தந்தையின் கடனை அடைத்த மகள்!

By கே.கே.மகேஷ்

டி.ஆர்.மகாலிங்கம் 91-வது பிறந்த தினம்: ஜூன் 16


‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.

‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.

14 வயதில் சினிமா

1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.

8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.

இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 14 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.

முதல் வெற்றி

மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.

‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.

அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.

இசை வாரிசு

ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.

எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.

சினிமாவைத் தூக்கியெறிந்தார்!

புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.

மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.

அரசியலில் சிக்காதவர்

டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.

இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.

நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்