அடூர் கோபாலகிருஷ்ணன் 80-வது பிறந்த நாள்: ஒரு படைப்பாளியின் மறுபக்கம்! 

By ஆர்.சி.ஜெயந்தன்

கலைப் படங்கள் குறித்த உரையாடலும், அவற்றை தேடிக் காணும் ஊக்கமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. திரைப்படச் சங்கங்களின் பெருக்கம், சுயாதீனப் படைப்பாளிகளின் தொடர் செயல்பாடுகள் ஆகியவற்றுடன், இணையத்தின் அசுர வளர்ச்சி, சமூக ஊடகங்கள் தரும் சுதந்திரம் ஆகியவையும் இதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. இன்று கலைப் படங்களை காண்பதற்கென்றே செயலிகள் பல வந்துவிட்டன.

இருந்தும் பாரிய அளவில் நன்மை விளைந்துவிடவில்லை. துரதிர்ஷ்டவசமாக, கலைப் படங்கள் குறித்து இங்கே நிகழும் உரையாடலில், ‘போலி’யான முயற்சிகள் பேசுபொருளாகிவிடுகின்றன. வெகுஜன வணிகப் படங்களில் மலிந்திருக்கும் வன்முறை, பாலியல் சித்தரிப்புகளை, உலக அளவில் இன்று பெரும்பாலான போலி ‘கலைப் பட’ முயற்சிகள் கைகொள்கின்றன. அதனால் அவற்றின் ‘போலி’ கலைப்பட முகம் அம்பலப்பட்டுப்போகிறதா என்றால் இல்லை. அத்தகைய படங்களை கொண்டாடும் போக்கு என்பது, ‘அசலான, சிந்தனை மரபுக்கொண்ட, இலக்கியத் தன்மை கொண்ட, மிகை உணர்ச்சியற்ற கலைப் படங்க’ளை, வளர்த்தெடுக்கவேண்டிய ரசனையிலிருந்து அப்புறப்படுத்திவிடுகிறது.

இந்த போலி கலைப் படங்களின் உருவாக்கம், உலகம் முழுவதும் அதிகரித்திருப்பதற்கு போலி திரைப்பட விழாக்களும் ஒருவகையில் காரணம். திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு பெறுவது, ஏதேனும் ஒரு பிரிவில் பரிசு பெறுவது போன்றவை இன்று லாபமீட்டும் மற்றொரு வணிகத் தளமாக மாறிவிட்டது. இதனால், சிறந்த வழிமுறைகளை பின்பற்றும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள்கூட, ‘போலி’யான கலைப் படங்களுக்கும் இடமளித்து, பரிசளிக்க வேண்டிய ‘சர்வைவல்’ நிலையில் இயங்கத் தொடங்கிவிட்டன.

சித்தாந்தத்துக்கு வெளியே...

இதுபோன்ற சிக்கல்களையெல்லாம் மீறி நிற்கும் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற அசலான படைப்பாளிகள் நம்மிடமே இருக்கும்போது, அவர்களுடைய படைப்புலகம் குறித்தும் படைப்பாளுமை குறித்தும் உரையாடுவதன் மூலம், ‘போலி’களைப் புறந்தள்ளும் ரசனையில் தேர்ச்சி பெறமுடியும். உண்மையில், ‘சூர்யா’ என்கிற திரைப்படச் சங்கத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்தி, கலைப் படங்கள் குறித்த உரையாடலையும் திரையிடல்களையும் முன்னெடுத்த பிறகே ஒரு திரைப் படைப்பாளியாக உருப்பெற்றார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

தன்னுடைய 32-வது வயதில் இயக்கிய ‘சுயம்வரம்’ (1972) படத்தின் மூலம் புதிய யதார்த்த அலையை மலையாள சினிமாவில் தொடங்கி வைத்தார். முதல் படம் தொடங்கி, கடந்த 2016-ல் வெளியான அவருடைய ‘ஒன்ஸ் எகைன்’ (2016) வரை, கடந்த 49 ஆண்டுகளில் அவர் 12 படங்களைப் படைத்திருக்கிறார். அவற்றில் கேரளத்தின் சமூக, அரசியல், பண்பாட்டு பயணத்தின் வரைபடத்தைக் காணமுடியும். ஒரு படைப்பாளியாக அடூர் எடுத்துக்கொண்டிருக்கும் கலைச் சுதந்திரம், அவற்றை உலக முழுவதும் கொண்டாடும் படைப்புகளாக மாற்றியிருக்கின்றன.

