வாலி வாசல்: சொற்களின் கோடீஸ்வரர்!

By நெல்லை ஜெயந்தா

இன்று காவியக் கவிஞர் வாலியின் 90-வது பிறந்த நாள். விரும்புகிறவர்கள் தம் விருப்பப் பாடமாக எடுத்தும் படிக்கிற அளவுக்கு நிறைய பக்கங்களில் நிரம்பி வழிவதுதான் வாலியின் வாழ்க்கை. தன் அறிவையும் உழைப்பையுமே நம்பி களத்தில் இறங்குகிற ஒரு மனிதன், கூடவே வியூகம் ஒன்றை வகுத்துக் கொண்டால் வெற்றிக் கோட்டை எட்டி விடலாம் என்பதற்கு பாடல் உலகம் பதித்து வைத்திருந்த வரலாற்று உதாரணம் வாலி.

திரையிசைப் பாடல்களில் தனக்கென எந்தப் பாணியையும் வைத்துக் கொள்ளாததுதான் வாலியின் பாணி. அதனால்தான் அவரின் சில பாடல்கள் நமக்கு வேறு சில கவிஞர்களை நினைவுபடுத்தும். பாடல் கேட்டுவரும் எந்த இயக்குநரிடமும் அவர் கேட்கிற முதல் கேள்வி

“எந்த மாதிரி பாட்டு வேணும்?“ என்பதுதான்.

தான் நினைத்ததை எழுதுவதைவிடவும், இயக்குநரும் இசையமைப்பாளரும் நினைத்ததை எழுதுவதைத்தான் வழக்கமாக வைத்திருந்தார். தன்னை ஒரு வார்த்தை வங்கியாக வைத்துக் கொண்டு வரிகளை வாரிக் கொட்டியதும் வாலியின் பலம்.

இப்படித்தான் தனது ’விருதகிரி’ படத்தில் வாலி எழுதியிருந்த “சில வரிகள் சிலரது மனதை புண்படுத்தும் " என்று சொல்லி அந்த வரிகளை விஜயகாந்த் மாற்ற சொன்னபோது, தனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் விஜயகாந்தின் விருப்பப்படி மாற்றிக்கொடுத்தார். இசையமைப்பாளார் சுந்தர் சி பாபுவிடம் மாற்று வரிகளை உடனே வழங்கிய வேகத்தை அருகில் இருந்து பார்த்து அதிசயித்தவன் நான்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை ’இதயத்தில் நீ’ படத்துக்காக முதன்முதலில் சந்தித்தபோது ‘பூவரையும் பூங்கொடிக்கு பூமாலைபோடவா / பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா’ என்ற பல்லவியை வாலி சொன்னதும், பாடிப்பார்த்த எம்.எஸ்.வி. 'பூங்கொடிக்கு…' என்ற வார்த்தை சரியில்லை என்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் ’பூங்கொடியே’ என்று மாற்றிக் கொடுத்திருக்கிறார் வாலி. அந்தத் திறமைதான் விஸ்வநாதனின் இதயத்தில் கண்ணதாசனுக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் வாலியை உட்கார வைத்தது.

‘கற்பகம்’ படப் பாடல் கம்போசிங்கில்கூட, தான் ஆர்மோனியத்தில் இருந்து விரல்களை எடுப்பதற்குள் பாட்டுக்கு வரிகளை வாலி கொடுத்த வேகம்தான் மெல்லிசை மன்னரை மிரள வைத்தது.

’கண்ணதாசணைப் போல இன்னொரு கவிஞர் வர நூறாண்டுகள் ஆகும்’ என்று சொல்லப்பட்ட நேரத்தில், அடுத்த பத்தாண்டுகளிலேயே வந்துதித்தவர் வாலி’ என்றொரு முறை சொன்னார் கவிஞர் வைரமுத்து.

’’சிறு வயதில் ரங்கம் – கழுதை மண்டபத்தில் தனது நண்பன் இசைக் கலைஞர் பாட்டு ராஜுவோடு நாடகங்களுக்கு பாட்டு எழுதிப் பெற்ற பயிற்சிதான் மெட்டைக் கேட்டதும் பாட்டை கொட்டும் ஆற்றலை அடியேனுக்கு அருளியது” என்பதுதான் வாலியின் வாக்குமூலம்.

