விடைபெறும் 2019: கதாநாயகிகளுக்கு என்ன வேலை?

By செய்திப்பிரிவு

பிருந்தா சீனிவாசன்

தமிழ்த் திரைப்படங்களில் பெண்களின் இருப்பு என்பது சுவரில் மாட்டப்படும் படங்களைப் போலவே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. திரைமொழியிலேயே சொல்வதென்றால் ‘செட் பிராப்பர்டி’. சுவருக்கு ஏற்ற வகையில் படங்கள் மாறுமே தவிர, அவற்றின் நோக்கத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இருப்பதில்லை.

படத்தின் டைட்டில் கார்டில் அவர்கள் கதாநாயகி எனச் சொல்லப்பட்டாலும் கதாநாயகனுக்கு இணையாக அவர்களுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்காது. இல்லத்தரசிகள், வீட்டில் சோறாக்கிவைத்துக் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டால் போதும் என நினைக்கிற நாமும் திரைப்படங்களில் பெண்கள், கதாநாயகனுடன் ஆடிப்பாடி, அவனது வெற்றியில் அகமகிழ்ந்து அடங்கிக் கிடந்தால் போதும் என நிறைவடைந்துவிடுகிறோம். முன்பெல்லாம் கவர்ச்சி என்னும் அம்சத்துக்காகத் தனியாக நடிகைகள் இருந்தனர். இப்போது நாயகிகளே அந்த சேவையையும் செய்துவிடுகின்றனர்.

பேய்ப் படங்களில் முன்னுரிமை

தொடக்க காலப் புராணப் படங்களில் தொடங்கி, இடைக்காலக் குடும்பச் சித்திரங்கள்வரை, பெண்களை எப்படிக் காட்சிப்படுத்தினார்களோ அந்த முறையைத் தொழில்நுட்ப உதவியோடு இப்போது மேம்படுத்தியிருக்கிறார்கள் என்பதைத்தான் 2019-ல் வெளியான படங்களும் உணர்த்துகின்றன. இருநூற்றைத் தொட்டுவிடும் எண்ணிக்கையில் வெளியான படங்களில் பெண்களின் பங்களிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அந்தக் காலப் படங்களில் நடிப்பதற்காவது நாயகிகளுக்கு வாய்ப்பு இருந்தது. இப்போது பளீரிடும் நிறமும் கவர்ந்திழுக்கும் உடலமைப்பும் மட்டும் போதும் என்றாகிவிட்டது.

பெண்களைக் கொண்டாடும் படம், முற்போக்குக் கருத்துகளின் கூடாரம் என்ற அறிவிப்புடன் சில படங்கள் வெளிவரத்தான் செய்தன. ஆனால், அவற்றில் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நேர்செய்யும் வகை தெரியாமல், நட்டாற்றில் தத்தளித்துப் பார்வை யாளர்களைக் குழப்பிய படங்களே அதிகம். பெண் மையப் படங்களும் கருத்துச் சொல்லும் படங்களும் ஓடாது என்று நினைக்கிறவர்கள் ஆண் மையப் படங்களை எடுக்கிறார்கள். அவற்றில் பெண்களுக்கு எதிரான கருத்தைச் சொல்லி, அதை ‘ஹீரோயிஸம்’ என நம்பவைக்க முயல்கிறார்கள். இல்லையெனில் பேய்ப்படங்களிலும் திகில் படங்களிலும் மட்டுமே பெண்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.

பயன்படுத்தப்படாத சுதந்திரம்

குடும்ப அமைப்பைப் போலத்தான் பெரும்பாலான இயக்குநர்கள் திரைப்படங்களைக் கையாள்கிறார்கள். படத்தின் நாயகன் ஆணாக இருக்க வேண்டும், அவனுக்கு அடங்கி நடக்க ஒரு பெண் வேண்டும், அவள் அப்படி அடங்கி நடக்கவில்லையென்றால், ‘ஆம்பளைன்னா எப்படி வேணும்னாலும் இருக்கலாம். பொம்பளைன்னா பொறுமை வேணும்’ என்று கருத்துச் சொல்லியே அவளைக் கொன்றுவிட வேண்டும், சிலநேரம் பெண்கள் இருந்தும் இல்லாமல் இருக்க வேண்டும். இதுதான் 2019-ல் வெளிவந்த படங்களின் பொதுவான சித்திரம். கதை வெவ்வேறாக இருந்தாலும் அவை பயணிக்கும் பாதை இதுதான்.

