ஜெமினி கணேசன் 100: ஜெமினி - ‘காதல் மன்னன்’ அல்ல!

By ஆர்.சி.ஜெயந்தன்

அறுபதுகளின் அந்திமப் பகுதியான 1959-ம் வருடம். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நல்லவர்களாகவும் நடிப்பரசர்களாகவும் திரையில் உலா வந்த நாட்கள். இந்த இருவரில் ஒருவர் மட்டும் கிடைத்துவிட்டால் போதும், போதும், போட்ட பணத்துக்குமேல் லாபம் வந்துவிடும் என ஸ்டுடியோ முதலாளிகள் நம்பிய காலம். அப்போது, வாள்களையும் கேடயங்களையும் வீசியெறிந்துவிட்டு, வாழ்க்கையிலிருந்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய முக்கிய படம் ‘கல்யாணப் பரிசு’ திரைப்படம்.

அப்படத்தில் கதாபாத்திரங்கள் செந்தமிழ் பேசவில்லை. பேச்சுத் தமிழில் உரையாடின. அதில் காட்சி மொழிக்கும் கதாபாத்திரங்களின் இயல்பான உணர்வுகளுக்கும் முன்னுரிமை அளித்திருந்தார் அறிமுக இயக்குநர் சி.வி.தர். காதல் முக்கோணத்தில் சிக்கித் தோல்வியுறும் காளையொருவனின் வலியைக் கவித்துவச் சோகத்துடன் சித்தரித்த அந்த வெற்றிப் படத்தின் கதாநாயகன் ஜெமினி கணேசன். பாஸ்கர் எனும் படித்த இளைஞனாக, தனது கதாபாத்திரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் காட்ட கட்டுப்படுத்தப்பட்ட, அளவான நடிப்பால் உயிரூட்டி அசத்தியிருந்தார்.

அதற்கு முந்தைய ஆண்டில் வெளியான ‘வஞ்சிக்கோட்டை வாலிப’னில் போட்டி மனப்பான்மை மிகுந்த இரண்டு பெண்களுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் குறும்பு இளவரசன் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். அதற்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது விஜயா வாஹினி ஸ்டுடியோவின் ‘மிஸ்ஸியம்மா’. அதில், பள்ளிக்கூட வாத்தியார் வேலையைப் பெறவும் அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் தோழியுடன் இணைந்து கணவன் - மனைவியாக நடிக்கப்போய் காதலில் விழும் பாலுவாக நடித்து, ‘காதல் திலகம்’ ஆனார். நடிகையர் திலகத்தின் நடிப்புக்குத் துளிகூடக் குறைவின்றி நடித்து, தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளையடித்தார். உலகமே அவரைக் ‘காதல் மன்னன்’ என்று கல்வெட்டில் பொறித்துவைத்திருக்கிறது. ஆனால், அவரை ‘காதல் திலகம்’ என்று வாதிடுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ 1947-ல் வெளியான அதே ஆண்டில் வெளியானது ‘மிஸ் மாலினி’. அதில் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகிற துணை வேடத்தில் அறிமுகமானார் ஜெமினி. அதன்பின் 1952-ல் வெளியான ‘தாயுள்ளம்’, ‘யார் இந்த ஆர்.கணேசன்?’ எனக் கேட்க வைத்தது. ‘தாயுள்ள’த்தில் அழகான வில்லன் வேடம்! நாயகன், நாயகியைக் காண்பதற்காக அல்லாமல், வசீகர வில்லனைக் காண மக்கள் திரையரங்கு நோக்கிப் படையெடுத்தார்கள். ‘அடேங்கப்பா! என்று அசரவைக்கும் காதல் நடிப்பால் ‘காதல் திலக’த்துக்கான முத்திரையைத் தனது வில்லன் வேடத்திலேயே பதித்துக் காட்டிவிட்டார் ஜெமினி கணேசன்.

சாதனை இயக்குநர்கள் நாடிவந்த நடிகர்

ஆண்களும் வியந்த கட்டழகு மட்டுமே ஜெமினிக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதேபோல், காதல் படங்கள் மட்டும்தான் ஜெமினியின் அடையாளம் என்று நிறுவி வந்திருப்பதில் நியாயமும் இல்லை. ஏனென்றால், தான் ஏற்று நடித்த காதல் கதைகளில் ஜெமினியின் காதல் நடிப்பு, கண்ணியத்தின் எல்லையைத் துளியும் கடந்ததில்லை. திரை நடிப்பில் விரசம் என்ற கோட்டுக்குள் தன் நிழல் விழுவதைக்கூட அவர் விரும்பவில்லை. உண்மையில் தான் ஏற்ற கதாபாத்திரங்களால் காதலை கௌரவப்படுத்திய மகா கலைஞன் ஜெமினி.

எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகவும் சிவாஜி நடிகர் திலகமாகவும் தங்களது நட்சத்திர சாம்ராஜ்ஜியத்தை நிறுவிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், அவர்களுக்கு இணையாக புராண, சரித்திர, சமூகப் படங்களில் நடித்து ‘காதல் திலகம்’ ஆனதன் பின்னணியில் இருந்தவை ஜெமினி கணேசனின் பன்முகத் திறமைகள்தாம். எம்.ஜி.ஆர்., சிவாஜியைப்போல ‘பாய்ஸ் கம்பெனி’ நாடக அனுபவம்கூட ஜெமினியிடம் கிடையாது.

ஆனால், அபார நடிப்புத் திறமையுடன், ஒரு கதாநாயகனுக்குத் தேவையான அத்தனை திறமைகளும் அவரிடம் கொட்டிக் கிடந்ததை கண்டுகொண்டார்கள் கதையை நம்பிக் காவியங்கள் படைக்க முயன்ற சாதனை இயக்குநர்கள். எனவே, இமாலய பிம்பங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிக்காக காத்திருக்காமல் ஜெமினி கணேசனை நாடிவந்தார்கள். தன்னை நம்பி வந்த படைப்பாளிகளுக்கு பணிவு காட்டும் துணிவு ஜெமினியிடம் இருந்தது. அதனால், அடுத்த இருபது ஆண்டுகளில் ‘ஹீரோயிசம்’ இல்லாத சமூகப் படைப்புகளில் அதிகமாகப் பங்கேற்ற ஜெமினி கணேசன் தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிப்போனார்.

கதைதான் கதாநாயகன் என்று நம்பிய கே.ராம்நாத், பி.புல்லையா, ஆர்.பிரகாஷ் ராவ், எல்.வி.பிரசாத் போன்ற முதுபெரும் சாதனை இயக்குநர்களின் இயக்கத்தில் தன் திரைப் பயணத்தை தொடங்கியவர் ஜெமினி. அதன் பின்னர் ‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பார்த்தால் பசி தீரும்’ ஆகிய படங்களில் பீம்சிங்கும், ‘கற்பகம்’, ‘சித்தி’ என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும், ‘கல்யாணப் பரிசு’, ‘மீண்ட சொர்க்கம்’, ‘தேன் நிலவு’. சுமைதாங்கி’ என தரும், ‘புன்னகை’, ‘இரு கோடுகள்’, ‘காவியத் தலைவி’, ‘பூவா தலையா’, ‘வெள்ளி விழா’, ‘உன்னால் முடியும் தம்பி’ என கே.பாலசந்தரும் ஜெமினியை பல பரிமாணங்களில் கதாபாத்திரங்களாக நமக்குப் பந்தி வைத்தவர்கள். ‘காதல் மன்னன்’ எனும் முத்திரையைக் கடந்து நிற்கும் நடிப்புக் கலைஞன் ஜெமினி என்பதை அடையாளம் காட்டினார்கள்.

ஜெமினி கணேசனின் பன்முக நடிப்பாற்றலைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் கூறிக்கொண்டே போகலாம். நாராயணன் & கம்பெனித் தயாரிப்பில் வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் நாகராணியின் கோபத்துக்கு ஆளாகி, அவளது சாபத்தால் கூனனாகி, கோரத் தோற்றமுடைய பிச்சைக்காரனாக ஜெமினியின் நடிப்பு, எத்தனை பெரிய பிறவிக் கலைஞனையும் சவாலுக்கு அழைக்கும் ஒன்று. பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் உருவான ‘வீரபாண்டியக் கட்டப்பொம்மன்’ படத்தில், தளபதி வெள்ளையத்தேவனாக நடிப்பில் காட்டிய வீரம், ‘மாமன் மகள்’ படத்தில் பெண் வேடத்தில் காட்டிய நளினம், சிவாஜியுடன் இணைந்த முதல் படமான ‘பெண்ணின் பெருமை’யில், மனவளர்ச்சி குன்றிய வளர்ந்த மனிதனின் குழந்தைத்தனம் என்று பட்டியலை வளர்த்துக்கொண்டே போகலாம். நடிகர் திலகத்தால் மதிப்புக்குரிய மாப்பிள்ளையாக கொண்டாடப்பட்ட ஜெமினி, மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் ‘முகராசி’. ‘களத்தூர் கண்ணம்மா’வில் ஜெமினியின் மடிகளில் தவழ்ந்து விளையாடிய மாஸ்டர் கமல் வளர்ந்து நின்றபோது, அவரை கே.பாலசந்தரிடம் உரிமையுடன் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தவரும் ஜெமினிதான்.

