கோடம்பாக்கம் சந்திப்பு: வாழ்க்கையுடன் விளையாட்டு!

By செய்திப்பிரிவு

எண்பத்து ஏழு வயது சாருஹாசனை ‘தாதா-87’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் அறிமுக இயக்குநர் விஜய்ஜி. தற்போது அம்சவர்த்தன் கதாநாயகனாக நடித்துவரும் ‘பீட்ரூ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் இயக்க இருக்கும் மூன்றாம் படத்துக்கு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார். காமெடி திரில்லர் ரகப் படமாக உருவாகும் இதில், பிக்பாஸ் சீசன் 2-ல் இடம்பெற்ற ஐஸ்வர்யா தத்தாவைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறார். பப்ஜி போன்ற விளையாட்டு ஒன்றைக் கதைக் களமாக வைத்து, வாழ்க்கையுடன் விளையாடும் மெய்நிகர் உலகின் ஆபத்தைப் பேச வருகிறதாம் இந்தப் படம்.

குரலும் நடிப்பும்

சியான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கும் படம் ‘ஆதித்யா வர்மா’. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மறு ஆக்கமாக உருவாகி இருக்கிறது. இதில் துருவ் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்திருக்கிறார். இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவரும் இந்தப் படத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதனே இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் காதலின் வலியை உணர்த்தும் விதமாக விவேக் எழுதியிருக்கும் ‘எதற்கடி?’ என்ற பாடலை துருவ் விக்ரம் பாடியிருக்கிறார். சமீபத்தில் இது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மிகக் கடினமான மெட்டில் அமைந்த இந்தப் பாடலைப் பாடியிருப்பதன் மூலம் நடிகர், பாடகர் என்ற இரு பரிமாணங்களுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் துருவ் விக்ரம்.

நன்றிக்காக சந்தானம்

இயக்குநர்கள் எம்.ராஜேஷ், ஆர்.கண்ணன் ஆகிய இருவரது படங்களின் மூலமே நடிகர் சந்தானம் தனது சினிமா பயணத்தை வலுவாக்கிக்கொண்டார். அந்த நன்றியை மறக்காமல் தற்போது இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘பூமராங்' படத்தைத் தொடர்ந்து அதர்வா இரண்டாம் முறையாக கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்து சந்தானம் நடிக்கும் படத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.

இந்தக் காலத்தின் தண்டகன்!

ராமாயணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களில் ஒன்று 'தண்டகன்'. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைத்து கே.மகேந்திரன் எழுதி, இயக்கிவரும் படம் வேகமாக வளர்ந்துவருகிறது. “தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும், அதன் மன இயல்பு எத்தகையது என்பதை இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதர்களிடம் பொருத்தியிருக்கிறேன்” என்று கூறுகிறார் இயக்குநர்.

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தயாரித்துவரும் இந்தப் படத்தில், அபிஷேக் நாயகனாக நடித்துவருகிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரண்டு கதாநாயகிகள். ‘ராட்சசன்’ படத்தில் மிரட்டிய 'நான்' சரவணன் வில்லனாக வருகிறார்.

விருது கொடுக்கும் வாய்ப்பு!

நடிகையர் திலகம் சாவித்திரியாகச் சிறப்பான நடிப்பைத் தந்த கீர்த்தி சுரேஷுக்குத் தேசிய விருது கிடைத்தது. இதனால் தற்போது இந்திப் படவுலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். 1952 முதல் 62 வரையிலான காலகட்டத்தில் நடந்த கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்தியில் உருவாக இருக்கும் படம் ‘மைதான்’.

அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘பதாய்ஹோ’ படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கும் படம். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்