இந்தியக் கலைப்பட இயக்கத்துக்கு காரணமாக இருந்த வங்கப் படைப்பாளிகள், தங்களுடைய முயற்சிகளில் ‘இடதுசாரி சித்தாந்தப் பார்வை’யைக் கொண்டிருந்ததுடன் அதிலிருந்து விலக முடியாதவர்களாகவும் இயங்கினார்கள். ஆனால், ஆன்மிகம், அரசியல் சித்தாந்தம் ஆகிய இருபெரும் பிடிமானம் கொண்ட கேரளத்தில், அவற்றுடன் சமரசமற்ற மோதலையும், காட்சிமொழியின் வழியாக நுட்பான விமர்சனத்தையும் வைக்கும் படைப்பாளியாக அடூர் திகழ்கிறார். இடதுசாரி இயக்கங்களின் தோல்வியைப் பேசிய அவருடைய ‘முகாமுகம்’ (1984) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

அடூரின் திரைப்படங்களில், வரலாற்றின் தழும்பும் அதிகாரத்தின் துருவும் ஏறிய சமூக, குடும்ப அமைப்பைக் காணமுடியும். அதில் சிக்கி உழலும் ஆண் மையக் கதாபாத்திரங்கள் முதன்மை பெறுவதுடன், அவற்றின் முரண்களும் மோதல்களும் மற்ற கதாபாத்திரங்களின் நிலையைப் பெரிதும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. அடூரின் இயக்கத்தில், 1981-ல் வெளியான ‘எலிப் பத்தாயம்’ மலையாள சினிமாவின் மிக உயர்ந்த படைப்பாகவும் உலக அளவில் இன்றைக்கும் விவாதிக்கவும் கொண்டாடவும் கூடிய அசலான ‘உலக சினிமா’வாக விளங்கி வருகிறது.

ஒளிப்பதிவாளர்
மங்கட ரவி வர்மாவுடன் அடூர்

மிகை உணர்ச்சியிலிருந்து விடுதலை

ஓர் அசலான, புதிய யதார்த்த வகைத் திரைப்படம் கொண்டிருக்கும் பாவனை என்பது, ‘போலச் செய்தலாக’ ஒருபோதும் இருப்பதில்லை.‘வாழ்க்கையை நிகர்த்த தருணங்களை காட்சிப்படுத்தும்போது, கற்பனைச் சம்பவங்களால் நிறைந்து வேகமெடுக்கும் காட்சிகள் நம்மை களிப்பூட்டக்கூடியவை. ஒரு கலைப்படத்துக்கு அவை ஒருபோதும் தேவைப்படுவதில்லை. மாறாக, ஆவணப்படத் தன்மையும் யதார்த்தவாத அழகியலின் வெளிப்படைத் தன்மையும் கொண்டாதாக அவை அமைகின்றன. அவ்வாறு அமையும்போது சட்டகங்கள், காட்சித் துணுக்குகள், காட்சிகளின் நீளம், காட்சிப் படிமங்கள் ஆகியன ஒரு கலைப் படத்தின் காட்சிமொழியைத் தீர்மானிக்கின்றன.

அதேபோல், வடிவத்தில் தேவையற்ற சோதனை முயற்சிகள் எதையும் திணிக்காத எளிமையுடன் அவை இருக்கின்றன. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைமொழியானது, போலி பாவனைகளை முற்றாகப் புறந்தள்ளிய ஆவணத் தன்மையுடனும் எளிய காட்சிப் படிமங்கள் கொண்டும் இருப்பதைக் காணமுடியும். குறிப்பாக ‘சுயரம்வரம்’ வழியாக அடூர் முன்வைத்த காட்சிமொழி, மலையாள கலைப்பட இயக்கத்தில் இன்றுவரை பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. கதாநாயக வணிக சினிமாக்களுக்கு இணையான எண்ணிக்கையில் வெளியாகும் பல மலையாள வெகுஜன சினிமாக்கள், இன்று கலைப்படங்களுக்கு அருகில் வந்து நிற்பதற்கு, அடூர் போன்ற படைப்பாளிகள் அமைத்துத் தந்தப் பாதையே அடித்தளமாகி நிற்கிறது.

