சினிமா எடுத்துப் பார் 17- கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்!

By எஸ்.பி.முத்துராமன்

‘அழகான பெண்ணை எல்லோ ருக்கும் பிடிக்கும். கருப்பு நிறப் பெண்ணை எல்லோருக் கும் பிடிக்குமா’ என்று சென்ற வாரம் முடித்திருந்தோம். நம் ஊரில் கருப் பாக இருப்பவர்களை ஏதோ பாவம் செய்தவர்களைப் போல பார்க்கிறார்கள். அந்த மாதிரி ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுத்ததுதான் ஏவி.எம்மின் ‘நானும் ஒரு பெண்’ திரைப்படம்.

‘கருப்பாக பிறந்தது அந்தப் பெண்ணின் குற்றமா’ என்கிற கோணத்தில் அந்தப் பெண் வருத்தத்தை சுமக்கிற பின்னணியில் கதை நகரும். இயக்கம் ஏ.சி.திருலோகசந்தர். ‘நானும் ஒரு பெண்’ படத்துக்கு எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடிக்க ஒப்பந்தமானார்கள்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் இருந்து வந்தவர். அவரது நடிப்பு, வசன உச்சரிப்புப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நாயகி விஜயகுமாரி, கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக வெளிப்படுத்தும் நடிகை. இவர்களோடு எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, நாகேஷ், சி.கே.சரஸ்வதி, அறிமுகம் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா என்று திறமையான நடிகர், நடிகைகள் இணைந்தனர். அந்தக் கதையும், கதாபாத்திரங்களும் சிறந்த முறையில் அமைந்ததால் மிகப் பெரிய வெற்றி பெற்று, மத்திய அரசின் விருதும் கிடைத்தது.

எஸ்.வி.ரங்காராவ் ஒரு ஜமீன்தார். இறந்து போன மனைவியின் புகைப் படத்துக்கு முன் நின்று ஒவ்வொரு விஷ யத்தையும் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்யத் தொடங்குவார். அந்தக் காட்சிக்காக ஓர் அழகான பெண்ணை வைத்து போட்டோ எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.. ‘அவ்வை யார்’ படத்தின் மூலம் புகழ்பெற்றிருந்த கலை இயக்குநர் ஏ.கே.சேகரை அணுகி, ‘இப்படி ஒரு புகைப்படம் வேண்டும்’ என்று கதையின் சூழலை விளக்கினார் திருலோகசந்தர்.

சேகர் என்னிடம் ‘நம்ம குரூப் டான்ஸர்களில் அழகான ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன்’ என் றார். ‘குரூப்ல நிறையப் பேர் இருப் பாங்களே, கண்டுபிடிப்பது சிரமாச்சே’ என்றேன். ‘ஜெமினியில் ஆடும் குரூப் டான்ஸர் லிஸ்ட் பார்த்து அவர்களை கூட்டிட்டு வரச் சொல்லுங்க. நான் கண்டு பிடித்துவிடுவேன்’ என்றார். எல்லோரை யும் வரச் சொன்னோம்.

பலரையும் பார்த்து ‘இவர் இல்லை, இவர் இல்லை’ என்று கூறிக்கொண்டே வந்தார். கடைசி யில் ‘இந்தப் பெண்தான்’ என்று அடை யாளம் காட்டினார். தேவதையைப் போல் அப்படி ஒரு லட்சணமான பெண். அந்தப் பெண் பெயர் ராஜேஷ் வரி. அவரை வைத்து சேகர் சார் முன் னிலையில் பலவிதமாக போட்டோ எடுத்தோம். அந்தப் பெண் புகைப் படத்தில் வாழும் மனைவியானார்.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் எஸ்.எஸ்.ஆர் பெண் பார்க்க வரும்போது புஷ்பலதாவை காட்டிவிட்டு, மணமேடை யில் விஜயகுமாரியை அமர வைப்பது போல காட்சி. பெண் மாறிப் போனதை எம்.ஆர்.ராதா மனைவி சி.கே.சரஸ்வதி கண்டுபிடித்துவிடுவார். ‘கண்ணுல மண்ணை அள்ளிப்போட்டு நம்மள ஏமாத்த பார்க்குறாங்களே’ என்று கோபத்தோடு சி.கே.சரஸ்வதி வசனம் பேச வேண்டும். அந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர் அவர் அருகில் சென்று, ‘சி.கே.எஸ் டயலாக்கை மாத்தி பேசிடா தீங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

கடைசி நேரத்தில் சொன்னாலே ஆர்டிஸ் டுக்கு ஒருவித படபடப்பு ஒட்டிக்கொள் ளும். இயக்குநர் ஸ்டார்ட் சொன்னதும் சி.கே. சரஸ்வதி, ‘மண்ணுல கண்ணை அள்ளிப் போட்டு நம்மள ஏமாத்த பார்க்கு றாங்களே’ என்று சத்தம் போட்டார். சுற்றி நின்றுகொண்டிருந்த யூனிட்டே சிரித்தது. ‘என்ன ஆச்சு’ என்று பரபரப் பாக சரஸ்வதி கேட்டதும், அவர் பேசிய வசனத்தை போட்டுக் காண்பித்தோம். ‘ஐய்யோ… ஐய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்டு ‘எல்லாம் ராஜு (எஸ்.எஸ்.ஆர்) செய்த வேலை’ என்று கூறினார். மீண்டும் சரியாக எடுத்து ஓ.கே செய்தோம்.