இழப்புகளும் காதலும்

ஜெமினி கணேசனின் கலை ஆர்வத்துக்கு முதலில் விதை போட்டவர் அவரது தந்தை ராமசாமி. புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசனின் தாத்தா எஸ். நாராயணசாமி, புகழ்பெற்ற வழக்கறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை மன்னருக்கு கல்வி புகட்டிய ஆசிரியர். புதுக்கோட்டை அரசர் கல்லூரியை உருவாக்கி, அதற்கு முதல்வராகவும் திகழ்ந்தவர். ஜெமினி கணேசனின் அத்தையோ அகில இந்தியாவும் அறியப்பெற்றச் சமூகப் புரட்சியாளரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தேவதாசி முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை ஒழித்துக்கட்டச் சட்டங்களை முன்மொழிந்தவர். அவர், ஆண்கள் மட்டுமே படித்துவந்த அன்றைய சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற முதல் பெண்; சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என அவரது சாதனைகள், பட்டியலில் அடங்க மறுப்பவை.

இரண்டு வயதில் தொடங்கி, தனது தந்தை ராமசாமியிடமிருந்து மிருதங்கம், புல்லாங்குழல், வீணை ஆகியவற்றை ஜெமினி கற்றுக்கொண்டார். பத்து வயதில், கலை சொல்லித் தந்த தந்தையையும் கல்வியே முக்கியம் என்று படிப்பித்த தாத்தாவையும் இழந்தார். பின் அத்தையின் அரவணைப்பில் சென்னையில் வளர்ந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து அறிவியல் பட்டம் பெற்றார். அலமேலு என்கிற பாப்ஜியை கரம் பற்றி இல்லறத்தில் இணைந்தார். கட்டிய மனைவியைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள, படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், அங்கேயே தேங்கிப்போவது கணவரின் திறமைக்கு முட்டுக்கட்டை என்பதைக் கண்டுகொண்ட பாப்ஜி, வேறு வேலை தேட ஊக்கப்படுத்தினார். அந்த காலத்தில்தான் புகழ்பெற்ற ஜெமினி நிறுவனத்தில் அவருக்கு ‘கேஸ்டிங் உதவியாளர்’ வேலை கிடைத்தது.

திரைக் கலையின் அனைத்து துறைகளையும் அருகிலிருந்து காணவும் கற்றுக்கொள்ளவும் அங்கே வாய்ப்பு அமைந்தது. நடிகர்களைத் தேர்வுசெய்யும் வேலையில் இருந்துகொண்டே ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்பான ‘மிஸ் மாலினி’ படத்தில் சில காட்சிகளில் தோன்றினார் அன்றைய ராமசாமி கணேசன், பின்னர் ஜெமினியிலிருந்து வெளியே வந்து நடித்த ‘தாயுள்ளம்’ படத்தில் வில்லன் வேடம் ஏற்றபிறகு எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

அந்தப் படத்தில் ஜெமினியின் நடிப்புக்கும் ஈர்க்கும் தோற்றத்துக்கும் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து, தாய் நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோவே ராமசாமி கணேசனை அழைத்து வரிசையாக வாய்ப்புகளை வழங்கியது வரலாறு ஆனது. ராமசாமி கணேசன் வளரும் நடிகராக உருவாகிவந்த காலகட்டத்தில், பெரும்பாலான நடிகர்கள் ஊர்ப் பெயரின் முதல் எழுத்தை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டார்கள். ஆனால், தன்னை வளர்த்தெடுத்த நிறுவனத்தின் மீதான நன்றியைக் காட்ட தன் பெயருக்கு முன்னாள் ‘ஜெமினி’ என்ற பெயரைச் சேர்த்துக்கொண்டு ஜெமினி கணேசன் ஆனார். ராமசாமி கணேசன், ஜெமினி கணேசனாக ஆனது மட்டுமல்ல; ஜெமினி நிறுவனம் வளர்த்தெடுத்த மற்றொரு வசீகரத் திறமையாளரான புஷ்பவல்லியின் காதலுக்குப் பாத்திரமாகி அவரையும் இல்வாழ்க்கையில் கரம் பற்றினார் ஜெமினி கணேசன்.

