சினிமா ரசனை 13: வில்லனாக மாறத் துடித்த அமிதாப்!

By கருந்தேள் ராஜேஷ்

சலீம் - ஜாவேத் ஜோடி (சலீம் கான் - சல்மான் கானின் தந்தை; ஜாவேத் அக்தர், பிரபல கவிஞர்) ஷோலே என்ற படத்துக்கான சுருக்கமான நான்கு வரிக் கதையை ரமேஷ் சிப்பியிடமும் அவரது தந்தை ஜி.பி. சிப்பியிடமும் விவரித்தபோது இந்தப் படம் இத்தனை பெரிய ஹிட் ஆகும் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அப்போதுதான் அமிதாப் பச்சன் என்ற இளைஞர் பிரபலமாகிக்கொண்டிருந்தார். அவருக்காக இதற்கு முன்னரே ‘ஸஞ்சீர்' (தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்') என்ற படத்தை எழுதியிருந்தனர். வரிசையான தோல்விகளைக் கொடுத்துக்கொண்டிருந்த பச்சனுக்கு அவரது வாழ்வின் முதல் சூப்பர் ஹிட் அதுதான். இதன் பின்னர் வெளியான ‘மஜ்பூர்' (தமிழில் சிவாஜியின் ‘நான் வாழவைப்பேன்'), மற்றும் ‘தீவார்' (தமிழில் ரஜினியின் 'தீ') படங்களின் திரைக்கதையும் சலீம் - ஜாவேதினுடையதே. அவையும் மெகா ஹிட்கள்.

இவற்றைத் தவிர, ‘ஹாத்தி மேரா சாத்தி' (எம்.ஜி.ஆரின் நல்ல நேரம்; ‘தெய்வச் செயல்' என்று தமிழில் வெளியான படம், பின்னர் இந்தியில் எடுக்கப்பட்டு மறுபடியும் தமிழில் ‘நல்ல நேரம்' ஆக வெளியாகி ஹிட்டான படம்), ‘சீதா ஔர் கீதா' (வாணி ராணி), ‘யாதோங்க்கி பாராத்' (நாளை நமதே) என்ற சூப்பர் ஹிட் படங்களின் கதைகளை எழுதியிருந்த ஜோடி இது என்பதால் சலீம் - ஜாவேதின் திரைக்கதைகளுக்குப் பெரிய வரவேற்பு இருந்த காலகட்டம் அது.

எனவே சலீம் - ஜாவேத் ஜோடியின் ‘ஷோலே' கதை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒன்றரை லட்சம் சன்மானம். ஒரே மாதத்தில் இருவரும் திரைக்கதையை எழுதி முடித்தனர் (1975ல் ஒரு திரைக்கதைக்கு ஒன்றரை லட்சம் என்பது மிக மிக அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). சலீம் - ஜாவேத் ஜோடி, பல வெஸ்டர்ன் படங்களின் பாதிப்பில்தான் இத்திரைக்கதையை எழுதினர்.

குறிப்பாக செர்ஜியோ லியோனியின் படங்கள் மற்றும் அகிரா குரோசவாவின் ‘செவன் சாமுராய்'. படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்கு இப்படங்களே காரணம். படத்தில் அமிதாப்பின் ஜெய் கதாபாத்திரம், முக்கியமான முடிவுகளை நாணயம் ஒன்றைச் சுண்டிப்பார்த்தே எடுக்கும். இது, ‘கார்டன் ஆஃப் ஈவில்’ (Garden of Evil) என்ற கேரி கூப்பரின் படத்தில் இருந்து சுடப்பட்டது.

படத்தின் நடிகர்கள் தேர்வில், அமிதாப் பச்சனின் பெயரை இவர்கள் பரிந்துரைக்க, அதற்குப் பெரிய எதிர்ப்பு எழுந்தது. அமிதாபுக்குப் பெரிய ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்று தயாரிப்புத் தரப்பு நினைத்ததே காரணம். ஆனாலும் சலீம் - ஜாவேதின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமிதாப் ‘ஜெய்' கதாபாத்திரத்துக்குத் தேர்வானார். படத்தின் கதாபாத்திரங் களின் பெயர்கள், சலீம் - ஜாவேத் இணையினரின் நண்பர்களின் பெயர்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.

வில்லன் கப்பர் சிங்காக நடிக்க இருந்தவர் டேன்னி டென்ஸோங்பா (‘எந்திரன்' வில்லன் என்றால் புரியும்). இப்போதும் ஜாவேத் அக்தரின் பரிந்துரையின் பேரிலேயே அம்ஜத் கான் என்ற, அவ்வளவாகப் பிரபலமாகாத நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தக் கதாபாத்திரத்தில் ஏற்கெனவே நடிக்க விருப்பப்பட்டவர் அமிதாப் பச்சன். ஆனாலும் அம்ஜத் கானே பொருத்தமாக இருப்பார் என்று ஜாவேத் அக்தர் நினைத்ததால், ‘ஜெய்' கதாபாத்திரத்துக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டார்.

