திரை வெளிச்சம்: வியக்கவைக்கும் கூட்டணி

By செய்திப்பிரிவு

க.நாகப்பன்

விருதுகளே விரும்பும் கூட்டணி என்று வெற்றிமாறன் - தனுஷ் கலைத் தோழமையைச் சொல்லலாம். ‘ஆடுகளம்' படத்துக்கு ஆறு தேசிய விருதுகள், ‘விசாரணை' படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் (தனுஷ் தயாரிப்பு), ‘காக்காமுட்டை' (தனுஷ்- வெற்றிமாறன் தயாரிப்பு) படத்துக்கு இரு தேசிய விருதுகள் என இந்தக் கூட்டணி இணையும் போதெல்லாம் வெற்றி வாகை சூடியுள்ளது. வெனீஸ் திரைப்பட விழாவின் 72 ஆண்டுகள் வரலாற்றில், போட்டிப் பிரிவில் தேர்வான ஒரே தமிழ்ப் படம் ‘விசாரணை' என்பது பெருமைக்குரியது. அந்தவகையில் தரமான கூட்டணியாக, நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்களாக வெற்றிமாறனும் தனுஷும் ஒத்திசைவுடன் பயணிக்கிறார்கள்.

ஒரு சண்டைச் சேவலின் கூர்மை

தனுஷ் தன் வாழ்நாள் முழுக்க செல்வராகவனுக்கும் வெற்றி மாறனுக்கும் கடமைப்பட்டிருக்கிறார் இல்லையில்லை கடன்பட்டிருக்கிறார். தனுஷுக்குள் இருக்கும் உன்னதக் கலைஞனைப் பரிபூரணமாக வெளிக் கொணர்ந்தவர்கள் இவர்கள்தாம். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குமார், கொக்கி குமாராக தாதா ஆன கதையை செல்வராகவன் ‘புதுப்பேட்டை'யில் பதிவு செய்தார்.

ஆனால், வெற்றிமாறன், தாதாவின் தம்பியின் வாழ்க்கையில் மோதும் சாதாரண நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் கதையை ‘பொல்லாதவ’னில் கூறி பிரமிக்க வைத்தார். அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்த வேளையில், அங்கு வரும் ரவுடிகளிடம் பேசும்போது கண்ணில் கோபம் தெறிக்க, ‘போட்றா பார்க்கலாம்' என்று டேனியல் பாலாஜியிடம் நடிப்பால் மிரட்டிய தனுஷை அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்ல முடியாது.

பேட்டக்காரனின் சுயரூபம் தெரிந்த பிறகும் விஸ்வாசம் மாறாத கருப்பு என்ற இளைஞனாக, ஒரு சண்டைச் சேவலின் அத்தனை கூர்மையையும் நடிப்பில் கொண்டுவந்த ‘ஆடுகளம்' தனுஷை நிமிர்ந்து நோக்க வைத்தது. அதன்பின்னர் தனுஷ் எனும் நட்சத்திரத்தை அல்லாமல் நடிகனைத் தேடத் தொடங்கினான் தமிழ் ரசிகன்.

‘வடசென்னை'யில் ராஜனின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் அன்பு, ‘அசுர’னில் மூத்த மகனைப் பறிகொடுத்த தவிப்பிலும் இளைய மகனைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியிலும் பொறுப்பான தகப்பனைக் கண்முன் நிறுத்தும் சிவசாமி என்று தனுஷ் கண்முன் நிகழ்த்திய பரிமாணங்கள் பல.

கதாபாத்திரத்தின் தன்மையை உணர்தல், கதாபாத்திர மனநிலையைப் பிரதிபலித்தல், பாத்திரத்துக்கு ஏற்ப உருமாறுதல், தோற்ற வெளிப்பாடு, உடல்மொழி வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் வெற்றிமாறனின் நான்கு படங்களிலும் கதாபாத்திரத் துக்கான நடிப்பின் எல்லை களைத் தொட்டு உச்சம் பெற்றார் தனுஷ்.

கூட்டுழைப்பை நம்பும் ஆளுமை

அதே நேரத்தில் இந்தக் கூட்டணி வெற்றியை அறுவடை செய்யும் நோக்கில் கமர்ஷியல் படங்களாக எடுத்துத் தள்ளாமல் நின்று நிதானித்த வெற்றிமாறனின் படைப்பாளுமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரின் 20 ஆண்டு கால சினிமா பயணத்தில் இயக்குநராக 5 படங்களை மட்டுமே உருவாக்கியுள்ளார். ஆனால், அந்த ஒவ்வொரு படத்தையும் மிக நேர்மையாகவும் உண்மையாகவும் அணுகியுள்ளார். அதனால்தான் வெற்றியின் எந்தப் படைப்பும் சறுக்கலைச் சந்திக்கவே இல்லை.