தலைப்புக்காகவே பலரையும் திரையரங்குக்கு வரச்செய்தது ‘ஆடை’. நாகரிக ஆடையாகவும் இல்லாமல் பாரம்பரிய ஆடையாகவும் இல்லாமல் பழந்துணியாக நைந்துகிடந்தது. ஆண்கள் செய்கிற அனைத்தையும் பெண்கள் செய்வதல்ல பெண்கள் அடைய வேண்டிய உயரம். தற்சார்பும் சுயமரியாதையும் பெண்ணியத்தின் அங்கங்கள் என்பதைப் புரிந்துகொள்ளாததால்தான் ‘காமினி’ போன்ற கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.

சுதந்திரத்தைப் பெண்கள் பயன்படுத்த வேண்டுமே தவிர, தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை காமினியின் மூலமாக இந்தச் சமூகத்துக்குச் சொல்கிறாராம். ஆண்கள் பேசும் பெண்ணியம் அப்படித்தானே இருக்கும். ‘ஆடை’ அணிவதில் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லி ‘முள் மேல் சேலை’ என்கிற பிற்போக்குக் கருத்துக்குப் புது வடிவம் கொடுத்ததைத் தவிர ‘ஆடை’யால் எந்தப் பயனுமில்லை. ஆனால், இதுபோன்ற கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்காக அமலா பாலைப் பாராட்டலாம்.

பின்தொடர்தல் காதல் அல்ல

அதேநேரம் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்ததன்மூலம் நயன்தாரா, அதுவரை தான் உருவாக்கி வைத்திருந்த சித்திரத்தைத் தானே அழித்துக்கொண்டார். ‘விஸ்வாசம்’ படத்தில் கணவனின் அடாவடித்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பெண் குழந்தையை வளர்க்கும் பொறுப்புடன் கணவனைப் பிரிந்து வாழும் ‘நிரஞ்சனா’ கதாபாத்திரத்தின்மூலம் நம்பிக்கை தந்தவர், ‘கீர்த்தனா’வாக ஏமாற்றத்தையே அளித்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனுக்கென்று எந்தச் சிறப்பம்சமும் தேவைப்படுவதில்லை, ஆண் என்பதைத் தவிர. அந்த ஒரு ‘தகுதி’யை மட்டுமே வைத்துக்கொண்டு தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் பெண்ணைக்கூடக் காலில் விழச்செய்துவிடும் அசுர பலம் படைத்தவர்கள் நம் கதாநாயகர்கள்.

அறிவாலும் திறமையாலும் எவ்வளவுதான் முன்னேறினாலும், பெண்கள், ஆணுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற பிற்போக்குக் கருத்தை ஏராளமான படங்கள் சொன்னாலும் சிவகார்த்திகேயன் - நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் சொல்லும்போது அது மக்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் அபாயகரமானது. ‘ஆதித்ய வர்மா’வும் இப்படியான வன்முறையை நியாயப்படுத்திய படம்தான்.

தன்னைப் பிடித்திருக்கிறதா என்று ஒரு பெண்ணிடம் கேட்காமலேயே அவள் மீது ஒருவன் வெளிப்படுத்தும் காதல், மோசமான வன்முறை. தொட்டதுமே காதல், பார்க்கப் பார்க்கக் காதல் என்கிற வரிசையில் கதாநாயகர்கள் செய்கிற வன்முறையை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் ‘காதல்’ என்று நியாயப்படுத்தப் போகிறோம்?

ஆண்களுக்கான கேள்வி

‘சூப்பர் ஹீரோ’ கதையில் ஆணுக்குப் பதில் பெண்ணை நடிக்கவைப்பதுதான் பெண் மையப் படங்கள் என்று நம்பவைக்கும் முயற்சியும் 2019-ல் நடந்தது. வானத்தை வில்லாக வளைக்கும், ஒரே நாளில் மாற்றங்களை ஏற்படுத்திவிடும் அதுபோன்ற கற்பனைக் கதாபாத்திரங்களை வியக்க முடியுமே தவிர, நடைமுறை வாழ்வில் அவர்களால் எந்தப் பலனும் இல்லை. கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைப் பெண்ணியத்தோடு முடிச்சு போடும் வேலைகள் சில படங்களில் நடந்தபோதும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ‘வேம்பு’ (சமந்தா) ஓரளவு வேறுபட்டிருக்கிறார்.

