இணையத் திரை: கொட்டிக் கிடக்கும் குழந்தைப் படங்கள்!

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

ஊரடங்கு இல்லாமல் போயிருந்தாலும் கோடை விடுமுறையால், குழந்தைகள் வழக்கமாய் வீடடங்கும் காலம் இது. அவர்களை வீட்டினுள் கட்டிப்போட இந்திய ஸ்ட்ரீமிங் தளங்கள் ஏராளமான படைப்புகளைக் களமிறக்கிவருகின்றன. ரசனை சார்ந்த தனிப்பட்ட விருப்பம், வளரும் வயதுக்கு ஏற்ப படைப்புகள் எனத் தேர்வுசெய்துகொள்ளும் சுதந்திரம், விளம்பரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளைவிட ஸ்ட்ரீமிங் தளங்களே அவர்களை அதிகமும் ஈர்த்துவருகின்றன.

புதுமைகளும் சலுகைகளும்

ஸ்ட்ரீமிங் வலைத்தளங்களில் பெரும்பாலானவை முதல் மாத உபயோகத்தை இலவசமாகவே வழங்குகின்றன. மேலும், தற்போதைய ஊரடங்கை முன்னிட்டுக் குழந்தைகளுக்கான படைப்புகளில் சிலவற்றை இலவசமாகவும், இன்னும் சில தளங்கள் விளம்பரங்களுடனும் வழங்க முன்வந்துள்ளன. ஏப்ரல் மத்தியில் சிறுவர்களுக்கான சிறப்புத் தளங்களைத் தொடங்கிய ‘வூட் கிட்ஸ்’ கட்டணச் சலுகையையும், ’ஜீ5 கிட்ஸ்’ விளம்பரங்களுடனான இலவசப் படைப்புகளையும் தருகின்றன. அமேசான் பிரைம் தளமானது Mystery City, The Stinky Dirty Show, If You Give A Mouse A Cookie, Peppa Pig, The Adventures of Tenali Rama உள்ளிட்ட குழந்தைகளுக்கான படைப்புகளை இலவசமாக வழங்குகிறது.

அண்மையில் அறிமுகமான ‘வூட் கிட்ஸ்’ (Voot Kids), குழந்தைகளுக்கான வீடியோ தொகுப்புகள் மட்டுமன்றி முன்னணி சிறுவர் இதழ்களை ஆன்லைனில் வாசிக்கவும் குரல் பதிவுக் கதைகளைக் கேட்டு இன்புறவும், கல்வித்திறன் சார்ந்த விநாடி வினா போட்டிகளுடனும் புதுமை சேர்த்திருக்கிறது. வீட்டின் உறுப்பினர்கள் ஆளாளுக்கு ஸ்ட்ரீமிங் தளங்களை ஆக்கிரமிப்பதால், ஊரடங்கு சிறப்பு நடவடிக்கையாக மொபைல் போனில் தரவிறக்கும் படைப்புகளின் டேட்டா உபயோகத்தைப் பாதியாகக் குறைக்கவும் சில செயலிகள் உத்தரவாதம் அளிக்கின்றன.

நெட்பிளிக்ஸின் பிரத்யேகப் படைப்புகள்

‘ட்ரோல்ஸ்’, ‘பாஸ் பேபி’, ‘டாகிங் டாம் அண்ட் பிரண்ட்ஸ்’, ‘மை லிட்டில் போனி’, ‘லாஸ்ட் கிட்ஸ் ஆன் எர்த்’ உட்பட நெட்பிளிக்ஸின் குழந்தைகளுக்கான பிரிவில் ஏராளமான படைப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வலைத்தொடர்களின் வரிசையில் நெட்பிளிக்ஸின் பிரத்யேகத் திரைப்படங்களும் குழந்தைகளுக்காக வெளியாகின்றன. ‘ஸ்பிரிட் ரைடிங் ஃபிரீ' வரிசையிலான வலைத்தொடர்களும் திரைப்படங்களும் ஓர் உதாரணம். குழந்தைகளுக்குப் பரிச்சயமான போகேமான், ஸ்கூபி டூ, பார்பி ஆகிய கதாபாத்திரங்களை மையப்படுத்திய பிரத்யேக ஆக்கங்களும் இவற்றில் அடங்கும்.

