எண்ணங்கள்: விமர்சனங்களும் வெற்றிகளும்

By கோ.தனஞ்ஜெயன்

தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்நாட்டில் இல்லாத காலம் வரை, ஒரு திரைப்படத்தைப் பார்த்தவர்கள், அப்படத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நிறைய வாய்ப்புகள் இல்லை. அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் என்ற மட்டத்திலேயே அபிப்பிராயங்கள் நின்றுவிடும். அந்தக் காலகட்டத்தில், ஒரு படத்தைப் பற்றிய சாதகமான விமர்சனங்கள் தினசரி பத்திரிகைகளிலும், வார இதழ்களிலும் வெளிவரும். பின்னர், அப்படத்தின் சிறப்பைப் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடையும், இதனால் படம் வெளியான இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின்னும், வரவேற்பில் முன்னேற்றம் ஏற்பட்டு, பல படங்கள் வசூல் வெற்றியைக் கண்டுள்ளன. முள்ளும் மலரும் (1978), அவள் அப்படித்தான் (1978), ஒரு தலை ராகம் (1980), சிறை (1984), பாரதி கண்ணம்மா (1987), சேது (1999), அழகி (2002) என இதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.

பத்திரிகை விமர்சனங்கள் மூலமாகத்தான் ஒரு படத்தைப் பற்றிய தெளிவான முடிவுக்கு மக்கள் வர முடியும் என்ற நிலைமை இருந்தவரை அத்தகைய விமர்சனங்களால் ஒரு படம் வசூலில் வெற்றியைக் காண முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

கைபேசிகளும் வலைப்பூக்களும்

கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நிலை வெகுவாக மாறிவிட்டது. ஒரு படத்திற்கு முதல் விமர்சனம் பத்திரிகைகளில்தான் வெளியாகும் என்ற நிலை மாறி, படம் ரிலீசான சில மணி நேரங்களில் வலைதளங்கள் மூலமாக முழு விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிடுகின்றன. வெளிநாட்டில் முதலில் வெளியாகும் படங்களின் விமர்சனங்கள், தமிழ்நாட்டில் படம் வெளியாகும் நாளின் விடிகாலையிலேயே தமிழ் இணைய வாசகர்களின் பார்வைக்குக் கிடைத்து விடுகின்றன.

கைபேசி, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., யூட்யூப், ஃபேஸ் புக், டுவிட்டர் மற்றும் வலைப்பூக்கள் (பிளாக்) என உடனடியாகச் செய்திகள் சொல்லும் வசதி வந்த பின் இன்று அவ்வசதி உள்ள அனைவருமே விமர்சகர்கள் ஆகிவிட்டனர். கைபேசி உபயோகிக்காத ஒருவரை இன்று திரையரங்குகளில் பார்க்க முடியாது. அவர்களில் பலர், ஏதோ ஒரு வகையில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை முதல் காட்சி ஆரம்பித்தவுடன் சொல்ல ஆரம்பித்து, இடைவேளையில் கருத்துக்களைப் பரிமாறி, படம் முடிந்தவுடன், அப்படத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

இதனால் ஒரு படம் பற்றியப் பாராட்டுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்து, அப்படத்தை மக்கள் சென்று பார்த்துக் கொண்டாடும் நிலை இன்று இல்லை.

கூடுதல் உதவி மட்டுமே

பத்திரிகைகளில் விமர்சனம் வருவதற்குள் இன்று அனேகப் படங்களின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்பட்டு, வெற்றி விழாகூடக் கொண்டாடப்பட்டு விடுகிறது. வெகுஜன வார இதழ் மற்றும் நாளிதழ் விமர்சனங்கள் இன்று ஒரு கூடுதல் உதவியே தவிர, முக்கியமான உதவி என்று சொல்ல முடியாது. ஒருசில பத்திரிகைகளின் பாராட்டு அல்லது குட்டு ஒரு படத்தின் தலையெழுத்தை மாற்றும் என்ற நிலை மாறி, ஒரு படத்தின் தலையெழுத்து, அனைத்துப் பார்வையாளர்களின் கைக்குச் சென்றுவிட்டது. குறிப்பாக கைபேசிக்கு என்று சொல்லலாம். ஒரு படத்தின் தலையெழுத்து ஜனநாயகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இதைப் பார்க்கலாம்.