கல்லூரி நாட்களின் காதலன் மனச்சோர்வுக்கு ஆளாகியிருப்பதற்காகக் குற்றவுணர்வு ஏற்பட்டதாகத் தன் கணவனிடம் சொல்லும் அவள், காதலனுடன் தனித்திருந்ததற்காகக் கடைசிவரை குற்றவுணர்வுக்கு ஆளாகவில்லை. மாறாகத் தன் செயலுக்காக விவாகரத்து கேட்கும் கணவனிடம், அவன் செய்யச் சொல்லும் செயல் நியாயமா எனக் கேட்கிறாள். அது அவளுடைய கணவனைப் பார்த்து மட்டும் கேட்கப்பட்ட கேள்வியல்ல.

உலக சினிமா வேறொரு தளத்துக்குப் போய்க்கொண்டிருக்கையில் ‘பெண்கள் வேண்டாம் என்றால் வேண்டாம் என்றுதான் பொருள்’ என்பதையே மிகுந்த அசௌகரியத்துடன்தான் எதிர்கொள்கிறோம். காரணம், ‘பொண்ணுங்க வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம்’ என்ற கருத்துப் புகட்டப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள்தானே நாம். மறு ஆக்கப் படமாக இருந்தாலும் பெண்களின் தரப்பை எடுத்துச் சொல்லி விவாதத்தை ஏற்படுத்தியது ‘நேர்கொண்ட பார்வை’. ஆனால், பெண்களுக்கு எதிரான வசனங்களுக்குத்தான் திரையரங்கில் கைதட்டல் அதிகமாக எழுந்தது என்பது நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

இனிக்கும் ‘கருப்பட்டி’

மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் தரப்பைப் பேசிய வகையில் ‘பேரன்பு’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் பாராட்டுக்குரியவை. ‘பேரன்பு’ படத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சாதனா. ‘தொரட்டி’ படத்தில் செம்பொண்ணுவாக நடித்த சத்யகலாவின் கதாபாத்திரமும் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றைத் தாண்டி, இந்த ஆண்டின் இறுதியில் வெளியான தொகுப்புத் திரைப்படமான ‘சில்லுக் கருப்பட்டி’, பெண் இயக்குநர் ஹலிதா ஷமீமின் அசலான பெண்ணியப் பார்வையுடன் இருக்கிறது.

முகமறியா பேரன்புக்கு நன்றிசொல்லும் பதின்ம வயதுச் சிறுமி, சுயதொழில் முனைவில் வெற்றிபெற்ற ரசனையும் துணிவும் கொண்ட தற்சார்பு யுவதி, வீட்டுக்குள் செயற்கை நுண்ணுணர்வுக் கருவியுடன் உரையாடி, தன் இருப்பைக் கணவனுக்கு உணர்த்தும் சுயம் பேணும் இல்லத்தரசி, திருமணம் மறுத்த வாழ்வின் அந்திமத்தில் தூய்மையான அன்பை அனுமதிக்கும் முதிய பெண்மணி என ஹலிதா முன்வைத்த சமகாலப் பெண்களின் கதாபாத்திரங்கள் நமக்கு மத்தியில் நடமாடும் பெண்கள் என்பதுடன் ஆண்களின் உலகில் மனமாற்றத்தை விதைப்பவர்களாகவும் படைக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டின் அபூர்வத் திரைப்பட நிகழ்வு.

இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும். ஹலிதாக்கள் அரிதாகவே தோன்றும், ஆண்களால் இயங்கும் தமிழ் சினிமாவில் பெண்களுக்கெனத் தனியாகப் படங்களை எடுக்காமல், எடுக்கப்படுகிற படங்கள் அனைத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற வகையில் கதாபாத்திர அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போது, அது சமூகத்திலும் நல்லவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்குப் பட விவாதத்தில் தொடங்கி, திரைக்குப் பின்னால் இருக்கும் பிரிவுகள்வரை பெண்களின் பங்களிப்பும் அதிகரிக்க வேண்டும்.

தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்