நேர்காணல்: என்னோட ஆபீஸ் அவங்களுக்காக திறந்திருக்கு!- சூரி

By கா.இசக்கி முத்து

கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் என முன்னணி காமெடியன்கள் பலரும் சொல்லி வைத்தாற்போல் கதாநாயக வேஷம் கட்ட, தற்போது காமெடி ஏரியாவில் சூரிதான் தனிக் காட்டு ராஜா. சூர்யா, விஷால், சிம்பு என முன்னணி ஹீரோக்களில் தொடங்கி இன்றைய வளரும் நாயகர்கள் வரை அத்தனை பேருக்கும் சூரிதான் நகைச்சுவை நண்பர். பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் அவரைச் சந்தித்தபோது…

காமெடியில கிட்டத்தட்ட முதலிடத்துக்கு வந்துட்டீங்க. இப்போ எப்படி உணர்றீங்க சூரி?

ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்கி நின்ன பய, இன்னிக்கு ஒரு நிமிஷ ஓய்வுக்காக ஏங்கிக் கிடக்குறேன்னா அதுக்குக் காரணம் இயக்குநர் சுசீந்திரன். சின்னச் சின்ன கேரக்டர்கள்ல தலைகாட்டியவனை ‘வெண்ணிலா கபடி குழு' படத்துல வெளையாட வைச்சு ஒளிமயமான எதிர்காலத்தை ஓப்பன் பண்ணி விட்டார். மதுரை பக்கத்துல இருக்குற ராஜாகூர்தான் நான் பொறந்த ஊர். சினிமாவுல காமெடி நடிகர்கள் எவ்வளவு பேர் இருந்துருக்காங்க. அந்த இடத்துல நம்ம பிள்ளையும், இந்த ஊர்ல இருந்து போய் இருக்கான்னு நினைச்சு ரத்தப் பொறப்புகளும், ஊரும் சந்தோஷத்துல மெதக்குது. கஷ்டங்களுக்குப் பெறகு கெடைக்குற சந்தோஷம் பத்து மடங்கு சந்தோஷத்துக்குச் சமம்.

கதாநாயகனாக நடிக்கிற ஆசையில்லையா?

நிறைய பேர் கேட்டாங்க. இப்பவும் கேட்டுக்கிட்டுதான் இருக்காங்க. ஹிட் கொடுத்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், ‘இந்தக் கதை சூரி பண்ணினா நல்லாயிருக்கும்... போய்ச் சொல்லுங்க'ன்னு என்கிட்ட அனுப்பி வைக்கிறாங்க. தன்னோட முகத்தைக் கண்ணாடியில பார்க்குற எல்லாருக்குமே ஹீரோவாகிற ஆசை இருக்கும். எனக்கும் இருக்கு. முழுக்கக் முழுக்க காமெடியா சரவெடி கொளுத்துற கேரக்டர் கிடைச்சா நிச்சயம் ஹீரோவா பண்ணலாம். ஆனா, அதுக்கு முன்னால காமெடி நடிகரா நான் இன்னும் ஸ்கோர் பண்ணனும். எனக்கு நானே திருப்தியாகிற அளவுக்கு என்னோட பசி அடங்கணும். அப்புறம் பார்க்கலாம் ஹீரோ வேஷத்தை...

நாயகர்களுடன் இணைந்து நடிக்கையில் கலக்குவது கவுண்டர் பாணி. கதாநாயகர்களையே கலாய்ப்பது சந்தானம் பாணி.. உங்க பாணி?

எந்தப் படத்திலயும் நான் கதைய விட்டு வெலகாத சூரியாத்தான் இருப்பேன். சில படங்கள்ல பாடி லாங்வேஜ் பயங்கரமா பண்ணியிருப்பேன். சில படங்கள்ல அமைதியா பண்ணியிருப்பேன். கதைக்குத் தக்கபடி கதகளி ஆடுறதுதான் நம்ம பாணி. இயக்குநர்கள்கிட்ட என்னைய அப்படியே தூக்கி கொடுத்திடுவேன். அதனாலதான் ஒவ்வொரு படத்துக்கும் என்னால வெரைட்டி காட்ட முடியுது. இயக்குநர்கள் சுசீந்திரன், சமுத்திரக்கனி, பாண்டியராஜ் எல்லாம் என்னைய இஷ்டத்துக்கு வளைச்சு எனக்குத் தெரியாத திறமைகளையே சர்வ சாதாரணமா வெளிக்கொண்டு வார ஆட்கள். நான் எப்பவுமே இயக்குநர்களோட செல்லப்புள்ள.

உங்களுக்கும் சந்தானத்துக்கும்தான் தொழில் போட்டிங்கிறது உண்மைதானா?