புகுந்தவீட்டில் கருப்பாக இருக்கும் விஜயகுமாரியை ஜமீன்தாருக்குப் பிடிக்காது. ஒரு காட்சியில் மாமியாரின் மெட்டியை விஜயகுமாரி தனது காலில் போட்டுக்கொள்வதைப் பார்க்கிற ஜமீன்தார் திட்டுவார். மெட்டியை கழற்றி ஜமீன்தாரின் அறை வாசலில் வைத்துவிட்டு அழுதபடி ஓடும் விஜயகுமாரி, தோட்டத்தில் இருக்கும் கண்ணன், ராதை சிலையிடம் போய், ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ என்ற பாடலை பாடுவார்.

எம்.எஸ்.வி இசையில், கருப்பு நிறத்தில் இருக்கும் விஜயகுமாரியுடன் கண்ணனை ஒப்பிட்டு கண்ணதாசன் எழுதிய பாடல் அது. விஜயகுமாரி கண் களங்கிப் பாடுவார். இந்த உணர்ச்சிபூர்வமான காட்சிக்கு பின்னணிப் பாடிய பி.சுசீலா பாட வந்ததும், கதையையும், காட்சியையும் சொல்லி பாட்டைக் கொடுத்து எப்படி பாட வேண்டுமென்று எம்.எஸ்.விஸ்வ நாதன் பாடிக் காட்டுவார். சுசீலா புரிந்து கொண்டு உணர்ச்சியோடு பாடினார். அதனால்தான் அந்தக் காட்சி அன்றும், இன்றும் மனதில் நிற்கிறது. இதற்கெல் லாம் காரணம், இதன் படைப்பாளி இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன்தான்!

இந்த வார கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த இசை மேதை இயற்கை எய்திவிட்ட செய்தி வந்து என்னை கண்ணீர் மல்க வைத்தது. என்னை மட்டுமா? இசை உலகத்தையே கலங்க வைத்துவிட்டது.

50 ஆண்டு காலம் தமிழ் திரை இசை உலகத்தை ஆட்சி செய்தவர். இசையில் பல புதுமைகளை புகுத்தியவர். இந்தப் பாடலுக்கு இதுதான் ராகம் என்று தீர் மானித்து, எந்த இடத்தில் எந்த இசைக் கருவி முக்கியம்? எந்த இசையோடு, எந்த இசையை இணைப்பது என்பது அவ ருக்கு கை வந்தக் கலை. பாடல் வரிகள் இசையால் பாதிக்காமல் பார்த்துக் கொண்டவர். தயாரிப்பாளர்கள், இயக்கு நர்களுக்காக மெட்டுகளை போட்டுக் கொண்டே இருந்தவர்.

இவர் இசைக் குழுவை ஒரு குடும்பமாகவே கொண்டாடியவர். இவர் குழுவில் பணியாற்றியவர்கள் இசை ஞானி இளையராஜாவும், ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானும் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். கவியரசருக்கு சிலை வைத்தவர் இந்த இசை அரசர். கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளையைத் தொடங்கி செயலாளர் ஏவி.எம்.சரவணன் சாருடன் சேர்ந்து 12 ஆண்டுகளாக நன்றியோடு நடத்தியவர், நட்புக்கு இலக்கணமானவர்.

கி.மு; கி.பி என்பதைப் போல் தமிழ் திரை இசையை பொறுத்தவரை விஸ்வநாதனுக்கு முன், விஸ்வநாத னுக்கு பின் என்றுதான் வரலாறு சுற்றிக் காட்டும். அவர் மூச்சுவிட போராடிக் கொண்டிருந்தபோது அவரைப் போய் பார்த்தேன். ‘முத்துராமண்ணா’ என்று என்னைப் பார்த்ததும் பாசத்தோடும் புன்னகையோடும் எழுந்திருக்க முயன் றார்.

அவர் எனக்கு மூத்தவர். எப்போ தும் என்னை ‘அண்ணே’ என்றுதான் அழைப்பார். அதற்கு காரணம் அவர் இயக்குநர்களுக்குத் தந்த மரியாதை. ‘நீங்கள் மீண்டு வந்து மீண்டும் பாட்டமைப்பீர்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். அந்தச் சந்திப்பே கடைசி சந்திப்பாகும் என்று நினைக்கவில்லை. அவர் நம்மை விட்டுப் போகவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். அவர் பாடலையும், இசையையும் நினைத்துக்கொள்ளுங்கள். அவர் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும்.

- இன்னும் படம் பார்ப்போம்…

முந்தைய அத்தியாயம்:>சினிமா எடுத்துப் பார் 16- மனிதநேயமுள்ள மங்கை: மனோரமா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்