சீஸன் சினிமா, ட்ரெண்ட் சினிமா, ஃபார்முலா சினிமா என்று எதன் பின்னாலும் செல்லாமல் வெற்றிமாறன் தன் படைப்புக்கு நியாயம் செய்கிறார். சூழலைத் தனதாக்கிக்கொண்டால் தேவையான கலைஞர்களைப் பயன் படுத்திக் கொண்டால், காலத்தால் அழிக்க முடியாத ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதை நிரூபித்துள்ளார். இத்தனைக்கும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் உருவாக்க நினைத்த முதல் படம் ‘தேசிய நெடுஞ்சாலை 47'. அந்தப் படம் தொடங்கப்பட்டு பட்ஜெட் பிரச்சினையால் மூன்று முறை தள்ளிப்போய் இறுதியில் கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகே ‘பொல்லாதவன்' உருவானது. ‘தேசிய நெடுஞ்சாலை 47' படம்தான் பின்னாளில் வெற்றிமாறனின் அசோசியேட் மணிமாறன் இயக்கத்தில் ‘உதயம் என்எச்4' ஆனது. மணிமாறன் வெற்றியின் பள்ளிக்கால நண்பர். ‘பொல்லாதவ’னில் வெற்றியுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கிய மணியின் சினிமா பயணம் ‘அசுரன்' வரைக்கும் நீள்கிறது. அசுரனில் திரைக்கதை பங்களிப்பு செய்த மணி, இரண்டாம் யூனிட் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

நல்ல படத்தை உருவாக்குவதற்கு கதாநாயகன் மட்டும் போதுமானவரல்ல, துணை இயக்குநர்கள் முதற்கொண்டு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் அளப்பரியது என்பதை புரிந்து வைத்திருந்தார் வெற்றி மாறன். அதனால்தான் அவர் படைப்புக்கு அத்தனை கலைஞர்களும் உயிரோட்டம் கொடுத்தனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் தோழமை

தனுஷ் நடித்த ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் அதனைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். வெற்றியின் உதவியாளர் தாணுகுமார் இயக்கிய ‘பொறியாளன்', மணிமாறன் இயக்கிய ‘உதயம் என்எச்4', ‘புகழ்' ‘ப.பாண்டி' என தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியின் நிழலாக வலம் வருகிறார். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி', ‘தங்கமகன்' ஆகிய படங்களின் இயக்குநர் வேல்ராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘வடசென்னை' தவிர மற்ற படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், அசுரனில் தனிப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். மறைந்த எடிட்டர் கிஷோர் இக்கூட்டணி மூலம் இரு தேசிய விருதுகளை ‘ஆடுகளம்', ‘விசாரணை' படங்களுக்காக வென்றதும் கவனிக்கத்தக்கது.

அதேபோல, கலை இயக்குநர் ஜாக்கி ‘பொல்லாதவன்' தவிர மற்ற 4 படங்களிலும் தன் திறமையை நிறுவினார். 'வடசென்னை'யில் அவ்வளவு உழைப்பைக் கொடுத்த கலை இயக்குநர் ஜாக்கிக்குத் தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தனுஷ் பகிரங்கமாகக் கூறியதன் மூலம் ஜாக்கியின் அர்ப்பணிப்பை உணரலாம்.

பொதுவாக, இயக்குநரின் பலமான கூட்டணி என்றாலே இயக்குநர்- பாடலாசிரியர்- ஒளிப்பதிவாளர் என்ற மூவரையும் தான் வழக்கமாகக் குறிப்பிடுவர். பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா காலத்தில் அப்படித்தான் இருந்தது. குறும்பட இயக்குநர்கள் வெள்ளித்திரையில் அணிவகுத்த பிறகு, வழக்கம்போல் இயக்குநர்- நடிகர் கூட்டணி மட்டுமே பெரிதும் பேசப்பட்டது.

ஆனால், வெற்றிமாறன் வருகைக்குப் பிறகு இயக்குநர்- நடிகர்- இசையமைப்பாளர்- ஒளிப்பதிவாளர்- எடிட்டர்- கலை இயக்குநர்- துணை நடிகர்கள் என பலமான கூட்டணியாக அனைவரையும் வசீகரித்ததை அவதானிக்கலாம். தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி என்றால் இனிவரும் காலங்களில் எதிர்பார்ப்பு எகிறும். இலக்குகள் பெரிதா கும். ஆனால், அந்தச் சவால்களையும் எளிதில் சந்திப்பார்கள் என்று நம்புவோம்.

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்