90-களின் சிறுவர் உலகத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்தமர்ந்து தங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுக்க உதவுகிறது, நெட்ஃபிளிக்ஸின் ‘யே மேரி ஃபேமிலி’ (Yeh Meri Family) தொடர். (இத்தொடரை அதன் தயாரிப்பு நிறுவனத்தின் TVF Play தளத்திலும் இலவசமாகப் பார்க்கலாம்) குழந்தைகளைக் கவரும் மற்றொரு தொடர், மாயாஜாலம் நிரம்பிய ‘எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்சுனேட் ஈவென்ட்ஸ்’. அவெஞ்சர்ஸ் வரிசையின் ஸ்பின் ஆஃப் தொடரான ‘மார்வெல்ஸ் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்’ (Marvel’s Agents of S.H.I.E.L.D), பதின்மத்தில் கால்வைக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கானது.

அமேசானின் அனிமேஷன் அசத்தல்

அமேசானில் அதிக வரவேற்பைப் பெற்ற சிறுவர் தொடரான ‘யங் ஷெல்டன்’, தற்போது மூன்றாம் சீசனில் அடிவைத்துள்ளது. வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த இந்தத் தொடரைக் குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்ந்து ரசிக்கலாம். ஹாரிட் ஹென்றி, மிஸ்டர் பீன், டின்டின் போன்ற பிரசித்தியான கதைகளின் அனிமேஷன் தொடர்கள் அமேசானில் குவிந்திருக்கின்றன. பி.பி.சி. தயாரித்த அறிவியல் புதினத் தொடரான ‘டாக்டர் ஹூ’ (Doctor who), ‘லாஸ்ட் இன் ஸ்பேஸ்’, ‘ஜஸ்ட் ஆட் மேஜிக்’ (Just Add Magic) போன்றவை சுவாரசியமானவை. இத்துடன் குழந்தைகளுக்கான அமேசான் ஒரிஜினல் வரிசைத் தொடர்களும் குழந்தைகளைக் குறிவைத்துக் காத்திருக்கின்றன. குழந்தைகளுக்குச் சலிப்பு ஏற்படாத வண்ணம், மீண்டும் பார்க்கத் தூண்டும் ஹாரி பாட்டர் திரைப்படங்களின் முழு வரிசை, சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்கள் இங்கே காணக் கிடைக்கின்றன.

டிஸ்னியின் இந்தியப் பாய்ச்சல்

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளமாக உருவான ‘டிஸ்னி பிளஸ்’, இந்தியாவில் ஹாட்ஸ்டார் வாயிலாகத் தரிசனம் தருகிறது. குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும் ஏராளமான படைப்புகளைத் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ தளத்தில் இப்போது கண்டு ரசிக்கலாம். பிக்ஸர், மார்வெல், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படைப்புகளுடன் நேஷனல் ஜியாகிரபிக் ஆக்கங்களையும் டிஸ்னி ப்ளஸ் உள்ளடக்கி உள்ளது. இதில் ‘தி லயன் கிங்’, ‘ஃப்ரோஸன்’, ‘அலாதீன்’, ‘டாய் ஸ்டோரி’ போன்ற பட வரிசைகள் பிரபலமானவை. இவற்றுடன் ஸ்டார் வார்ஸின் ஸ்பின் ஆஃப் தொடரான ‘தி மண்டலோரியன்’, குழந்தைகளை இணைந்து பாடச் செய்யும் ‘ஹை ஸ்கூல் மியூசிகல்: தி மியூசிகல்’, லைவ் ஆக்‌ஷனில் வெளியான ‘லேடி அண்ட் தி டிராம்ப்’, ‘தி வேர்ல்ட் அகார்டிங் டு ஜெஃப் கோல்ட்ப்ளம்’, ‘டோகோ’ உள்ளிட்ட வலைத்தொடர்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்