அறுபதுகளுக்குப் பின்பு வந்த பாடலாசியர்களில் இசைஞானம் கொண்ட ஒரே பாடலாசிரியர் வாலிதான். ரங்கத்தில் தான் கேட்ட சங்கீத கச்சேரிகளால் - கர்நாடக சங்கீதத்தில் குறிப்பாக அதன் ராகங்களின் அறிவை வாலிக்குள் வளர்த்திருந்தன.

எழுத்தில் இருந்த வேகம் - இசையில் இருந்த ஞானம் - சொற்களில் இருந்த எளிமை - சொல்லில் இருந்த புதுமை… இவைதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் வாலி தன் பாட்டுக் கொடியை பறக்கவிட்டதற்கான காரணம் ஆகும்.

படைக்கிற எந்தப் படைப்பிலும் அதிக கவனம் செலுத்தியதும் அவர் வெற்றிக்கு இன்னொரு காரணம். சென்னை புத்தகக்காட்சியில் வாலி தலைமையில் ஒரு கவியரங்கம் நடக்கவிருந்தது. "என்ன தலைப்புய்யா கொடுக்கலாம்?’’ என்று, எதிரே அமர்ந்திருந்த என்னிடமும் கவிஞர் பழனிபாரதியிடமும் கேட்டார் வாலி.

தான் யோசித்துக்கொண்டே நாங்கள் சொல்லும் தலைப்புகளையும் கேட்கிறார். ’புத்தகக்காட்சிய்யா. தலைப்பு புத்தகம் சம்பந்தப்பட்டதா இருக்கணும்’ யோசித்தோம். கடைசியில் வாலி சொன்ன தலைப்பு - ’காகிதம் ஓர் ஆயுதம்’. உபதலைப்புகள் பத்திரிகை - பணம் - கடிதம் - சுவரொட்டி - பத்திரம் - புத்தகம்.

இப்படி தனது படைப்புலகம் பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்று இறங்கிஉழைத்தவர் வாலி. தன் முழு நேரத்தையும் பாட்டுப் பணிக்காக ஒதுக்கிக் கொண்டவர். எப்பொழுது தேடினாலும் கோடம்பாக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து, இலக்கிய கூட்டங்களைத் தவிர்த்தவர். வாய்ப்புகள் வந்து குவிந்தும் வெளிநாடு செல்ல கடைசிவரை பாஸ்போட் எடுக்கதாத ஒரே கவிஞர் - வாலி ஒருவர்தான்.

’’பாடல் எழுத வந்த நான், அதில் கவனம் செலுத்தாமல் படத் யாரிப்பிலும், இயக்கத்திலும் இறங்கியதுதான் நான் செய்த தவறு. வாலி அவ்வாறு செய்யாமல் பாடல் என்ற ஒரே குதிரையில் ஓடியதும் அவர் வெற்றிக்குக் காரணம்” என்று பஞ்சு அருணாச்சலம் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது எனக்கு.

உண்மைதான், சொத்துகள் வாங்கினால் அதற்காக செலவழிக்கிற நேரமும் அதில் சிதறுகிற கவனமும் தன் பாட்டுப் பயணத்தை பாதித்துவிடுமென்று சொன்ன அவர், தனது வரவுகளை எல்லாம் வங்கியில் மட்டுமே இட்டு வைத்தார். வாழ்ந்த வீட்டைத் தவிர எந்த ஒரு அசையா சொத்தும் கிடையாது அவரிடம்.

தன் பாடல்களுக்குள் இருந்த அரசியலை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் அத்தனைத் தலைவர்களிடமும் வைத்திருந்த நட்பு – எந்த ஒரு சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் தான் உண்டு; தன் பாடல்கள் உண்டு என்றிருந்த பொறுப்பு - பாடல் எழுதி சம்பாதித்ததைத் தவிர வேறெந்த தொழிலையும் தொடாத கற்பு… இவைதான் வாலி என்ற கவிஞனை வாழ்நாளெல்லாம் உயர்த்தி வைத்தது. இன்று அவர் பிறந்த நாளிலும் நம்மை நினைக்க வைத்தது.

கட்டுரையாளர், கவிஞர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: nellaijayantha@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

விளையாட்டு

5 mins ago

இணைப்பிதழ்கள்

31 mins ago

தமிழகம்

41 mins ago

இணைப்பிதழ்கள்

58 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்