படப்பிடிப்பு கர்நாடகாவின் ‘ராமநகரா' என்ற இடத்தில் இரண்டு வருடங்களில் நடந்து முடிந்தது. படம் வெளியான 1975 ஆகஸ்ட் 15 முதல் நாளில் படத்துக்குக் கூட்டமே இல்லை. மறுநாளும் இதுவே தொடர, தயாரிப்பாளரான கி.பி. சிப்பியும் இயக்குநர் ரமேஷ் சிப்பியும் தோல்வியை ஆராய அமர்ந்தனர். அமிதாப்பின் கதாபாத்திரம் ‘ஜெய்', படத்தின் இறுதியில் இறந்துவிடுவார். இதற்கு முன்னர் வெளியாகியிருந்த ‘தீவார்' படத்திலும் அமிதாப்பின் கதாபாத்திரம் இறுதியில் இறந்துவிடும் (எழுதியவர்கள் இதே சலீம் - ஜாவேத் ஜோடியினர் என்பதை முன்னரே பார்த்தோம்).

எனவே, ஆடியன்ஸுக்கு அமிதாப் இறந்துகொண்டே இருப்பது பிடிக்காமல் இருக்கலாம் என்று எண்ணி, க்ளைமாக்ஸில் அமிதாப் உயிர் பிழைப்பதுபோல ஒரு காட்சியை எடுக்க எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டன. ‘இன்னும் ஒரே ஒரு நாள் பொறுப்போம். திங்கள் படத்தின் முடிவைத் தெரிந்துகொண்டு இந்தக் காட்சியை எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவுசெய்வோம்' என்று இயக்குநர் ரமேஷ் சிப்பி, ஒரே ஒரு நாள் தனது முடிவைத் தள்ளிப்போட்டார். அதுதான் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கும் காரணமாக இருந்தது. மறுநாள் திங்களில் இருந்து, ஏதோ மாயாஜாலம் நடந்ததைப் போல படம் பிய்த்துக்கொண்டு ஓடத் தொடங்கியது.

இதற்கிடையிலேயே, முதல் நாள் படம் பார்த்துவிட்டுப் பத்திரிகைகளில் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்க, ரோஷமடைந்த சலீம்-ஜாவேத் ஜோடியினர், தாங்களாகவே முன்வந்து, ‘இப்படம் ஒரு கோடி ரூபாய் வசூலிக்கும்' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இறுதியில் படம் சம்பாதித்ததோ அதற்கும் பல மடங்குகள் மேல்.

படம் பிரம்மாண்டமான வெற்றியடைந்ததற்கு என்னென்ன காரணங்கள்? யோசித்துப் பார்த்தால், சலீம் - ஜாவேதின் திரைக்கதைதான் முதல் காரணம் என்பது புரியும். படத்தில் வரும் ஜெய் - வீரு நட்பு, வில்லன் கப்பர் சிங் கொடூரமாகக் கொன்ற டாக்குரின் குடும்பம், டாக்குரின் பழிவெறி, ஜெய்க்கு டாக்குரின் மருமகள் இளம் விதவை ராதாவின் மீது எழும் அழகான காதல் ஆகியவற்றுடன், திரைக்கதையில் ஆங்காங்கே வரும் திருப்பங்கள் படத்தின் ஓட்டத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தன.

ஒரு முக்கியமான காட்சியில், டாக்குரின் காலருகே இருக்கும் துப்பாக்கியை எடுத்து வீசுமாறு வீரு கேட்பான். அவர் மட்டும் வீசியிருந்தால் அப்போதே வில்லன் கப்பர் சிங்கைக் கொன்றிருக்கலாம். ஆனால் டாக்குர் முகத்தைத் திருப்பிக்கொண்டுவிடுவார். அது ஏன் என்று அடுத்த காட்சியில் தெரியும். இதுதான் படத்தின் மிகப் பெரிய ட்விஸ்ட். இதோடு, ஆர்.டி. பர்மனின் இசை, படத்தை இன்னும் ஜனரஞ்சகப்படுத்தியது.

ஒரு வெற்றிப் படத்துக்குத் தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் ஒருங்கே கொண்டிருந்த ஷோலே படம் இன்று பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது என்பதே அதன் திரைக்கதையாசிரியர்கள் சலீம் - ஜாவேத் இணையினருக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். இப்படம் மட்டுமல்லாது இந்தியின் பல சூப்பர் ஹிட் படங்களின் திரைக்கதைகளைச் சேர்ந்து எழுதிய ஜோடி இது. இன்றுவரை இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியாகவும் திகழ்கிறது. திரைக்கதையில் இவர்களுக்குக் கிடைத்த புகழ்போல இதுவரை இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. போஸ்டர் களில் இவர்கள் பெயர்கள் இருந்தாலே படம் சூப்பர் ஹிட் என்ற காலம் அது.

திரைக்கதையாசிரியர்கள், இயக்குநர், நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை போன்ற எல்லா அம்சங்களிலும் உச்சமாக அமைந்த இப்படிப்பட்ட படங்கள் மிக மிக அரிதாகவே வெளியாகும். அப்படி வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஆகிய ‘ஷோலே' இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பது உறுதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்