2005 வரை, ஒரு மீடியம் பட்ஜெட் படம் 50 முதல் 75 திரையரங்குகளில் வெளியானால் அதிகம் (சிறு பட்ஜெட் படங்கள் 30 முதல் 50 திரையரங்கம் வரை). அதே படம் இன்று குறைந்தது, 200 முதல் 225 அரங்குகளில் வெளியாகும்போது (சிறு பட்ஜெட் படங்கள் 125 முதல் 150 அரங்குகள் வரை), முதல் வெளியீட்டில் பெரு நகரங்கள் வரை சென்ற தமிழ் சினிமா இன்று, சிறு நகரங்களிலும் வெளியாகிறது. எனவே, சிறு மற்றும் பெரு நகரங்களில் இருக்கும், கைபேசி உபயோகிக்கும் அனைவருமே, முதல் நாளே புதிய படத்தைப் பார்த்து, படம் பற்றியக் கருத்துகளை ஏதோ ஒரு வகையில் பரிமாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு படத்தின் விதி, முதல் நாள் (சில படங்களுக்கு முதல் காட்சி) முடிந்த உடனேயே எழுதப்படுகிறது. இந்தச் சூழ்நிலை ஒரு படத்திற்கு நல்லதா கெட்டதா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

திரைப்பட அறிவின் வளர்ச்சி

தமிழ்நாட்டில், இந்திப் படங்களும், ஹாலிவுட் படங்களும் நேரடியாகவும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய அளவில் வெளியாக ஆரம்பித்த பின், அனேக ரசிகர்களுக்குத் திரைப்படத்தின் தொழில்நுட்பம் அதிக அளவில் புரிந்துள்ளது. இதனுடன், ஒரிஜினல் மற்றும் திருட்டு டி.வி.டி.கள் மூலம், ஹாலிவுட் மற்றும் உலக சினிமாக்கள் இன்று மிக எளிதாகக் கிடைக்கும் நிலையில், உலக சினிமா பற்றிய அறிவு மக்களிடம் அதிகமாகவே வளர்ந்துள்ளது. அதனால்தான், அனேகப் பார்வையாளர்கள், கேமரா ஆங்கிள்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் பற்றியும் நுட்பமான முறையில் வலைதளங்களில் பேசுகிறார்கள்.

பார்வையாளர்களை சினிமா பற்றிய சாதாரண அறிவு உள்ளவர்களாக நினைத்துப் படங்கள் எடுப்பது இனி எடுபடாது. சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பார்வையாளர்களும் இன்று சினிமாவை பற்றிய அறிவுடன் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏதாவது ஒன்று படத்தில் இருக்க வேண்டும். சாதாரணமான படங்களும், ஏதோ பரவாயில்லை எனச் சொல்லப்படும் படங்களும் இனி மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை. சினிமாவை நேசித்து, சினிமா குறித்த அறிவை வளர்த்துக்கொண்டுள்ள பார்வையாளர்கள் படங்களில் எதிர்பார்ப்பது, புத்திசாலித்தனமான, புதுமையான திரைக்கதைகள்; பொழுதுபோக்கு அம்சங்கள். அவர்களைச் சாதாரணப் படங்களால் திருப்திபடுத்த முடியாது. இந்தக் காரணத்தால்தான், கடந்த நான்கு மாதங்களில், 70 படங்களுக்கு மேல் வெளியானாலும், ஒருசில படங்களே வசூல் வெற்றி அடைந்துள்ளன.

தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அத்தகைய பார்வையாளர்கள்தான் சவாலாக உள்ளனர். “இவர்கள் என்ன பெருசா எடுத்து விட்டிருப்பார்கள் / புதுசா என்ன சொல்லப் போகிறார்கள் ” என சலிப்புடன் வரும் பார்வையாளர்களை ஒரு படம் ஆச்சரியப்படுத்தும்போது, நிமிர்ந்து உட்கார்ந்து படத்தைப் பார்க்க ஆரம்பித்து, அப்படத்தை நிமிர்ந்து நிற்க வைக்கிறார்கள். படத்தைப் பற்றிய சாதகமான விமர்சனங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு, வெற்றிபெறச் செய்கிறார்கள். அதே சமயம் ஒரு படம் அவர்களை “ஏற்கனவே பார்த்தது போலவே உள்ளது / புதுசா ஒண்ணும் இல்லை / போர் அடிக்க வைத்து விட்டது மொக்கை / கருத்து சொல்ல வந்துவிட்டார்கள் / முதல் பாதி நன்றாக இருந்து, இரண்டாம் பாதியில் சொதப்பல்” என ஏதோ ஒரு வகையில், திருப்தி அளிக்காதபோது, அப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து, லட்சக்கணக்கான மக்களைச் சேர்ந்து, அவர்கள், அப்படத்தை, வலைதளத்திலோ அல்லது டி.வி.டி.கள் மூலமாகவோ பார்க்க முடிவு செய்யவைத்து விடுகின்றன. இதனால், படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை உடனே குறைந்துவிடுகிறது.

ஆக, ஒரு படத்தின் வெற்றி இனி பார்வையாளர்களையே அதிகம் நம்பியுள்ளது என்று சொல்லலாம். அவர்கள் முதல் காட்சி முடிந்த பின் வெற்றி என்று சொன்னால் வெற்றி; தோல்வி என்றால் தோல்வி. பத்திரிகை விமர்சனங்களோ, பாராட்டுகளோ, ஒரு படத்தைத் தனியாகத் தூக்கி நிறுத்தி வெற்றியடையச் செய்ய முடியாது. துணை மட்டுமே செய்ய முடியும். அதுவே இன்றைய நிதர்சனம்.

தொடர்புக்கு: dhananjayang@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

வணிகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்