பாலுமகேந்திராவிடம் கற்றுக்கொண்ட பாடம்! - வெற்றிமாறன் பேட்டி

By செய்திப்பிரிவு

வசூல், விமர்சனம், விருது ஆகிய மூன்று தளங்களிலும் கவனம்பெறும் படங்களைத் தந்துவரும் இயக்குநராகத் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்திருப்பவர் வெற்றிமாறன். ‘வடசென்னை’ படத்துக்குப்பின் அதன் தொடர்ச்சியை, வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குமுன் ‘அசுரன்’ படத்தை முடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வுக்கு வந்திருந்த வெற்றிமாறனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

‘வடசென்னை’ படத்தின் தொடர்ச்சியைத் தள்ளி வைக்கக் காரணம் உண்டா?

பெரிதாக எதுவுமில்லை. ‘வடசென்னை 2’ படத்தை ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு தொடரலாம், அதற்குமுன் வேறு ஒரு கதையில் நடிப்போம் என்று தனுஷ் விரும்பினார். அதேநேரம், ‘வெக்கை’ நாவலைத் திரைப்படமாக்குவது என்று வாங்கி வைத்திருந்த உரிமை என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அதைப் பற்றியும் தனுஷ் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணுவிடம் வேறு கதை கூறியிருந்தபோதும் ‘நாவலை அடியொற்றி நீங்கள் கூறிய கதையே நன்றாக இருக்கிறது. அதையே எடுத்துவிடுவோம் என்றார். இப்படித்தான் ‘அசுரன்’ உருவானது. ஒரு படம் தானாக நிகழும் ஒன்று. எவ்வளவு முயன்றாலும் நாம் ஒன்றை நிகழ்த்த முடியாது என்று நம்புகிறேன்.

‘வடசென்னை’ படம் தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. தேசிய விருது, சர்வதேசப் படவிழா என எந்த விருதாக இருந்தாலும் ஜூரிக்களின் இறுதி முடிவுகள் வெளியான பின்னர் அதைப் பற்றி விவாதிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. ஒரு படம் வெளிவரும்போது அதைப் பார்க்காமல் பத்து வருடம் கழித்துப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறதே என்று கொண்டாடுவதும் நாம்தான்.

‘அசுரன்’ என்ற தலைப்பும் தனுஷின் தோற்றங்களும் இது கால கட்டங்களின் கதை என்று தெரிகிறது. தனுஷுக்கு இதில் இரட்டை வேடமா?

இல்லை. தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் இரண்டு கால கட்டங்களுக்குரிய தோற்றங்களில் வருகிறார். முதலில் மகன் கதாபாத்திரத்திலும் தனுஷ் நடிப்பதாகத்தான் இருந்தது. பிறகு மாற்றிவிட்டோம். மகன் கதாபாத்திரத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தம்பி டி.ஜே. நடித்திருக்கிறார். எல்லா மகன்களுக்கும் தந்தையுடன் ஒரு மறக்க முடியாத பயணம் நிச்சயமாக இருக்கும். ஒரு அப்பாவும் மகனும் மேற்கொள்ளும் அப்படியொரு மறக்க முடியாத பயணம்தான் இந்தப் படம்.

அதாவது அப்பா தன் மகனைக் கூட்டிக்கொண்டு செல்லும் ஒரு பயணத்திலிருந்து கதை விரிந்து செல்லும். அப்பா மகன் மேற்கொள்ளும் பயணம் 80-களின் நடுப்பகுதியில் நடப்பதாகவும் அப்பாவின் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை பிளாஷ் பேக் ஆக 60-களில் நடப்பதுபோலவும் கதையில் காலத்தை அமைத்திருக்கிறோம். தனுஷ் போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஒரு நடிகர் இருந்ததால்தான் இரு காலகட்டங்களுக்குரிய தோற்றமும், ‘அசுரன்’ என்ற தலைப்பை நியாயப்படுத்தும் நடிப்பும் சாத்தியமானது.

துணைக் கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் தருபவர் என்ற முறையில் மற்ற நடிகர்களின் பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்...

சிவசாமி கதாபாத்திரத்தின் மற்றொரு மகனாக நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்திருக்கிறார். அவராக இருக்கட்டும், இந்தப் படத்தின் மூலம் என் விருப்பத்தை ஏற்று நடிக்க வந்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அதேபோல மஞ்சு வாரியாராக இருக்கட்டும் ஒவ்வொருவரும் அசுரத்தனமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஒரு நாவலைத் திரைப்படத்துக்காகத் தழுவும்போது கொள்ளும் சவால்கள் என்ன?

பாலுமகேந்திரா சாரிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமே அதுதான். ஒரு நாவலின் உன்னதம், அதில் விரவிக் கிடக்கும் நயம், மொழி உள்ளிட்ட உத்திகளை சினிமா எனும் வடிவத்துக்கு மாற்றும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள முடியாது. நாவலில் இருக்கும் நிறைய விஷங்களைத் தவிர்க்க வேண்டி இருக்கும். நிறைய விஷயங்களைச் சேர்க்க வேண்டியும் இருக்கும்.

காரணம் நாவல் எனும் வடிவமும் சினிமா எனும் வடிவமும் வெவ்வேறான அணுகுமுறையைக் கொண்டவை. ‘வெக்கை’ நாவலை வாசித்தவர்களின் எதிர்பார்ப்பை ‘அசுரன்’ சினிமாவால் பூர்த்திசெய்ய முடியாது. ஆனால், நாவலை வாசிக்காமல் ‘அசுரனை’ காண்பவர்களுக்கு அது தரும் அனுபவம் வேறாக இருக்கும். திரைக்குத் தேவைப்படுவது நாவலின் உட்சரடு மட்டும்தான். அதன் நேர்கோட்டைக் கண்டறிந்து திரைக்கதையில் கையாள்வதே பெரிய சவால் என்று நினைக்கிறேன்.

- ஜெயந்தன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்