அடூரின் படைப்பாளுமையில் அடுத்த பெரும் கலாபூர்வ அம்சம், கதாபாத்திரங்கள் தங்களுடைய உணர்வு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் மின்னல் வேக முகபாவங்கள். உறவினர், நண்பர்களுடனான நிஜ வாழ்வின் தருணங்களில், சக மனிதர்களுடனான சந்திப்பில், அவர்களுடைய முகங்களில் நாம் கவனித்தும் கவனிக்காமலும் கடந்து செல்லும் மின்னல் வேக உணர்வு மாற்றங்களை அடூரின் கதாபாத்திரங்களிடம் துல்லியமாகக் காண முடியும். இவ்வகை உணர்வு மாற்றங்களின் பிரதிபலிப்பில், மிகை உணர்ச்சி என்பதை அவருடைய எந்த படத்திலும் எந்த காட்சித் துணுக்கிலும் காண முடியாது. இதுவே அடூரின் கதாபாத்திரங்களை ‘நாமாகவும் நம்முடையதாகவும்’ ஆக்கிவிடுகிறது.

‘சுயம்வரம்’ படப்பிடிப்பில் ஒலிப்பதிவாளர் தேவதாஸுடன் 32 வயது அடூர்

மறுபக்கம்

அடூரின் படங்கள் கலைப் படைப்புகளாக உயர்ந்து நிற்பதற்கு, சுதந்திரமும் சார்பின்மையும் கொண்ட படைப்பாளுமையே முதன்மைக் காரணம். என்றாலும், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை கலைநுட்பங்களாக அவர் மாற்றிக் கையாண்டது முக்கிய காரணம். அடூரின் கண்களாக அவருடன் அதிக படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவு மேதை மங்கட ரவி வர்மா, அன்றாட வாழ்வின் ஒலிகளை மட்டுமே பதிவுசெய்து கொடுத்த தேவதாஸ் போன்ற கலைஞர்களின் பங்களிப்பு, நாளை, தன்னுடைய 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அடூரின் திரைப் பயணத்தில் முக்கிய அங்கம் வகிப்பது.

உலகமும் இந்தியாவும் கொண்டாடும் ஒரு படைப்பாளியாக அடூர் விளங்குவதற்கு அவருடைய திரைப்படங்கள் மட்டுமே காரணம் அல்ல; ஆவணப்படங்களை திரைப்படங்களுக்கு இணையான கலாபூர்வத்துடன் தொடர்ந்து இயக்கி வந்திருக்கிறார். இதுவரை 22 ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார். ‘உள்ளத்தை உள்ளபடி காட்டுவதே ஆவணப்படம், அதனால் அதுவொரு கலைவடிவமாக ஒருபோதும் இயங்க முடியாது' என்கிற கோட்பாடு இன்று உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், திரைப்படங்களை உருவாக்கும் படைப்பாளி ஒருபோதும் ஆவணப்படங்களை இயக்க வாய்ப்பில்லை எனும் நிலைதான் தமிழ் சினிமாவில் இருக்கிறது.

ஆனால், தன்னுடைய திரைப்படங்களுக்கு சற்றும் குறையாத கலாபூர்வத்தை அடூரின் ஆவணப்படங்கள் கொண்டிருக்கிறன. அடூரின் கலைவாழ்வில் அதிகம் அறியப்படாத அவருடைய இந்த மறுபக்கம், தமிழ்ச் சூழலில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. இங்கே தரமான ஆவணப்படங்கள் உருவாகவும் கொண்டாடப்படவும் வழியின்றிப்போனால், ஒருபோதும் நாம் சிறந்த திரைப்படங்களை தமிழில் உருவாக்க முடியாது.

ஆவணப்படங்களுக்கான வெளியை உருவாக்குவதன் மூலமே கலைப் படங்களுக்கான வெளி உருவாகும் என்று நம்புகிறவர் அடூர். வெகுஜன சினிமாவில் தரமான படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள், ஆவணப் படங்களின் பக்கமும் தங்கள் கவனத்தை திருப்பும்போது இங்கே மாற்றங்கள் நிகழும். அல்லது சிறந்த ஆவணப்படங்களை அறிமுகப்படுத்தி அவற்றை கவனம் பெறச் செய்யும் முயற்சியிலாவது அவர்கள் இறங்கவேண்டும்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்