் நடிப்பில் ரசிகர்களின் மனங்களைக் கரைய வைத்தார் ரஜினி. ஆக் ஷன், ஸ்டைல் மட்டுமல்லாமல்; நகைச்சுவை, சென்டிமென்ட் காட்சிகளிலும் தனித்துவ பாணியுடன் சிறப்பாகப் பங்களிக்கக்கூடிய திறமைதான் ரஜினியை அனைத்து வயதினருக்கும் பிடித்த நடிகராக்கியது. அது இன்றுவரை தொடர்கிறது.

அல்லும் பகலும் உழைப்பு

1980-89 வரையிலான பத்தாண்டுகளில் ரஜினிகாந்த் 70 படங்களில் சுழன்றுசுழன்று நடித்திருக்கிறார். புத்தாயிரத்துக்கு முந்தைய காலத்தில் பெரும்பாலான நடிகர்கள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 2, 3 படங்களிலாவது நடித்துவிடுவார்கள். இதைக் கணக்கில்கொண்டாலும்கூட 80களில் ரஜினி நடித்த படங்களின் எண்ணிக்கை மலைக்க வைப்பவை. ஆண்டுக்கு ஏழு படங்கள் என்னும் சராசரியுடன் தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளுக்கு அவர் இயங்கியிருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மூன்று ஆண்டுகளில் 25 படங்களில் ரஜினி நடித்ததைப் பதிவுசெய்திருந்தார். 1980-கள்முழுவதும் பல நாட்களை முழுமையாகப் படப்பிடிப்புத் தளத்திலேயே கழித்திருக்கிறார் ரஜினி. அப்போது சிறிது ஓய்வுநேரம் கிடைக்கும்போது, முகத்தில் ஒரு துண்டையோ கைக்குட்டையையோ போட்டுக்கொண்டு கிடைத்த இடத்தில் படுத்துத் தூங்கிவிடுவாராம்.

வெளியூர்களில் படப்பிடிப்பு என்றால் மற்றவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடங்களிலேயே அவரும் தங்கிக்கொள்வார் என்பதை அவருடன் பணியாற்றியவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் சற்று ஓய்வெடுக்க இடம் கிடைத்தால் போதும் என்பதே அவருடைய மனநிலையாக இருந்துள்ளது. அந்த வகையில் ரஜினியின் இயல்பான குணமான எளிமை, அவரின் அசாத்திய உழைப்புக்கு துணைபுரிந்து உச்ச நட்சத்திரமாக்குவதில் பங்களித்துள்ளது என்று உறுதிபடச் சொல்லலாம். இதுவே பிற்காலத்தில் அவரை அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ஆக்கியது.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 min ago

சினிமா

6 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்