சினிமா எடுத்துப் பார் 45: ரஜினியின் ஹாங்காங் சண்டை

By எஸ்.பி.முத்துராமன்

ஹாங்காங்கில் வாழும் அருணாச்சலமும், அவர் மனைவி திருமதி அபிராமி அருணாசலமும் எங்களுக்காக அந்த நாட்டு அரசு அதிகாரிகளிடம் பேசினர். அந்நாட்டு அரசு அதிகாரிகள் என்னை அழைத்த னர். என்னைச் சுற்றி நான்கு பேர் அமர்ந்துகொண்டு வட்ட மேஜை மாநாடு மாதிரி அழகான ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். எனக்குத் தெரிந்த ஆங்கிலத் தில் அவர்களிடம் பேசினால் அசிங்கப் பட்டுவிடுவோம் என்று யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர்கள், ஒரு மீடியேட் டரை ஏற்பாடு செய்தனர். படப்பிடிப்பு விஷயத்தை விவரமாக சொன்னேன். ‘‘பொழுதுபோக்கு அம்சங்களோடு, நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது. எங்கள் பூங்காவுக்கும் பெயர் கிடைக்கும்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர்.

அவர்கள் என்னிடம் கேள்வி கேட்ட போது, ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாமல் போனதே என்று அவமானப் பட்டு தலைகுனிந்தேன். இதை இங்கு நான் சொல்ல காரணம் உள்ளது. நான் தேவகோட்டையில் தே.பிரித்தோ பள்ளியில்தான் படித்தேன். ரெவ். ஃபாதர் மச்சாடொ சாமியார்தான் பள்ளிக்குத் தலைவர். தலைமையாசிரியரும் அவர் தான். அவர்தான் ஆங்கில வகுப்பு எடுப்பார். அவர் ஆங்கில இலக்கண வகுப்பு எடுக்கும்போது எனக்கு ரொம்ப வும் கசக்கும். நான்தான் பள்ளி மாணவர் தலைவன் என்பதால், ‘‘ஆண்டு விழா சம்பந்தமாக அவரைப் பார்க் கணும், இவர்கிட்ட பேசணும்’’னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு வகுப்புக் குப் போவதைத் தவிர்ப்பேன். அப்போ தெல்லாம் வாத்தியாரை ஏமாற்றிவிட்ட தாக மனதில் நினைத்துக்கொள்வேன். ஆனால், உண்மையில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன். அன்று ஹாங் காங் நாட்டில் ஆங்கிலம் பேச முடியாமல் அவமானப்பட்டு நின்றபோது மிகவும் வருத்தப்பட்டேன்.

இந்தக் கால இளைஞர்களுக்காகத் தான் இதைத் சொல்கிறேன். வாய்ப்பு அமையும்போது மொழி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் போட்டித் தேர்வு, நேர்காணல் உட்பட பல இடங்களில் உங்களுக்குக் கை கொடுக்கும். நான் அன்றைக்கு இந்தி, ஆங்கிலப் புலமை பெற்றிருந்தால் இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட அடையாளம் மிக்க இயக்குந ராக பெயர் வாங்கியிக்க முடியும். கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்தாததால் அன்று வாய்ப்பு களை இழந்தேன். இதை என் அனுபவ உரையாக எடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக ஸ்போக்கன் இங்கிலீஷில் கவனம் செலுத்துங்கள்.

படப்பிடிப்பை நடத்த அனுமதி கிடைத்ததும் ஓஷோன் பூங்காவில் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அடுக் கடுக்காக பல மலைகளைக் கொண்ட இடம் அது. ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு காட்சி. யூனிட்டில் குறை வான ஆட்களோடு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தோம். அங்கே படப்பிடிப்புக் கான பொருட்களைத் தூக்கிச் செல்ல கூலி ஆட்கள் கிடைக்கவில்லை. நாங்களே தூக்கிக்கொண்டுப் புறப்பட் டோம். எங்களோடுச் சேர்ந்து ரஜினியும் இரண்டு பேட்டரிகளைத் தூக்கி தோள்பட்டையின் வலதுப் பக்கமும் இடதுப் பக்கமும் சுமந்துகொண்டு மலையேறினார்.

‘‘எதுக்கு ரஜினி… நீங்கப் போய் அதுவும் ரெண்டு தோள்லேயும் தூக்கிட்டு..?’’ என்று கவலையுடன் கேட்டேன். ‘‘லெஃப்ட்ல போட்டா ரைட்ல இழுக்குது. ரைட்ல போட்டா லெஃப்ட்ல இழுக்குது. அதான் ரெண்டு பக்கமும் தூக்கி வெச்சுக்கிட்டேன்’’ என்று இயல்பாக பதில் சொன்னார் ரஜினி. தான் ஒரு பிரபலமான கதாநாயகன் என்கிற நினைப்பு துளியும் இல்லாமல், எங்கள் குழுவில் ஒருவராக இணைந்து பணியாற்றினார். இப்படி ஓர் எளிய மனிதரை சினிமா உலகில் பார்ப்பது அபூர்வம்.