அப்படியெல்லாம் கிடையாது. ‘இது நம்ம ஆளு' படத்துல சந்தானம்கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். மனசுல போட்டியோ பொறாமையோ இருந்தா எப்புடி ரெண்டு பேரும் ஒண்ணா நடிக்க முடியும்? நான் ஒரு ஓட்டப் பந்தய வீரன். விசில் அடிச்சா ஓடிக்கிட்டே இருக்கணும். நான் போய் ரீச்சான உடனே, நான் இரண்டாவதுன்னு சொன்னாங்கன்னா ஓ.கே. சொல்லிட்டு வந்துடுவேன். ஆனா, அடுத்த முறை முதல் இடத்தைப் பிடிக்க இன்னும் கொஞ்சம் வேகமா ஓடுவேன். எனக்குப் போட்டினு யாரும் கிடையாது. என்னைய‌பொறுத்தவரை நான் முதல் ஆளா கோட்டை தொடணும்.

ஜில்லாவில் விஜய்யுடன் நடிச்சீங்க அடுத்து அஜித் கூட எப்போ?

‘ஜி' படத்தில் ஒரு சின்ன கேரக்டர் பண்ணினேன். அப்போ நான் டைமிங்கா பேசிய டயலாக்கைத் தட்டி கொடுத்துப் பாராட்டினார் அஜீத் சார். ‘சீக்கிரமே உங்களைப் பெரிய காமெடி நடிகனா பார்க்கணும்'னு அப்பையே ஆசிர்வாதமா சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இன்னிக்கு வளர்ந்து நிற்கிறேன். ஆனா, இதை இன்னும் அவர்கிட்ட நேர்ல போய் நின்னு சொல்ல முடியலை. நிற்க நேரமில்லாத அளவுக்கு நடிச்சாலும், ‘எப்பண்ணே எங்க தலயோட சேர்ந்து நடிப்பே’ன்னு கேட்குற என் சொந்தத் தம்பிங்க‌ ஆதிக்கும் சீனிக்கும் பதில் சொல்ல முடியலை. நானும் அல்டிமேட் ஸ்டாரோட ஆல்டைம் ஃபேன் தான். சீக்கிரமே அவரோட சேர்ந்து நடிக்கணும்.

நடிகர்கள் பலரும் படம் தயாரிக்கிற காலம் இது; உங்களுக்கு அந்த எண்ணம் இல்லையா?

‘கலாபக் காதலன்' படம் ஸ்டார்ட் பண்ண நேரத்துல சாலிகிராமம்ல ஆபிஸ் போட்டிருந்தாங்க. நான் அங்கே வாய்ப்பு கேட்கப் போனேன். அந்த இடத்துல இப்போ என்னோட ஆபீஸ் இருக்கு. வாய்ப்பு கேட்டு நின்ன இடத்தையே எனக்கு வாங்கிக் கொடுத்தது சினிமாதான். உதவி இயக்குநர்களுக்காக அந்த ஆபீஸ்ல ஒரு மினி தியேட்டரே வைச்சிருக்கேன். உதவி இயக்குநர்கள் ஏதாவது ஒரு படம் போட்டுப் பாக்கணும்னாலோ, யாரையாவது தனியா சந்திச்சு கதை விவாதம் பண்ணலாம்னாலோ அவங்க எப்போ வேணும்னாலும் என்னோட ஆபீஸுக்கு வரலாம். சினிமாதான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்ட யார்கிட்டயும் ஆபீஸோட சாவிக் கொத்தக் குடுத்துட்டு போற‌ ஆள் நானு. அதனால காலம் வரும்போது கண்டிப்பா படம் தயாரிப்பேன்!

சினிமாவில் உங்கள் இலக்கு என்ன?

காமெடியன்கிற சேர்ல காலத்துக்குக் காலம் ஆள் மாறுவாங்க. ‘இனிமே எப்பவுமே நாமதான். நமக்கு அப்புறம் ஒருத்தனும் வர முடியாது'ன்னு காமெடியன் சேரை யாரும் கட்டிப்போட முடியாது. நமக்கு அப்புறமும் பல பேர் வருவாங்க. அவங்களையும் கடந்து நம்ம காமெடி நிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. என்.எஸ். கிருஷ்ணன், பாலையா, நாகேஷ், சந்திரபாபு இப்படிக் காலம் கடந்தும் கொண்டாடப்படுற மகா காமெடியன்களோட வரிசையில இந்தச் சின்னப் பயலோட பேரும் சேரணும். அந்தளவுக்கு மக்கள் மனசுல ஸ்ட்ராங்கா என்னோட வேரை ஊனிட்டுப் போயிடணும். அம்புட்டுத்தான்!









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்