இந்தக் காலத்தில்தான் ‘‘கதாநாயகனாக நடிக்க வேண்டிய அழகனை; இப்படி வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்களே?” என்று ரசிகர்கள் பேசிக்கொண்டதைப் பற்றி பத்திரிகைகள் எழுத, ஏவி. மெய்யப்பச் செட்டியார் ஜெமினியை அழைத்து ‘பெண்’ என்கிற படத்தில் முதன்முதலாக கதாநாயகன் ஆக்கினார். அடுத்து, ‘மனம்போல் மாங்கல்யம்’ ஜெமினிக்கு கிடைத்த இரட்டை வேடம். 100 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம், ஜெமினியின் வாழ்க்கையில் இன்னொரு திருப்புமுனை நிகழ்த்திவிட்டுப்போனது. ஆம்! இந்தக் படத்தின் கதாநாயகி சாவித்திரி. அதன் பின்னர், ஜெமினி - சாவித்திரி இணையை மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். திரையில் வளர்ந்த காதலை பரஸ்பரம் நிஜ வாழ்விலும் அங்கீகரித்துக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தது ஜெமினி - சாவித்திரி இணை. திரை வாழ்க்கையை மட்டுமல்ல; தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் திறந்த புத்தகமாக வைத்துக்கொண்ட கலைஞன் ஜெமினி கணேசன். அதனால்தான் ஜெமினி கணேசனின் வாரிசுகள் அவரது நூற்றாண்டை அர்த்தபூர்வமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆவணப் படமும் புத்தகமும்

ஜெமினி - பாப்ஜி தம்பதிக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி என நான்கு பெண் பிள்ளைகள். இவர்களில் தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவர்களில் ஒருவராகச் சாதனைத் தடம்பதித்தவர் டாக்டர் கமலா செல்வரஜ். ஜெயலட்சுமி, ‘நினைவெல்லாம் நித்யா’ திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்தபின் முழுவதும் மருத்துவத்துறையில் கவனம் செலுத்திவருகிறார். ஜெமினி - புஷ்பவல்லி தம்பதிக்கு ரேகா, ராதா என்று இரண்டு பெண் பிள்ளைகள். இவர்களில் ரேகா, தனது தந்தை - தாயின் வழியில் திரை நடிப்புத் துறையைத் தேர்ந்துகொண்டு,

இந்திப் படவுலகில் கனவுக்கன்னியாக கீரிடம் சூட்டப்பட்டவர். இன்றைக்கும் பாலிவுட்டின் ‘ஃபேஷன் கடவுள்’ எனக் கொண்டாடப்படுபவர்.
ஜெமினி - சாவித்திரி தம்பதிக்கு விஜயசாமுண்டீஸ்வரி என்ற மகளும் சதீஷ்குமார் என்ற மகனும் பிறந்தனர். தனது தந்தையின் வசீகர வாரிசாக, விஜயசாமுண்டீஸ்வரி ‘ஹெல்த் & ஃபிட்னெஸ்’ துறையில் புகழ்பெற்றவர். மகன் சதீஷ் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இந்த வாரிசுகள் அனைவரும், பால்யம் தொடங்கி ஒரே குடும்பமாக வளர்ந்தது மட்டுமல்ல; இன்றைக்கும் ஊரார் வியக்கும் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

தனது தந்தையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தனது சகோதரிகள், தம்பியுடன் இணைந்து, டாக்டர் கமலா செல்வராஜ் ‘காதல் மன்னன்’ என்ற பெயரில் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை ஒன்றரை மணிநேர ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அதே வழியில், 70 முதல் 80 வயதைக் கடந்த தனது தந்தையின் நீண்டகால ரசிகர்களை கௌரவப்படுத்தும்விதமாக, ‘ஜெமினி - மந்திரச் சொல்’ என்ற தலைப்பில் விஜயசாமுண்டீஸ்வரி தயாரித்துள்ள புத்தகம், வரும் நவம்பர் 17-ம் தேதியன்று ஜெமினி கணேசனின் 100-வது பிறந்த நாளில் வெளியிடுகிறார். இது ஜெமினி கணேசன் எனும் உயரிய கலைஞனைக் கொண்டாடுவதற்கான தருணம்.

தொடர்புக்கு: jesudoss.c@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

கல்யாணப் பரிசுபாசமலர்பார்த்திபன் கனவுஉன்னால் முடியும் தம்பிகமலாவும் விஜயாவும்ரேகாஜெமினி - சாவித்திரி தம்பதிபாப்ஜி - ஜெமினி தம்பதி‘மிஸ் மாலினி’ படத்தில் ஜெமினி, கொத்தமங்கலம் சுப்பு, புஷ்பவள்ளி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்