சண்டை காட்சியைப் படமாக்க ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தப் பயிற்சி யாளரை வைத்துக்கொண்டோம். அந்த சண்டை காட்சியின் முதல் ஷாட்டை எடுக்கும்போது அந்த ஹாங்காங் மாஸ்டர் பூமியைத் தொட்டு வணங்கி விட்டு, சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அதை பார்த்ததும் எனக்கும் ரஜினிக்கும் ஒரே ஆச்சரியம். நம்ம ஜூடோ ரத்தினம் மாஸ்டர் இப்படித் தானே நமஸ்காரம் செய்வார். இதையே இவரும் செய்கிறாரே என்று, அவ ரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர் ‘‘குங்பூ, கராத்தே எல்லாம் போதி தர்மர்னு ஒருத்தர் எங்கள் முன்னோர் களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அவர் எங்கள் முன்னோர் களுக்கு கற்றுக்கொடுத்ததைத்தான் இன்றைக்கு நாங்கள் புதுமைப்படுத்தி மற்றவர்களுக்குக் கற்றுத் தருகிறோம்’’ என்றார். இவ்வளவு அரிய பெரும் சாதனைகளுக்கு எல்லாம் தொடக்கம் நாம்தான் என்பதை உணர வைக்கத் தான் இதனை உங்களுக்கு விளக்கமாக எழுதுகிறேன்.

அங்கு நாங்கள் எடுத்த டால்ஃபின் ஷோ ரொம்ப சிறப்பானது. இசைக்கு ஏற்ற மாதிரி டால்ஃபின் நடனம் ஆடும். ஒரு டால்ஃபினை மட்டும் வித்தியாசமாக ஆட வைக்கும் முயற்சியில் அதன் பயிற்சியாளர் ஈடுபட்டார். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த டால்ஃபின் ஆட மறுத்தது. ‘‘முடியலைன்னா விட்டு விடலாமே?’’ என்று நாங்கள் சொன் னதற்கு, ‘‘இன்னைக்கு விட்டுவிட்டால் தொடர்ந்து செய்யாது’’ என்று தொடர்ந்து முயற்சித்து டால்ஃபினை ஆட வைத்துவிட்டார்.

இரண்டு கார்களோடு படப்பிடிப்புப் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்காக ஒரு மினி லாரியையும் வாடகைக்கு எடுத்திருந்தோம். சீனக்காரர் ஒருவர்தான் ஓட்டுநர். மினி லாரியில் ஆட்களை ஏற்றக் கூடாது. தவிர்க்க முடியாத நேரங்களில் சில பேர் அந்த மினி லாரியில் ஏறிக்கொள்வோம். அவருக்கு போலீஸ் பரிசோதனை இடங்கள் அனைத் தும் அத்துப்படி. மினி லாரியில் செல் லும்போது திடீரென்று ‘கிக்கிபிக்கி… கிக்கிபிக்கி…’ என்று கத்துவார். அப்போது நாங்கள் வெளியே தலை தெரியாத அளவுக்கு கீழே மறைந்துகொள் வோம். மீண்டும், ‘மேக்கே… மேம்மே…’ என்று சத்தம் போடுவார். அப் போது நாங்கள் எழுந்துகொள்வோம். அந்த அளவுக்கு அவர் உதவியாக இருந்தார்.

ஒருநாள் சீக்கிரமே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரஜினி, தேவி மற்றும் குழுவினரை எல்லாம் ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் மினி லாரி ஓட்டுநரிடம் ‘‘உயரமான இடத்தில் இருந்து விமானம் புறப்படுவதைப் படமெடுக்க வேண்டும். அந்த மாதிரி இடம் உங்களுக்குத் தெரியுமா?’’ என்று அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டோம். அவரும் தலையாட்டினார். நாங்கள் அவரது மினி லாரியில் புறப்பட்டோம். மலையின் மேலே தொடர்ந்து போய்கொண்டே இருந்தார் ஓட்டுநர். நாங்கள் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் எங்களை வேறு எங்கோ அழைத்து போகிறாரோ என்று பதற்றம் ஏற்பட்டது. நாங்கள் கேட்ட உயரமான இடத்தை அந்த ஓட்டுநர் எங்களுக்குக் காட்டினாரா? அல்லது எங்களை நடுக்காடு மாதிரி நடுமலையில் தவிக்கவிட்டாரா?

- இன்னும் படம் பார்ப்போம்...







படம், உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்