வேதாளம் - திரை விமர்சனம்

By இந்து டாக்கீஸ் குழு

பாசத்தைக் கொட்டித் தீர்க்கும் ஒருவன் வெறி கொண்ட வேதாளமாகச் சீறும் பின்னணி என்ன என்பதுதான் கதை.

சர்வதேச அளவில் குற்றங்களைச் செய்துவரும் வில்லன் ரத்னா பாய் (ராகுல் தேவ்) ராணுவத்துடன் மோதும் சண்டைக் காட்சியோடு படம் தொடங்குகிறது. தங்கை தமிழை (லட்சுமி மேனன்) கல்லூரியில் சேர்ப் பதற்காக கணேஷ் (அஜித்) கொல்கத்தா வருகிறார். அங்கே டாக்ஸி கம்பெனி நடத்தும் லட்சுமிதாஸை (சூரி) சந்திக்கிறார். அந்த கம்பெனியில் அஜித்துக்கு டிரைவர் வேலை கிடைக்கிறது. சிரித்த முகம், சாது வான பார்வை என்று வேலையைப் பார்த்துவரும் அஜித், தங்கையின் மீது அளவு கடந்த பாசம் காட்டுகிறார்.

கடத்தல் கும்பலைப் பிடிக்கக் காவல்துறைக்கு உதவுகிறார் அஜித். அந்தக் கும்பல் அஜித்தைக் கொல்ல வரும்போது அஜித் அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். லட்சுமி மேனன், அஸ்வின் நிச்சயதார்த்த வேலைகள் தொடங்கும் நேரத்தில் தாதா கும்பலோடு அடிதடி, கொலை என்று அஜித்தின் மற்றொரு முகத்தை ஸ்ருதி ஹாசன் பார்த்துவிடு கிறார். அதன் பிறகு நிச்சயதார்த்தம் நடந்ததா? அஜித்துக்கும் அந்த சர்வதேச தாதா கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதுதான் வேதாளத்தின் புதிர்.

தங்கை மீது அஜித் அளவு கடந்த அன்பைக் கொட்டும்போதே அந்தப் பாசத்துக்கு பின்னணியில் ஏதோ ஒரு பயங்கரம் இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது. வெள்ளந்தியான அந்தச் சிரிப்பு பேய்ச் சிரிப்பாக மாறும் தருணமும் பல படங்களின் நினைவு களைக் கிளறவே செய்கிறது. சிவா காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்திக்கொண்டு செல்கிறார். ஆனால் கதையைவிட அஜித்தின் நட்சத்திர மதிப்பைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

சர்வதேச அளவில் நெட்வொர்க், அதிநவீன தொழில்நுட்பம், பெரிய அளவில் ஆள் பலம் ஆகியவை கொண்ட ராகுல் தேவின் ஒவ் வொரு குழுவையும் எந்த விதப் பின்புலமும் இல்லாத அஜித் தனி யாக நின்று வேரோடு சாய்க்கிறார். அவர்களுடைய திட்டங்கள் எல்லாம் அவருக்கு எப்படித் தெரிகின்றன என்பது மாயமாக இருக்கிறது. துப்பாக்கிகள் சகிதம் நிற்கும் வில்லன்களை வெறுங்கையோடு புரட்டி எடுக்கும் சூப்பர்மேனாகத் தமிழ் சினிமா நாயகர்களைப் பார்த்துவிட்டோம். இப்போது மந்திரவாதிகளாகவும் அவர்கள் அவதாரம் எடுக்கிறார்கள். நல்ல முன்னேற்றம்தான்.

ரவுடி, அப்பாவி என இரண்டு பரிமாணங்களி லும் அஜித் கலக்குகிறார். பாசத்தை வெளிப்படுத்தும் போது பெண்களிடமும், சண்டையிடும்போது தன் ரசிகர்களிடமும் கைதட்டல்களை அள்ளுகிறார். பாடல்களிலும் தனித்துத் தெரிகிறார்.

படத்தில் லட்சுமி மேனன் நடிப்பும், கதாபாத்திரமும் கச்சிதம். ஸ்ருதி ஹாசன், பெரிய நாயகர்களுக்கு ஜோடி என்றால் மட்டும் போதும், அதில் தனக்கு கதாபாத்திரம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. ராகுல் தேவ், கபீர் என்று வட இந்திய நடிகர்களின் வில்லத்தனம் பெரிதாக ஈர்க்கவில்லை.

சூரி, அஜித்தால் தன் மாமியாரிடமும், மனைவியிடமும் சிக்கிக்கொள்ளும் இடங்கள் சுவாரஸ்யம். மயில்சாமி, சாமிநாதன், கோவை சரளா என்று காமெடி பட்டாளம் இருந்தும் நகைச்சுவை குறைவுதான்.

பாடல்களிலும், பின்னணி இசையிலும் அனிருத் மெனக்கெட்டிருக்கிறார். ‘ஆலுமா டோலுமா’ பாடல் இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் நாயகன் அறிமுகமாகும் பாடலைப் போல மிரட்டுகிறது. கொல்கத்தாவின் நெரிசலான இடங்களையும் வெற்றியின் கேமரா வண்ணமயமாகக் காட்டுகிறது.

திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களையே அண்மையில் அதிகம் கேட்ட நமக்குப் பெண்கள், பெண் சுதந்திரம் ஆகியவை பற்றி மரியாதையுடன் அஜித் பேசுவது பெரிய ஆறுதல். வசனம் எழுதிய சிவாவுக்குப் பாராட்டுக்கள்.

எதையும் யோசிக்காமல் படம் பார்த்தால் அஜித்தின் வசீகரம் உங்களைத் திரையரங்கில் உட்காரவைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்